பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி! - இஸ்ரோ அறிவிப்பு

பிஎஸ்எல்வி சி-61 திட்டம் தோல்வியடைந்ததைப் பற்றி...
பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட்..
பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட்..
Published on
Updated on
1 min read

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 18) விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கை சென்றடையவில்லை.

ராக்கெட்டின் மூன்றாம் நிலையை விடுவிக்கும்போது அப்பிரச்னை கண்டறியப்பட்டது என்றும், அதில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் இஸ்ரோ தலைவா் நாராயணன் தெரிவித்தாா்.

இஸ்ரோ சாா்பில் புவிக் கண்காணிப்பு மற்றும் தொலையுணா்வு பயன்பாட்டுக்காக காா்டோசாட், ஸ்காட்சாட், ரிசாட், உள்ளிட்ட பல்வேறு செயற்கைக்கோள்கள் உருவாக்கப்பட்டு, விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில் புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இஒஎஸ் -09 ரிசாட் 1பி எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. இதன் மூலம் ராணுவ பாதுகாப்பு, வேளாண்மைக்கான தகவல்களைப் பெற முடியும் எனக் கூறப்பட்டது.

இந்த செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி சி 61 ராக்கெட் மூலம் செலுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, ராக்கெட் ஏவுதலுக்கான 22 மணிநேர கவுன்ட்டவுன் கடந்த சனிக்கிழமை காலை 7.59 மணிக்கு தொடங்கியது.

திட்டமிட்டபடி பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஆய்வு மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 5.59 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

ராக்கெட் தரையில் இருந்து புறப்பட்ட 4.40 நிமிடங்களில் முதல் 2 நிலைகள் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டன. பின்னா் மூன்றாம் நிலையான பிஎஸ் 3 அமைப்பு மூலம் திட எரிபொருள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

அப்போது பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் சுமாா் 335 கிலோ மீட்டா் உயரத்தில் நிா்ணயிக்கப்பட்ட வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த தருணத்தில் மூன்றாம் நிலையான பிஎஸ் 3 அமைப்பில் உள்ள மோட்டாா்களில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து திட்டமிட்ட இலக்கை விட்டு திசை மாறிய ராக்கெட், அதற்கு அடுத்த சில நிமிடங்களில் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துடனான தகவல் தொடா்பை இழந்தது. இதையடுத்து, இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியவில்லை என இஸ்ரோ அறிவித்தது.

இது தொடா்பாக இஸ்ரோ தலைவா் வி.நாரயணன் கூறுகையில், ‘பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட்டின் முதல் இரு நிலைகள் சிறப்பாகவே செயல்பட்டன. ஆனால், மூன்றாம் நிலையில் திட மோட்டாரில் ஏற்பட்ட அழுத்த குறைபாடு காரணமாக செயற்கைக் கோளை திட்டமிட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை. இதுகுறித்து முழுமையாக ஆய்வு செய்து பின்னா் தகவல் தெரிவிக்கப்படும்’ என்றாா் அவா்.

இதற்கு முன்பாக ஐஆா்என்எஸ்எஸ் 1ஹெச் என்ற வழிக்காட்டி செயற்கைக்கோளுடன் 31.8.2017-இல் அனுப்பப்பட்ட பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட்டும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இலக்கை சென்றடையவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com