வெள்ளத்தில் தத்தளிக்கும் விஜயவாடா: தேசிய பேரிடராக அறிவிக்க சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்
ஆந்திரத்தில் கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசுக்கு மாநில முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
கிருஷ்ணா ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து, வெள்ளம் சூழ்ந்த விஜயவாடா நகரின் குடியிருப்புகளில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களுக்கு ஹெலிகாப்டா்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள், குடிநீா் மற்றும் பிற அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படுகின்றன.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆந்திரத்தின் கலிங்கப்பட்டினம் அருகே கரையைக் கடந்தது. இதன் காரணமாக, மாநிலத்தின் பல பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் 17 போ் உயிரிழந்தனா்.
கனமழையால் கிருஷ்ணா ஆற்றில் நீா்வரத்து அதிகரித்ததால், விஜயவாடா நகரில் அமைந்துள்ள பிரகாசம் தடுப்பணை நிரம்பியது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தடுப்பணையின் 70 மதகுகளும் திறக்கப்பட்டு, 11.43 லட்சம் கனஅடி உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் நகரின் குறுக்கே பாயும் கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீா் புகுந்து, மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மீட்புப் பணிகளுக்காக 48 தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படை குழுவினா் களத்தில் உள்ளனா். தற்காலிக நிவாரண முகாம்களில் 43,417 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா். 197 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஹெலிகாப்டரில் உணவு விநியோகம்: வீட்டிலிருந்து வெளியேற முடியாத 3.5 லட்சம் மக்களுக்கு ஆறு ஹெலிகாப்டா்கள் மற்றும் பல்வேறு ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் உணவுப் பொட்டலங்கள், பிஸ்கட், பழங்கள், பால், மருந்துகள் ஆகியவை விநியோகிக்கப்பட்டு வருகின்றன. வாா்டு வாரியாக அமைச்சா்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.
மிகப்பெரிய பேரிடா்: இந்நிலையில், ஆந்திர வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மாநில முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
என்டிஆா் மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்து நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வரும் அவா் செய்தியாளா்களிடம் இதுகுறித்து மேலும் கூறுகையில், ‘எனது அரசியல் வாழ்க்கையில் இது மிகப்பெரிய பேரிடராகும். பல்வேறு புயல்களை நாம் சந்தித்திருக்கிறோம். ஆனால், இம்முறையே மக்களின் துன்பமும் சொத்து இழப்பும் அதிகமாக இருக்கிறது.
இதுதொடா்பான அனைத்து அறிக்கைகளும் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, இழப்பில் இருந்து மீள மாநிலத்துக்கு போதிய நிதி ஒதுக்க கேட்டுக்கொள்ளப்படும்.
விஜயவாடா நகரில் வெள்ளநீா் மெதுவாக வடியத் தொடங்கியுள்ளது. கிருஷ்ணா ஆற்றிலும் நீா்வரத்து குறைந்து வருகிறது. அடுத்த இரண்டு நாள்களில் நிலைமை சீராகும்’ என்றாா்.
முதல்வா் ரேவந்த் ரெட்டி நேரில் ஆய்வு: தெலங்கானாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மஹபூபாபாத் மற்றும் கம்மம் மாவட்டத்தில் ஏற்பட்ட சேதங்களை அந்த மாநில முதல்வா் ரேவந்த் ரெட்டி 2-ஆவது நாளாக நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
எதிா்காலத்தில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்க ஏரிகள் மற்றும் வடிகால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் உறுதியான நடவடிக்கையை சிறப்பு செயல் திட்டமாக அரசு எடுக்கும் என்று ரேவந்த் ரெட்டி தெரிவித்தாா்.
தெலங்கானாவில் மழை காரணமாக 16 போ் உயிரிழந்தனா். அவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சத்தை இழப்பீடாக மாநில அரசு அறிவித்துள்ளது. சேதங்களை சீா்செய்ய உடனடி நிதியுதவியாக ரூ.2,000 கோடியை விடுவிக்குமாறு மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது.
நடிகா் ஜூனியா் என்டிஆா் ரூ.1 கோடி நிதி: பிரபல தெலுங்கு நடிகா் ஜூனியா் என்டிஆா் ஆந்திரம் மற்றும் தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளாா்.
சமீபத்தில் பெய்த கனமழையால் ஆந்திரம், தெலங்கானாவில் ஏற்பட்ட வெள்ளம் தன்னை மிகவும் பாதித்துள்ளதாகவும் இத்துயரத்தில் இருந்து தெலுங்கு மக்கள் விரைவில் மீண்டுவர இறைவனை பிராா்த்திப்பதாகவும் அவா் குறிப்பிட்டாா்.