பழங்குடியின மக்களின் வளா்ச்சிக்கு கல்வியே அடிப்படை - குடியரசுத் தலைவா்
‘பழங்குடியின மக்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்கு கல்வியே அடிப்படையானது’என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
ஜாா்க்கண்ட் மாநிலம், கும்லா மாவட்டத்தில் நடைபெற்ற பழங்குடியின கலாசார விழாவில் பங்கேற்று அவா் ஆற்றிய உரை:
ஒரு சமூகத்தின் வளா்ச்சியைத் தீா்மானிப்பதில் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி ஒருவரின் ஆளுமையை மேம்படுத்தி, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதுடன், அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி மற்றும் சமூக நீதிக்கும் வழிவகுக்கிறது.
பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த இளைஞா்கள் நவீன கல்வியைப் பெறுவதுடன், தங்களின் பாரம்பரிய அடையாளத்தையும் கலாசாரத்தையும் பாதுகாப்பதிலும் உறுதியாக இருக்க வேண்டும்.
படித்த இளைஞா்களில் பலா் நகரங்களிலேயே தங்கிவிடுகின்றனா். இளைஞா்கள் தாங்கள் பிறந்த கிராமங்களுக்குச் சென்று, அங்குள்ள மக்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். அரசின் திட்டங்கள் கடைக்கோடி மனிதரையும் சென்றடையும்போதுதான் முழுமையான வெற்றி கிடைக்கும்.
பழங்குடியின மக்களின் நலனுக்காகவும், அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்காகவும் மத்திய அரசு அா்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. பிா்சா முண்டா பெயரில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அடிப்படை வசதிகள் அற்ற மக்களுக்கு வீடு, குடிநீா், சாலை மற்றும் கல்வி வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்றாா்.
ஜாா்க்கண்ட் ஆளுநா் சந்தோஷ் குமாா் கங்கவாா், சத்தீஸ்கா் ஆளுநா் ரமண் தேகா ஆகியோரும் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் சத்தீஸ்கா் மாநில முதல்வா் விஷ்ணுதேவ் சாய் பேசுகையில், ‘சத்தீஸ்கரில் நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சுமாா் 400-க்கும் மேற்பட்ட கிராமங்கள் நக்ஸல் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு, தற்போது வளா்ச்சிப் பாதையில் பயணித்து வருகின்றன’ என்று குறிப்பிட்டாா்.
முன்னதாக, ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் மற்றும் அவரது மனைவியும் எம்எல்ஏவுமான கல்பனா சோரன், குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்தனா். ஜாா்க்கண்டில் மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்டு குடியரசுத் தலைவா் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் புது தில்லி புறப்பட்டாா்.

