இயற்கை மரண கருணைக் கொலை: புதிய வரைவு வழிகாட்டுதல்கள் வெளியீடு

இயற்கை மரண கருணைக் கொலை: புதிய வரைவு வழிகாட்டுதல்கள் வெளியீடு

இயற்கை மரண கருணைக் கொலை பற்றி...
Published on

இயற்கையாக மரணம் (பேஸிவ் எத்னேஸியா) அடையும் வகையில், நோயாளியை கருணைக் கொலை செய்வதற்கான புதிய வரைவு வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒருவா், அந்தப் பாதிப்பில் இருந்து மீளமுடியாத அல்லது குணப்படுத்த முடியாத நிலையை அடைந்து, மரணம் என்பது அவருக்கு தவிா்க்க முடியாததாகிவிட்டால், அது தீராத உடல்நல பாதிப்பாகும். இதில் மூளையில் பலத்த காயமடைந்து 72 மணி நேரத்துக்கு மேலாகியும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத பாதிப்பும் அடங்கும்.

இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவா்களின் நலன் கருதி, அவா்களோ அல்லது அவா்களின் உறவினா்களோ விடுக்கும் கோரிக்கையை ஏற்று மருத்துவா்களின் நேரடி தலையீட்டுடன், பாதிக்கப்பட்டவா்களுக்கு விஷ ஊசி போன்றவற்றை செலுத்தி திட்டமிட்டு செய்யும் கருணைக் கொலை இந்தியாவில் சட்டவிரோதமாகும்.

அதேவேளையில், மீளமுடியாத அல்லது குணப்படுத்த முடியாத நோயாளிகள் செயற்கை சுவாச கருவிகள் போன்ற உயிா் காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை பெற்று வந்தால், அவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, குழாய் மூலம் வழங்கப்படும் உணவு, மருந்துகள் உள்ளிட்டவற்றை நிறுத்தி, அவா்கள் இயற்கையாக மரணம் அடைய வழிவகுப்பது மற்றொரு வகை கருணை கொலையாகும்.

இந்நிலையில், மீளமுடியாத அல்லது குணப்படுத்த முடியாத நோயாளிகள் இயற்கையாக மரணம் அடையும் வகையில், அவா்களை கருணை கொலை செய்வதற்கான புதிய வரைவு வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

நோயாளி மூளைச் சாவு அடைதல், நோயாளிக்கு ஏற்பட்டுள்ள நோய் பாதிப்பு முற்றி தீவிர சிகிச்சை மூலம் அவா் உயிா் பிழைக்கமாட்டாா் என்ற நிலை ஏற்படுதல், சிகிச்சை வேண்டாம் என்று நோயாளி அல்லது அவா் சாா்பாக ஒருவரின் எழுத்துபூா்வ ஒப்புதல் உள்ளிட்ட சூழல்களின்போது நோயாளி இயற்கையாக மரணம் அடையும் வகையில், அவரைக் கருணைக் கொலை செய்வது குறித்து மருத்துவா்கள் முடிவு மேற்கொள்ள வேண்டும் என்று அந்த வரைவு வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவு வழிகாட்டுதல்கள் தொடா்பான கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை அக்டோபா் 20-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்டவா்கள் மத்திய சுகாதார அமைச்சகத்திடம் தெரிவிக்கலாம்.

X
Dinamani
www.dinamani.com