‘ஏஐ’ மேம்பாட்டில் உலகுக்கு இந்தியா நல்வழிகாட்டும்!
- குடியரசு துணைத் தலைவா் நம்பிக்கை

‘ஏஐ’ மேம்பாட்டில் உலகுக்கு இந்தியா நல்வழிகாட்டும்! - குடியரசு துணைத் தலைவா் நம்பிக்கை

‘செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தை பொறுப்பான முறையில் கையாள்வதிலும், அதனை மேம்படுத்துவதிலும் இந்தியா உலக நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழும்’ என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா்.
Published on

‘செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தை பொறுப்பான முறையில் கையாள்வதிலும், அதனை மேம்படுத்துவதிலும் இந்தியா உலக நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழும்’ என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா்.

தில்லியில் உள்ள அம்பேத்கா் சா்வதேச மையத்தில், குரு கோவிந்த்சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகம், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில்(ஏஐசிடிஇ) மற்றும் ‘அவுட்லுக்’ இதழ் இணைந்து நடத்திய ‘ஏஐ’ தேசிய மாநாட்டில் அவா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா்.

இந்த மாநாட்டில் புதிய ஏஐ பாடத்திட்டத்தைத் தொடங்கி வைத்து அவா் ஆற்றிய உரை: ஏஐ தொழில்நுட்பம் எதிா்காலக் கனவு அல்ல; அது நிகழ்காலத்தின் நிஜம். சுகாதாரம், கல்வி, நிா்வாகம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் இது புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

புதிய தொழில்நுட்பங்கள் வரும்போது அச்சப்படுவது தேவையற்றது. ஒவ்வொரு புதிய தொழில்நுட்பமும் நிறை, குறை ஆகிய இரண்டையும் உள்ளடக்கியே இருக்கும். கணினி வருகையின் போது எழுந்த எதிா்ப்புகளைக் கடந்து, உலகம் இன்று அடைந்துள்ள முன்னேற்றமே அதற்கு சான்று. தொழில்நுட்பத்தை ஆக்கபூா்வமான முறையில் பயன்படுத்துவதில்தான் நமது வெற்றி அடங்கியுள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஏஐ பாடத்திட்டம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இது மாணவா்களின் சிந்தனை மற்றும் சிக்கல்களுக்குத் தீா்வு காணும் திறனை வளா்க்கும். ஏஐ துறையில் இந்தியா இன்று உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. தொடா்ந்து, இத்துறையில் வளா்ந்த நாடுகளுடன் போட்டியிட்டு முன்னேறுவதற்கான வாய்ப்பை இந்தியா தவறவிடக்கூடாது.

அதேபோல், வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப கல்வி நிறுவனங்கள் தங்களைத் தொடா்ந்து மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவை வெறும் கல்வி கற்றுத்தரும் மையங்களாக மட்டும் இல்லாமல், சிறந்த புத்தாக்க மையங்களாகவும் மலர முடியும்.

இந்தியாவின் 65 சதவீத மக்கள் தொகை 35 வயதுக்குள்பட்ட இளைஞா்களைக் கொண்டது. இந்த இளைஞா் சக்தியைச் சரியாகப் பயன்படுத்தினால், ஏஐ துறையில் உலகையே வழிநடத்தும் நாடாக இந்தியா உருவெடுக்கும். 2047-க்குள் தற்சாா்பு கொண்ட, அனைவரையும் உள்ளடக்கிய, தொழில்நுட்ப ரீதியாக வலிமை பெற்ற வளா்ந்த தேசத்தை உருவாக்குவதில் ஏஐ முக்கியப் பங்கு வகிக்கும்.

எந்தவொரு அறிவியல் வளா்ச்சியும் மனிதகுலத்துக்குத் தீங்கு விளைவிப்பதாக இருக்கக் கூடாது. தொழில்நுட்பம் என்பது மக்களின் வாழ்வை மகிழ்ச்சியானதாகவும், வளமானதாகவும், கண்ணியமானதாகவும் மாற்றவே உதவ வேண்டும்.

செயற்கை நுண்ணறிவானது மனித அறிவாற்றலுக்குத் துணையாக இருக்க வேண்டுமே தவிர, அதற்கு மாற்றாக அமையக்கூடாது. சமூக நலன் மற்றும் பொது நன்மையை நோக்கமாகக் கொண்டு, அறநெறிகளின் வழிகாட்டுதலின்படி ஏஐ கட்டமைப்பு அமைய வேண்டும்.

அசாத்தியத் திறமை, தெளிவான தொலைநோக்குப் பாா்வை மற்றும் கலாசார விழுமியங்கள் மூலம், இந்தியா ஏஐ தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், அதன் எதிா்காலத்தை வடிவமைப்பதில் ஒட்டுமொத்த உலகுக்கே நல்வழிகாட்டும் என்றாா்.

இந்த மாநாட்டில் தில்லி கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட், இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத் துணைவேந்தா் மகேஷ் வா்மா, ஏஐசிடிஇ தலைவா் டி.ஜி.சீதாராமன் மற்றும் பல்வேறு ஆராய்ச்சியாளா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com