வெளிநாட்டு சிறைகளில் வாடும் 10,152 இந்தியர்கள்! 49 பேருக்கு மரண தண்டனை விதிப்பு!

வெளிநாட்டு சிறைகளில் உள்ள இந்தியர்கள் பற்றி...
சிறைகளில் வாடும் இந்தியர்கள்
சிறைகளில் வாடும் இந்தியர்கள்GROK AI
Published on
Updated on
1 min read

வெளிநாட்டு சிறைகளில் 10,152 இந்தியர்கள் தண்டனை அனுபவித்து வருவதாகவும் அதில் 49 பேர் மரண தண்டனைக் கைதிகள் என்றும் மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் பல ஆண்டுகளாக தண்டனைக் கைதிகளாக உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை, மரண தண்டனை பெற்றவர்கள் ஆகியோரை மீட்டு வருவதற்கு இந்திய அரசு எடுத்துள்ள முயற்சிகள் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதுதொடர்பாக பதிலளித்த வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், ”அமைச்சகத்திடம் உள்ள தகவல்களின்படி, விசாரணைக் கைதிகள் உள்பட வெளிநாட்டு சிறைகளில் தண்டனை பெற்றுவரும் இந்தியர்களின் எண்ணிக்கை 10,152 ஆகும்” என்று தெரிவித்தார்.

8 நாடுகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்படாத இந்தியர்களின் எண்ணிக்கை குறித்த தரவுகளை அமைச்சர் சமர்ப்பித்தார்.

தரவுகளின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் அதிகபட்சமாக 25 இந்தியர்களுக்கும், சவுதியில் 11 பேருக்கும், மலேசியாவில் 6 பேருக்கும், குவைத்தில் 3 பேருக்கும், இந்தோனேசியா மற்றும் கத்தாரில் தலா ஒருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

"வெளிநாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் உள்பட, வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு நமது அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது

மரண தண்டனைக் கைதிகள் உள்பட வெளிநாட்டு நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகங்கள் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குகின்றன.

நீதிமன்றங்கள், சிறைகள், அரசு வழக்குரைஞர்கள் போன்ற தேவையான உதவிகளுக்கான தொடர்பை ஏற்படுத்த தூதரக அதிகாரிகள் உறுதி செய்கிறார்கள்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர்கள் மேல்முறையீடு, கருணை மனுக்களை தாக்கல் செய்வது உள்ளிட்ட பல்வேறு சட்ட ரீதியான தீர்வுகளுக்கு உதவவும் தூதரகங்கள் ஆதரவளிக்கின்றன" என்று அமைச்சர் விளக்கினார்.

கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாட்டு சிறைகளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இந்தியர்கள் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு, “மலேசியா, குவைத், கத்தார் மற்றும் சவுதி அரேபியாவில் இதுபோன்ற மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

2024 ஆம் ஆண்டில், குவைத் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் 3 பேருக்கும், ஜிம்பாப்வேயில் ஒருவருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

2023 ஆம் ஆண்டில், குவைத் மற்றும் சவுதி அரேபியா ஆகிய இரு நாடுகளிலும் 5 பேருக்கும், மலேசியாவில் ஒருவருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது” என அமைச்சர் பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com