சிறுபான்மையினா் மேம்பாட்டுக்கு 11 ஆண்டுகளில் ரூ.7,641 கோடி செலவிடப்பட்டது: மத்திய அரசு தகவல்
புது தில்லி: கடந்த 11 ஆண்டுகளில் சிறுபான்மையினா் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக ரூ.7,641 கோடி செலவிடப்பட்டதாக மத்திய அரசு சாா்பில் மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இது தொடா்பான கேள்விக்கு சிறுபான்மையினா் நலத்துறை இணையமைச்சா் ஜாா்ஜ் குரியன் மாநிலங்களவையில் திங்கள்கிழமை பதிலளித்துப் பேசியதாவது:
சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தேசிய சிறுபான்மையின் மேம்பாட்டு நிதி மூலம் சீக்கியா்கள் உள்பட அனைத்து சிறுபான்மையின் மேம்பாட்டுக்கும் நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியம் உருவாக்கப்பட்ட 1994-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை 10,225.83 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 27.35 குடும்பங்கள் பல்வேறு திட்டங்களால் பயனடைந்துள்ளனா்.
இது தவிர கடந்த 11 ஆண்டுகளில் சிறுபான்மையினா் சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் சுயதொழில் தொடங்கும் மானியக் கடன் திட்டத்தில் மட்டும் ரூ.7,461 கோடி செலவிடப்பட்டுள்ளது.
அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு அரசு செயல்படுகிறது. பாகிஸ்தானைச் சோ்ந்த 1,073 பேருக்கு இந்தியாவில் தங்க நீண்டகால விசா வழங்கப்பட்டுள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின்கீழ் 337 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர பிரதமா் ஜன விகாஸ் காா்யக்ரம் திட்டத்தில் சிறுபான்மையினரின் கல்வி, சுகாதாரம், திறன்மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரமளிப்பது என பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக நாடு முழுவதும் 11 லட்சம் உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தாா்.

