பஹல்காம்: இஸ்லாமிய வாசகங்களை கூறக் கட்டாயப்படுத்திய பயங்கரவாதிகள்!

கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒருவரை கட்டாயப்படுத்திய பயங்கரவாதிகள்.
பஹல்காம்: இஸ்லாமிய வாசகங்களை கூறக் கட்டாயப்படுத்திய பயங்கரவாதிகள்!
ANI
Published on
Updated on
1 min read

பஹல்காம் தாக்குதலில் பலியான இந்தூரைச் சேர்ந்த எல்ஐசி கிளை மேலாளரை மண்டியிடச் செய்து இஸ்லாமிய வாசகங்களை கூற பயங்கரவாதிகள் கட்டாயப்படுத்தியது தெரிய வந்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கூடியிருந்தபோது ஆயுதங்களுடன் வந்த பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவத்தில் 2 வெளிநாட்டவர் உள்பட 28 பேர் கொல்லப்பட்ட நிலையில், 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த எல்ஐசி கிளை மேலாளர் சுஷில் நதானியேல் (50) என்பவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளார். அவரது மனைவியும் மகளும் படுகாயமடைந்துள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டம் ஜோபாட் பகுதியைச் சேர்ந்த சுஷில், தற்போது சொந்த ஊரில் எல்ஐசி கிளை மேலாளராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி ஆசிரியையாக பணியாற்றுகிறார். மகள், சூரத்தில் பேங்க் ஆஃப் பரோடா வங்கி ஊழியர். மகன் படித்துக்கொண்டிக்கிறார்.

"2019 ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதிலிருந்து சுஷில் தனது குடும்பத்தினருடன் காஷ்மீருக்குச் செல்ல விரும்பினார். தற்போதுதான் அவர் அங்கு செல்ல வாய்ப்பு கிடைத்த நிலையில் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். அவர் காஷ்மீர் செல்வதாகக் கூறி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பயங்கரவாதிகள் சுஷிலை மண்டியிடச் செய்து இஸ்லாமிய வாசகங்களை கூறச் சொன்னதாகவும் ஆனால் அவர் கிறிஸ்தவரானதால் அதைச் செய்யாதால் அவர் கொல்லப்பட்டதாகவும் அவருடைய மகன் தொலைபேசியில் எங்களிடம் தெரிவித்தார். நாங்கள் அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஆதரவாக உறுதியாக நிற்கிறோம். பயங்கரவாதிகளுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று இந்தூரில் வசிக்கும் சுஷில் உறவினர் சஞ்சய் கும்ராவத் தெரிவித்தார்.

மேலும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டபோது சுஷில் தனது மனைவி மற்றும் குழந்தைகளை ஒரு மரத்தின் பின்னால் மறைந்திருக்கச் செய்தார் என்றும் இருப்பினும் அவரது மகள் அகன்க்ஷாவின் காலில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பெஹல்காம் தாக்குதலுக்கு 2 நாள்களுக்கு முன்னர்தான் சுஷில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் காஷ்மீர் சென்றுள்ளார்.

"ஈஸ்டர் தினத்தன்றுதான் அவருக்கு வாழ்த்துச் சொல்லி பேசியதாகவும் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் நாம் இன்னும் எத்தனை பேரை இழக்க வேண்டும், பயங்கரவாதிகளை அந்த இடத்திலேயே சுட்டுக்கொல்ல வேண்டும்" என்று சுஷிலின் மற்றொரு உறவினர் கூறியுள்ளார்.

சுஷிலின் இறப்பு அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com