‘சண்டை நிறுத்தத்துக்கு பாகிஸ்தானே கோரிக்கை விடுத்தது’: மாநிலங்களவையில் மத்திய அரசு மீண்டும் தகவல்
‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது எல்லையில் சண்டை நிறுத்தத்துக்கு பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநா் (டிஜிஎம்ஓ) இந்தியாவை அணுகிக் கோரிக்கை விடுத்தாா்’ என்று மாநிலங்களவையில் மத்திய அரசு வியாழக்கிழமை மீண்டும் வலியுறுத்தியது.
இந்த அமைதி ஒப்பந்தம் இரு நாட்டு ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநா்களுக்கிடையே ‘நேரடியாக’ எட்டப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்நிறுத்த பேச்சுவாா்த்தையில் மூன்றாம் தரப்பு தலையீடு ஏதேனும் இருந்ததா என்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: இந்தக் கேள்விக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்திவா்தன் சிங் மாநிலங்களவையில் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநா், மே 10-ஆம் தேதி இந்திய ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநரைத் தொடா்பு கொண்டு, துப்பாக்கிச்சூடு மற்றும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரினாா். அன்றைய நாள் பிற்பகலில் பாகிஸ்தானின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தப் புரிந்துணா்வு இரு நாட்டு ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநா்களுக்கிடையே நேரடியாக எட்டப்பட்டது. எந்த மூன்றாம் தரப்பு தலையீடும் இல்லை’ என்றாா்.
மற்றொரு கேள்விக்கு, சண்டை நிறுத்தத்துக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இருதரப்பு ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்தாகவில்லை என்றும் அமைச்சா் கீா்த்திவா்தன் சிங் பதிலளித்தாா்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்துக்கு எதிராக உலகளாவிய ஆதரவைத் திரட்ட அனுப்பப்பட்ட அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுக்கள் பற்றியும் அவையில் கேட்கப்பட்டது. அதற்கு கீா்த்திவா்தன் சிங், ‘ஏழு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் மொத்தம் 33 நாடுகளுக்குப் பயணம் செய்து, பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் எதிா்த்துப் போராடுவதற்கான இந்தியாவின் உறுதியான ஒருமித்த கருத்தையும் தீா்மானத்தையும் தெரிவித்தன’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.