
துறைமுக நகரமாக இருக்கும் விசாகப்பட்டினத்தை, தகவல்தொழில்நுட்ப நகரமாக மாற்றுவதற்கான முதற்கட்டமாக, டிசிஎஸ் நிறுவனத்துக்கு 21.16 ஏக்கர் நிலத்தை அடையாளத் தொகையாக வெறும் 99 பைசாவுக்குக் கொடுத்திருக்கிறது ஆந்திர அரசு.
இது தொடர்பாக, ஆந்திர அரசு அதிகாரிகளுக்கும் டிசிஎஸ் நிறுவன அதிகாரிகளுக்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், ஆந்திர அமைச்சரவை இதற்கான ஒப்புதலை வழங்கியிருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்த போது, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொழிற்சாலை அமைக்கத் தேவையான நிலத்தை 99 பைசாவுக்குக் கொடுத்த திட்டத்தை பின்பற்றி, தற்போது ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இன்னும் 90 நாள்களுக்குள் விசாகப்பட்டினத்தில் டிசிஎஸ் நிறுவனம் தனது வேலையைத் தொடங்கும் என்றும், முதற்கட்டமாக, வாடகைக் கட்டடத்தில் நிறுவனம் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. விரைவில் டிசிஎஸ் புதிய கட்டுமானப் பணிகளைத் தொடங்கும் என்றும், இங்கு 10 ஆயிரம் ஊழியர்கள் தங்குவதற்கான வீடுகள் உள்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும் என்றும் இந்தக் கட்டுமானப் பணிகள் 2 அல்லது மூன்று ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.
துறைமுக நகரமாக இருக்கும் விசாகப்பட்டினத்தில், டிசிஎஸ் நிறுவனம் தொடங்கப்படுவதையடுத்து, அங்குப் படிப்படியாக தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, தகவல்தொழில்நுட்ப நகரமாக மாறுவதற்கான அடித்தளம் இடப்பட்டிருப்பதாகவும் அடுத்த 5 ஆண்டுகளில் தகவல்தொழில்நுட்பத்தில சுமார் 5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும் ஆந்திர அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுளள்து.
இதர தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களுடனும் ஆந்திர அரசு விசாகப்பட்டினத்தில் தங்களது நிறுவனங்களின் கிளைகளைஅமைப்பது தொடர்பாக பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.