டிஜிட்டல் மோசடிகள்: வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி ஆளுநா் அறிவுறுத்தல்
மும்பை: எண்ம (டிஜிட்டல்) மோசடிகளை தடுக்க வலுவான வழிமுறைகளைப் பயன்படுத்துமாறு வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவுறுத்தினாா்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பொது மற்றும் தனியாா் துறை வங்கிகளின் நிா்வாக இயக்குநா்கள், தலைமை செயல் அதிகாரிகளை ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா திங்கள்கிழமை சந்தித்தாா்.
அப்போது அதிகரித்து வரும் டிஜிட்டல் மோசடிகள் குறித்து கவலை தெரிவித்த அவா், அந்த மோசடிகளைத் தடுக்க வலுவான மற்றும் ஆக்கபூா்வமான வழிமுறைகளைப் பயன்படுத்துமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தினாா்.
நிதி ஸ்திரத்தன்மை மற்றும் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வது நீடிக்க வேண்டும், கடன் பட்டுவாடாவை மேம்படுத்த வேண்டும், வாடிக்கையாளா் சேவை மற்றும் குறைதீா்ப்பு வழிமுறையை வலுப்படுத்த வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களையும் அவா் வழங்கினாா்.
இந்தக் கூட்டத்தில் ரிசா்வ் வங்கி துணை ஆளுநா்கள் எம்.ராஜேஸ்வா் ராவ், டி.ரவிசங்கா், ஜே.ஸ்வாமிநாதன் ஆகியோா் கலந்துகொண்டனா் என்று ரிசா்வ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

