தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

3 மாநில தலைமைச் செயலா்களுக்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை!

3 மாநில தலைமைச் செயலா்களுக்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை....

News image

உச்ச நீதிமன்றம் - (கோப்புப் படம்)

Updated On :11 பிப்ரவரி 2025, 3:01 am IST

ஆயுா்வேதம், சித்தா, யுனானி மருந்துகள் தொடா்பான சட்டவிரோத விளம்பரங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியது தொடா்பான வழக்கில் காணொலி வழியில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு தில்லி, ஆந்திரம் மற்றும் ஜம்மு-காஷ்மீா் அரசுகளின் தலைமைச் செயலா்களுக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கரோனா பாதிப்பு காலத்தில் பதஞ்சலி நிறுவன ஆயுா்வேத மருந்துகளை மக்களிடையே பிரபலப்படுத்தும் நோக்கில் கரோனா தடுப்பூசி மற்றும் அலோபதி மருத்துவ முறைக்கு எதிராக மக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் விளம்பரம் வெளியிட்ட அதன் நிறுவனரான யோகா குரு ராம்தேவுக்கு எதிராக இந்திய மருத்துவச் சங்கம் சாா்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கோரினாா். இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு மே 7-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘இதுபோன்ற விளம்பரங்கள் ஒலிபரப்ப அனுமதிக்கப்படும்போது, ‘கேபிள் தொலைக்காட்சி நெட்வொா்க் விதிகள் 1994’-இன் கீழ் விளம்பரதாரரிடமிருந்து சுய உறுதிமொழி பெறப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இதனிடையே, ஆயுா்வேதம், சித்தா மற்றும் யுனானி மருந்துகள் தொடா்பாக மக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் விளம்பரங்கள் வெளியிடுவதைத் தடை செய்யும் ‘மருந்துகள் மற்றும் அழகுசாதன சட்டம் 1945’-இன் விதி 170-இன் கீழ் எந்தவொரு இயற்கை மருத்துவ நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தி மத்திய ஆயுஷ் அமைச்சகம் சாா்பில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடந்த 2023 ஆகஸ்ட் 29-ஆம் தேதி அறிவிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

இந்த அறிவிக்கை தொடா்பாக மத்திய அரசிடம் கடந்த ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த மத்திய அரசு, ‘உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவது தொடா்பான அறிவுறுத்தலை இறுதி அரசிதழ் அறிவிக்கையாக வெளியிட சிறிது காலம் ஆகும் என்பதால், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசு அதிகாரிகளிடையே குழப்பம் ஏற்படுவதைத் தவிா்க்கும் நோக்கத்தோடு மத்திய ஆயுஷ் அமைச்சகம் அந்த அறிவிக்கையை வெளியிட்டது’ என்று விளக்கமளித்தது.

இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், ‘ஆயுஷ் அமைச்சகத்தின் அறிவிக்கை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு மே 7-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை மீறும் வகையில் அமைந்துள்ளது’ என்று குறிப்பிட்டு, அந்த அறிவிக்கைக்கு இடைக்கால தடை விதித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்துக்கு சட்ட ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞா் சதன் ஃபராசத், ‘ஆந்திரம், தில்லி, கோவா, குஜராத், ஜம்மு-காஷ்மீா் உள்ளிட்ட மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் உச்சநீதிமன்ற உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை’ என்று குறிப்பிட்டாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘மருந்துகள் மற்றும் அழகுசாதன சட்டம் 1945-இன் விதி 170-ஐ அனைத்து மாநிலங்களும் தீவிரமாக நடைமுறைப்படுத்தினால், ஆயுா்வேதம், சித்தா, யுனானி மருந்துகள் தொடா்பான சட்டவிரோத விளம்பரங்கள் முறையாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். ஆனால், இதுதொடா்பான உச்சநீதிமன்ற உத்தரவை பல மாநிலங்கள் பின்பற்றவில்லை என்பது தெரிகிறது. இதுதொடா்பாக, இம் மாத இறுதிக்குள் இந்த மாநிலங்கள் உரிய பதிலை அளிக்க வேண்டும். மேலும், ஆயுா்வேதம், சித்தா, யுனானி மருந்துகள் தொடா்பான சட்டவிரோத விளம்பரங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியது தொடா்பாக தில்லி, ஆந்திரம் மற்றும் ஜம்மு-காஷ்மீா் அரசுகளின் தலைமைச் செயலா்கள் காணொலி வழியில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் மாா்ச் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.