
பெங்களூரு: கர்நாடக மாநில காவல்துறை முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் அவரது வீட்டில் வைத்தே கொல்லப்பட்டிருப்பதாக வரும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரிலுள்ள அவரது வீட்டிலிருந்து இன்று(ஏப். 20) அவரது உடலை போலீஸார் மீட்டுள்ளனர். அவருக்கு வயது 68.
உடலில் பல்வேறு பாகங்களில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் டிஜிபி மரணம் குறித்து வழக்கு பதிந்துள்ள காவல்துறை, எதற்காக இந்த கொலை நடந்தது? என்பதை கண்டறிய விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஓம் பிரகாஷ் உயிரிழந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி பல்லவி காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். அதன் அடிப்படையில், அவரது வீட்டுக்குச் சென்ற காவல் துறை அதிகாரிகள் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இந்தநிலையில், பல்லவி மற்றும் அவரது மகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
பெங்களூரு எச்.எஸ்.ஆர் லே-அவுட் பகுதியிலுள்ளதொரு 3 மாடிகள் கொண்ட அடுக்குமாடி வீட்டில்தான் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. அந்த வீட்டில் தரைத்தளத்தில் தங்கியிருந்த ஓம் பிரகாஷ் இன்று கொல்லப்பட்டார் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற குடும்ப உறுப்பினரோ அல்லது பழக்கமானவரோ இந்த கொலைக்கு முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.