
கர்நாடக மாநிலம் யாத்கிரி ஜில்லா பஞ்சாயத்துக்கு உள்பட்ட பகுதியில், மகாத்மா காந்தி நூறுநாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ், பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டிய வேலையை ஆண்களுக்கு வழங்கி, அதனை மறைக்க ஆண்களுக்கு சேலை கட்டி புகைப்படம் எடுத்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
யாத்கிரி மாவட்டம், மல்தாரில் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணியில் பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டிய வேலைகளும் ஆண்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. இதனை மறைக்க பெண்கள் இருக்க வேண்டிய எண்ணிக்கையில் பணியாற்றிய ஆண்களுக்கு சேலை கட்டி, தொழிலாளர்களின் புகைப்படங்களை அதிகாரிகள் எடுத்து பதிவேற்றியுள்ளனர்.
இந்த புகைப்படத்தைப் பார்த்தவர்களுக்கு ஒரு சந்தேகம் வந்துள்ளது. அனைத்துப் பெண்களும் புடவை முந்தானையால் தங்களது முகத்தை மூடியிருந்தது மட்டுமல்ல, முகம் தெரியாத வகையில் புகைப்படம் இருந்தது. இது சந்தேகத்துக்கு அடிப்படையாக மாறியது.
இதை விசாரிக்கப் போன அதிகாரிகளுக்குத் தெரிய வந்த உண்மை என்னவென்றால், பெண்களின் பெயரில் ஆண்களே இந்த நூறு நாள் வேலை திட்டத்தில் பயனமடைந்ததும், ஏராளமானோல் இந்த வகையில் பல லட்சம் பயன் பெற்றுள்ளதாகவும், இந்த ஒரு சம்பவத்தில் மட்டும் சேலை கட்டிய ஆண்கள் ரூ.3 லட்சம் வரை நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் மோசடியாக பணம் பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், இந்த திட்டத்தின் கீழ், ஒரு நபருக்கு ஒரு நாள் கூலியாக ரூ.370 வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.