பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில், வழக்கமாக செல்லும் முடி திருத்தும் கடைக்குச் சென்ற இளைஞருக்கு, வழக்கமாக செய்யும் தலை மசாஜ்.. உயிருக்கே வினையாகிவிட்டது.
ராம்குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), கர்நாடக மாநிலம் பல்லாரியைச் சேர்ந்தவர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். முடி திருத்தும் கடையில், முறையான பயிற்சி இல்லாத நபர் அளித்த மசாஜின்போது, திடீரென கழுத்தை திருப்பியதில், அவரது நரம்பு கிழிந்து, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மசாஜ் செய்தபிறகு, அவரது கழுத்தில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் சரியாகிவிடும் என்றுதான் நினைத்தார். வீட்டுக்கும் சென்றார். ஆனால், வீட்டுக்குச் சென்று ஒரு சில மணி நேரங்களில், அவரால் பேச முடியவில்லை, அவரது இடதுபாக்க உடல் பாகங்கள் அசைவற்று போனது.
இதனால், மருத்துவமனைக்கு விரைந்த ராம்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு பக்கவாதம் பாதித்திருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். காரணம், அவரது கழுத்தை மசாஜ் செய்த போது திடிரென திருப்பியதில், கழுத்து நரம்பு கிழிந்து, மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
இது குறித்து பேசிய மருத்துவர் ஸ்ரீகாந்த சுவாமி, நரம்பியல் துறை மருத்துவர், ராம் குமாரை பரிசோதித்துவிட்டு, இவருக்கு இயற்கையான பக்கவாத பாதிப்பைப் போல் அல்லாமல், ஒருவித்தியாசமான பக்கவாதம் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார். கழுத்தை திருப்பியதால், நரம்பு கிழிந்திருக்கிறது. இதனால், நரம்பு வழியாக மூளைக்குச் செல்லும் ரத்தம் கசிந்து, சரியான அளவில் ரத்தம் மூளைக்குச் செல்லாமல் செயற்கையான முறையில் ஒரு பக்கவாதம் ஏற்பட்டிருக்கிறது என்றார்.
தற்போது, அவருக்கு ரத்தத்தை நீர்க்கச் செய்யும் மருந்துகள் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இதனால், அவரது நிலைமை மேலும் மோசமடையாமல் தடுக்கப்படும் என்றும், தொடர்ந்து இரண்டு மாதங்கள் சிகிச்சை எடுத்தால்தான் பூரண குணமடைய முடியும் என்கிறார்.
இதையடுத்து, திடீரென கழுத்தை வேகமாக திருப்புதல் அல்லது கழுத்தசைவுகள், இதுபோன்ற மோசமான நிலையை ஏற்படுத்தலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். வழக்கமாகவே இதுபோன்ற மசாஜ் அல்லது பயிற்சிகளை யாரும் செய்ய வேண்டாம் என்றும், இது எந்தவகையிலும் மனிதர்களுக்கு நல்லதல்ல என்றும் கூறுகிறார்கள்.