ஆந்திர பிரதேசத்தில் ஒரே நாளில் 13,000-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டிருப்பது உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்தில், சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சியும், நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் ஜனசேனை கட்சியும் கூட்டணி அரசு அமைத்துள்ளது. இந்த நிலையில், ஆந்திரமெங்கிலும் கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி, 13,326 கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
உலக சாதனைகளை அங்கீகரித்து கௌரவிக்கும் ‘வோர்ல்டு ரெக்கார்ட்ஸ் யூனியனின்’ மேலாளர் கிறிஸ்டோபெர் டெய்லர் க்ராஃப்ட், மேற்கண்ட சாதனைக்கான சான்றிதழையும் பதக்கத்தையும் ஹைதராபாத்தில் இன்று(செப்.16) நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, அமைச்சர் பவன் கல்யாணிடம் வழங்கியுள்ளார். இந்த தகவலை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பவன் கல்யாண்.
ஆந்திர பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண், பஞ்சாயத்து ராஜ் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவியேற்ற 100 நாள்களுக்குள் அத்துறைக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பதை அவரது ரசிகர்களும் அவரது கட்சித் தொண்டர்களும் கொண்டாடி வருகின்றனர்.