தில்லியில் பாஜக அரசுக்குக் காத்திருக்கும் புதிய சவால்கள்!
27 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்க்கமான ஆணையுடன் தில்லியில் மீண்டும் பாஜக இன்று ஆட்சி அமைத்துள்ளது.
தில்லியின் ஒன்பதாவது முதல்வராக பாஜகவின் முதல்முறை சட்டப்பேரவை உறுப்பினர் ரேகா குப்தா பதவியேற்றுள்ளார். சுஷ்மா ஸ்ராஜ், ஷீலா தீட்சித், அதிஷி ஆகியோருக்குப் பிறகு நான்காவது பெண் முதல்வர் என்கிற பெருமையையும் ரேகா குப்தா பெறுகிறார். மேலும் தில்லியில் முதல்வர் பதவி வகித்த பாஜக தலைவர்களான மதன் லால் குரானா, சாஹிப் சிங் வர்மா, சுஷ்மா ஸ்ராஜ் ஆகியோருக்குப் பிறகு நான்காவது பாஜக முதல்வராகும் பெருமையையும் இவர் பெறுகிறார்.
தில்லியில் ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசுக்கு பல்வேறு புதிய சவால்கள் காத்திருக்கின்றன.
தேசிய தலைநகரின் நிதி நிலையைக் கண்காணிக்கும் அதே வேளையில், முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, முந்தைய அரசின் நலத்திட்டங்களைத் தொடர்வது, நகரத்தின் மாசுபாடு மற்றும் உள்கட்டமைப்பு பிரச்னைகளை சரிசெய்வது மற்றும் யமுனையைச் சுத்தம் செய்வதை உறுதி செய்வது போன்றவற்றை பாஜக அரசு நிறைவேற்ற வேண்டியக் கட்டாயத்தில் உள்ளது.
தற்போது எதிர்க்கட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி உருவானதிலிருந்து தில்லியில் ஒருபோதும் தனது அதிகாரத்தை இழந்ததில்லை. சமீபத்தில் முடிவடைந்த 70 உறுப்பினர்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக 48 இடங்களுடன் பெரும்பாண்மையுடன் வெற்றியைக் கைப்பற்றியது. அதே நேரத்தில் ஆம் ஆத்மி 22 இடங்களை வென்றது, தலைநகரில் ஆம் ஆத்மியின் பத்தாண்டுக் கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது பாஜக.
பாஜகவால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரியாணாவைச் சேர்ந்த ரேகா குப்தாவின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றுதான்.. தில்லி பெண்களுக்கு மாதாந்திரமாக ரூ. 2,500 கௌரவ ஊதியம் வழங்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாகும். இது கட்சியின் தேர்தல் அறிக்கையில் ஒரு முக்கிய வாக்குறுதியாகும். அதேசமயம் ஆம் ஆத்மி கட்சியின் ரூ. 2,100 என்ற வாக்குறுதியை விட, பெண்களுக்கு மாதாந்திரமாக வழங்கப்படும் கௌரவ ஊதியத்தை பாஜக அதிகரித்தது.
பாஜகவுக்கு மற்றொரு பெரிய சவாலாக இருப்பது.. 200 யூனிட் வரை இலவச மின்சாரம், இலவச தண்ணீர் இணைப்பு மற்றும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட ஆம் ஆத்மி அரசு தொடங்கிய நலத்திட்டங்களைத் தொடர்வதும் அடங்கும்.
இந்த சலுகைகள் நிறுத்தப்படாது என்று பாஜக வாக்காளர்களுக்கு உறுதியளித்துள்ள நிலையில், ஆம் ஆத்மி தலைவர்கள் கட்சியின் நீண்டகால உறுதிப்பாடு குறித்து அக்கட்சியின் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சமீபத்திய சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரத்தின்போது, பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இலவசத் திட்டங்கள் தொடரும், ஆனால் அத்தகைய திட்டங்களில் ஊழல் ஒழிக்கப்படும் என்று வாக்காளர்களுக்கு உறுதியளித்தனர்.
தில்லியில் ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக பாஜக உறுதியளித்திருந்தது, தற்போது அது தேர்தல் பிரச்னையாக மாறியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு பயனாளிக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சையை வழங்குகிறது, கூடுதலாக ரூ.5 லட்சம் மாநில அரசால் வழங்கப்படுகிறது.
தில்லியின் தற்போதைய சுகாதார அமைப்பு சிறந்ததாகவும், அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் இருப்பதாகக் கூறி ஆம் ஆத்மி அரசு, ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டைச் செயல்படுத்த மறுத்துவிட்டது. அதேசமயம் தேர்தலில் வெற்றி பெற்றால் தில்லியின் மொஹல்லா கிளினிக்குகளை சீர்திருத்துவதாக பாஜக உறுதியளித்துள்ளது.
பிப்ரவரி 5 ஆம் தேதி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, பாஜகவின் வெற்றி கொண்டாட்டங்களின் போது, பிரதமர் மோடி, நதியைச் சுத்தம் செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
தில்லியில் யமுனை நதியின் 57 கி.மீ நீளமுள்ள பகுதியில் குப்பைகளை அகற்றும் பணிக்காகக் குப்பைகளை அகற்றும் கருவிகள், களை அறுவடை செய்யும் கருவிகள் மற்றும் தூர்வாரும் கருவிகளை நிர்வாகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. கூடுதலாக, தில்லியின் சீரழிந்து வரும் சாலைகள் மற்றும் கழிவுநீர் அமைப்பை மேம்படுத்தவும் பாஜக உறுதியளித்துள்ளது.
மேலும், உலகளவில் மிகவும் மாசுபட்ட தலைநகரங்களில் ஒன்றான தில்லிக்கு, மாசுபாடு மிகப்பெரிய கவலைகளில் ஒன்றாக உள்ளது.
2020-ல் ஆம் ஆத்மி கட்சி செயல்படுத்திய பிறகு திருத்தத் தவறிய மின்சார வாகன (EV) கொள்கையைப் புதுப்பிப்பது உள்பட ஒரு பயனுள்ள மாசுக் கட்டுப்பாட்டு உத்தியைச் செயல்படுத்த பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும்.
அதோடு தில்லியில் நிலையான தலைமையைப் பராமரிப்பது பாஜகவுக்கு மற்றொரு சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.