கர்நாடகத்தில் கனமழை, நிலச்சரிவால் 5 பேர் பலி! மீட்புப் பணிகள் தீவிரம்!

கர்நாடகத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ளனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

கர்நாடகத்தின் கடலோர மாவட்டத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ளனர்.

கடலோர மாவட்டமான தக்‌ஷின கன்னடா மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வீட்டின் சுவர் இடிந்தச் சம்பவங்களினால் 5 பேர் பலியாகியுள்ளனர்.

தக்‌ஷின கன்னடா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், நேற்று (மே 29) இரவு மோண்டேபடவு கொடி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்குள்ள வீடொன்று முழுவதுமாக மண்ணில் புதைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்த வீட்டின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஒரு பெண் மற்றும் அவரது குழந்தை மீட்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஆனால், அந்தப் பெண்ணின் மற்றொரு குழந்தை பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், அதிகாலை 4 மணியளவில் புஜாரி குடும்பத்தினரின் வீடும் நிலச்சரிவில் சிக்கியுள்ளது. அப்போது, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அஷ்வினி என்ற பெண், நிலச்சரிவில் வீடு இடிந்தபோது தனது உடலைக் கொண்டு மறைத்து அவரது குழந்தைகளைக் காப்பாற்ற முயற்சித்துள்ளார்.

பின்னர், இடிபாடுகளுக்குள் சிக்கிய அவர்களை நிலச்சரிவு ஏற்பட்டு கொண்டிருந்த ஆபத்தான சூழலிலேயே அக்கம் பக்கத்தினர் மீட்டுள்ளனர். இருப்பினும், அவரது குழந்தைகளான ஆரியன் (வயது 3), ஆருஷ் (2) மற்றும் அவர்களது பாட்டி பிரேமா புஜாரி ஆகியோர் பலியானதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்தச் சம்பவத்தில் அஷ்வினியின் கணவர் அதிர்ஷடவசமாக உயிர்தப்பிய நிலையில் இடிபாடுகளில் சிக்கிய அவரது தந்தை கண்டப்பா புஜாரி உள்ளூர் மக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, வெளியான விடியோக்களில் இடிபாடுகளிலிருந்து குழந்தை ஆருஷ் தவழ்ந்து தப்பிக்க முயன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அப்பகுதியின் நிலையற்ற நிலப்பரப்பினாலும் அங்கு மீட்புப் பணிகளை மேற்கொள்வது மிகவும் சிரமமாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், மாநில காவல் துறையினர் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல், மங்களூரின் தெராலாகட்டே பகுதியில் கனமழையால் இன்று (மே 30) காலை சுற்றுச்சுவர் இடிந்து ஃபாத்திமா நயீம் (வயது 6) என்ற சிறுமி பலியாகியுள்ளார்.

இத்துடன், தக்‌ஷின கன்னடாவின் அமர் ஜாலு கிராமத்தில் நேற்று (மே 30) பெய்த கனமழைக்கு நடுவே அங்குள்ள மின்கம்பத்தில் உயர்மின் அழுத்த கம்பியைச் சீராக்க முயன்ற மின்வாரிய ஊழியரான விஜேஷ் ஜெயின் (27) என்பவர் மின்சாரம் பாய்ந்து பலியாகியுள்ளார்.

கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை அதிகரித்து வரும் சூழலில் அங்குள்ள தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களுக்கு அம்மாநில அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தக்‌ஷின கன்னடா மாவட்டத்தில் நிகழ்ந்த நிலச்சரிவுகள் மற்றும் சுவர் இடிந்தச் சம்பவங்கள் குறித்த முழுமையானத் தகவல்களைப் பெற்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா, அம்மாவட்ட பொறுப்பு அமைச்சர் தினேஷ் குண்டு ராவ்-ஐ உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: பிரசார நடைப்பயணத்தில் பெண்களுக்கு குங்குமம்? பாஜக மறுப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com