கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து இதுவரை நக்ஸல் அமைப்பைச் சேர்ந்த 29 முக்கிய கமாண்டர்கள் கொல்லப்பட்டு விட்டதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட துணைக் கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் செவ்வாய்க்கிழமை அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் எண்ணிக்கை கடந்த 2014இல் 10ஆக இருந்தது. இது நடப்பு ஆண்டு அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் 5ஆகக் குறைந்துள்ளது. நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 126இல் இருந்து 11ஆகக் குறைந்துள்ளது.
இடதுசாரி நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை கடந்த 2018 ஏப்ரல் மாதம் 126ஆக இருந்தது. இது 2024 ஏப்ரலில் 70ஆகவும், 2025 ஏப்ரலில் 38ஆகவும், 2025 அக்டோபரில் 11ஆகவும் குறைந்துள்ளது.
எனினும், நக்ஸலைட் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அந்த அமைப்பினர் மீண்டும் வலுப்பெறுவதைத் தடுக்கும் நோக்கில் 27 மாவட்டங்கள் பாதுகாப்பு தொடர்பான செலவினத் திட்டத்தில் சேர்க்கப்பட்டன.
கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து இதுவரை நக்ஸல் அமைப்பைச் சேர்ந்த 29 முக்கிய கமாண்டர்களை நமது பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் நக்ஸல் அமைப்பின் 14 மத்தியக் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்களும் அடங்குவர்.
பிரதமர் மோடியின் வெற்றிகரமான தலைமை மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வழிகாட்டுதலின்கீழ் வரும் 2026, மார்ச் மாதத்துக்குள் நாட்டில் இருந்து இடதுசாரி நக்ஸல் தீவிரவாதம் துடைத்தெறியப்படும். நக்ஸல் தீவிரவாதிகள் இனி தப்பிப்பதற்கு வழியே இல்லை.
நக்ஸல் தீவிரவாதத்தை மத்தியில் முன்பு ஆட்சி செய்த அரசுகள் மாநிலப் பிரச்னையாகக் கருதிவந்தன. இதனால் அந்த அமைப்புக்கு எதிராக மத்திய அரசால் உறுதியான கொள்கையை வகுத்துச் செயல்பட இயலவில்லை. நக்ஸல் தீவிரவாதத்துக்கு எதிராக மோடி அரசு விரிவான செயல்திட்டத்தை வகுத்தது. இதன் காரணமாக அந்த அமைப்பை ஒழித்துக்கட்ட மத்திய அரசு உறுதிபூண்டது. மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் இதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நக்ஸல் தீவிரவாதத்தை சகித்துக் கொள்வதில்லை என்ற கொள்கை காரணமாக கடந்த 2010இல் மிக அதிகமாக இருந்த அமைப்பின் வன்முறைச் செயல்கள் 2024இல் 81 சதவீதம் குறைந்தன.
நக்ஸல் அமைப்பின் வன்முறையால் கடந்த 2004 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் 6,608 உயிரிழப்புகள் ஏற்பட்டன.
இது 2015 முதல் 2025 மே மாதம் வரையிலான காலகட்டத்தில் 1,868 உயிரிழப்புகளாகக் குறைந்தது. இது 71 சதவீத சரிவாகும். நடப்பு ஆண்டில் மே முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் நக்ஸல் அமைப்பின் வன்முறைக்கு 44 பேர் உயிரிழந்தனர் என்று அமைச்சர் நித்யானந்த் ராய் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.