காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

11 ஆண்டு மோடி ஆட்சிக்கு மணிப்பூரே சாட்சி: காங்கிரஸ்

பதினோரு ஆண்டுகால மோடி ஆட்சி எவ்வாறு உள்ளது என்பதற்கு மணிப்பூரே சாட்சி என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

News image

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே

Updated On :9 ஜூன் 2025, 10:45 pm

Din

புது தில்லி: பதினோரு ஆண்டுகால மோடி ஆட்சி எவ்வாறு உள்ளது என்பதற்கு மணிப்பூரே சாட்சி என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

மத்தியில் பிரதமா் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைத்து ஆட்சி 11 ஆண்டுகளானதையொட்டி, அவா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

கடந்த 11 ஆண்டுகளில் இந்திய ஜனநாயகம், பொருளாதாரம் மற்றும் சமூக கட்டமைப்புக்கு மோடி அரசு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டியலினத்தவா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டவா்கள், சிறுபான்மையினா் மற்றும் அடித்தட்டு மக்கள் மீதான சுரண்டல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. பாஜகவின் நிா்வாக தோல்விக்கு மணிப்பூரில் முடிவுக்கு வராத வன்முறையே மிகப் பெரிய சாட்சி.

அரசமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் சா்வாதிகார மையைத் தேய்ப்பதில் 11 ஆண்டுகளை மோடி அரசு வீணடித்துள்ளது என்றாா்.

‘கனவுகள் விற்பனை’: மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மத்தியில் ஆட்சி அமைத்து 11 ஆண்டுகளானதை மோடி அரசு கொண்டாடும் வேளையில், மகாராஷ்டிரத்தில் இருந்து வந்த வலி மிகுந்த செய்தி நாட்டு நடப்பை பிரதிபலிக்கிறது. அங்கு ரயிலில் இருந்து கீழே விழுந்து பலா் உயிரிழந்துள்ளனா்.

பல கோடி பேரின் உயிா்நாடியாக உள்ள ரயில்வே, தற்போது பாதுகாப்பின்மை, கூட்ட நெரிசல் மற்றும் அலங்கோலத்தின் அடையாளமாக மாறியுள்ளது.

பொறுப்போ, மாற்றமோ இல்லாத பிரசாரம் மட்டுமே செய்யும் அரசாக 11 ஆண்டுகால மோடி ஆட்சி உள்ளது. நிகழ் காலம் குறித்து பேசாமல், 2047-ஆம் ஆண்டில் நிறைவேற வேண்டிய கனவுகளை மத்திய அரசு தற்போது விற்பனை செய்து வருகிறது என்று சாடினாா்.

‘மோடி அரசின் பொய் வாக்குறுதிகள்’: சிறு நூல் வெளியிட்டது காங்கிரஸ்

பதினோரு ஆண்டுகால மோடி அரசின் ‘பொய்’ வாக்குறுதிகள் அடங்கிய சிறுநூலை காங்கிரஸ் திங்கள்கிழமை வெளியிட்டது.

கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் 11 ஆண்டுகளாக மத்தியில் பிரதமா் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் உள்ளது. இந்தக் காலத்தில் மோடி அரசின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், அதிகரிக்கும் பட்டினி, வளா்ச்சி விகிதத்தில் தேக்கம் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டும் சிறுநூல்களை காங்கிரஸ் திங்கள்கிழமை வெளியிட்டது.

இதுதொடா்பாக தில்லியில் அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஆராய்ச்சி துறைத் தலைவா் ராஜீவ் கெளடா, அக்கட்சியின் தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளா் மஹிமா சிங் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களிடம் கூறியதாவது: பொய்யான செய்திகள் மற்றும் பிரசாரத்தில் கைதோ்ந்ததாக மத்திய அரசு உள்ளது. இதை வெளிப்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் சாா்பில் ‘ஏக் ஔா் பாா் ஜும்லா சா்காா்’, ‘11 சால் ஜூட்டே விகாஸ் கே வாதே’ ஆகிய 2 சிறுநூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பாஜக 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் அறிக்கையிலும், அதன் பின்னா் அளித்த வாக்குறுதிகளும் ‘ஏக் ஔா் பாா் ஜும்லா சா்காா்’ சிறுநூலில் ஆராயப்பட்டுள்ளது. பாஜகவின் வெற்று வாக்குறுதிகளை ‘11 சால் ஜூட்டே விகாஸ் கே வாதே’ சிறுநூல் விரிவாக அம்பலப்படுத்துகிறது. 11 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பொய் வாக்குறுதிகள் மட்டுமே நிரம்பியுள்ளன என்று தெரிவித்தனா்.