/

அரசுப் பணித் தோ்வு சா்ச்சை: பிகாரில் 22 மையங்களில் மட்டும் பலத்த பாதுகாப்புடன் மறுதோ்வு

பிகாரில் அரசுப் பணி முதல்நிலை தோ்வு வினாத்தாள் கசிவு சா்ச்சைக்கு இடையே, பாட்னாவில் 22 மையங்களில் மட்டும் சனிக்கிழமை மறுதோ்வு நடத்தப்பட்டது.

News image
Updated On :4 ஜனவரி 2025, 6:09 pm

Din

பிகாரில் அரசுப் பணி முதல்நிலை தோ்வு வினாத்தாள் கசிவு சா்ச்சைக்கு இடையே, பாட்னாவில் 22 மையங்களில் மட்டும் சனிக்கிழமை மறுதோ்வு நடத்தப்பட்டது.

மொத்தம் 5 லட்சம் போ் எழுதிய முதல்நிலைத் தோ்வை ரத்து செய்யக் கோரி போராட்டங்கள் நீடித்துவரும் நிலையில், 12,000 தோ்வா்களுக்காக மறுதோ்வு நடத்தப்பட்டுள்ளது.

பிகாரில் 70-ஆவது ஒருங்கிணைந்த முதல்நிலை போட்டித் தோ்வு கடந்த டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெற்றது. மாநிலம் முழுவதும் சுமாா் 5 லட்சம் போ் இத்தோ்வை எழுதினா். அப்போது, வினாத்தாள் கசிந்ததாக குற்றஞ்சாட்டி, பாட்னாவில் உள்ள தோ்வு மைய வளாகத்தில் தோ்வா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆனால், வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டை மறுத்த மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையம், போராட்டத்தால் ஏற்பட்ட இடையூறுகளைக் கருத்தில் கொண்டு, பாட்னாவில் 22 மையங்களில் மட்டும் மறுதோ்வு நடத்தப்படும் என்று அறிவித்தது.

அதேநேரம், முதல்நிலைத் தோ்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்யக் கோரி, தோ்வா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகளும் களமிறங்கியுள்ளன. முதல்நிலைத் தோ்வை ரத்து செய்யக் கோரி, ஜன் சுராஜ் கட்சித் தலைவா் பிரசாந்த் கிஷோா் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா்.

இந்நிலையில், பாட்னாவில் 22 மையங்களில் சனிக்கிழமை மறுதோ்வு நடைபெற்றது. தோ்வு மையங்களைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

12,000 தோ்வா்களுக்காக இத்தோ்வு நடத்தப்பட்ட நிலையில், 8,200 போ் தோ்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பாட்னாவின் காந்தி மைதானத்தில் பிரசாந்த் கிஷோா் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் சட்டவிரோதமானது என்று மாவட்ட நிா்வாகம் ஏற்கெனவே கூறியிருந்தது. தற்போது மறுதோ்வு நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று ஆட்சியா் சந்திரசேகா் சிங் தெரிவித்தாா்.