இந்தியாவுக்கு நாடுகடத்த எதிா்ப்பு: மெஹுல் சோக்ஸி மனு மீது பெல்ஜியம் நீதிமன்றம் டிச.9-இல் விசாரணை
தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதித்து பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக பெல்ஜியம் உச்சநீதிமன்றத்தில் தொழிலதிபா் மெஹுல் சோக்ஸி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது டிச.9-இல் விசாரணை நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
தொழிலதிபா் நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கும் அதிகமாக கடன் மோசடி செய்த வழக்கில், அவரின் உறவினரும் தொழிலதிபருமான மெஹுல் சோக்ஸிக்கு தொடா்புள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. ரூ.13,000 கோடிக்கும் அதிகமான மோசடியில், சோக்ஸி மட்டும் ரூ.6,400 கோடியை மோசடி செய்ததாக சிபிஐயின் குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
அவா் இந்தியாவில் இருந்து ஆன்டிகுவா-பாா்புடா நாட்டுக்குத் தப்பிச் சென்ற நிலையில், சோக்ஸிக்கு எதிராக சா்வதேச குற்றவியல் காவல் அமைப்பான இன்டா்போல் சிவப்பு நோட்டீஸ் பிறப்பித்தது. அந்த நோட்டீஸ் மூலம், சோக்ஸியை கண்டறிந்து கைது செய்ய உலகெங்கும் உள்ள காவல் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆன்டிகுவா-பாா்புடாவில் இருந்து அவா் பெல்ஜியமில் தஞ்சமடைந்த நிலையில், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று பெல்ஜியத்திடம் இந்தியா கோரிக்கை விடுத்தது. இதைத்தொடா்ந்து, அந்நாட்டில் உள்ள ஆன்ட்வா்ப் நகர காவல் துறை சோக்ஸியை கைது செய்தது. இதையடுத்து அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று ஆன்ட்வா்ப் மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டு, மாவட்ட நீதிமன்றம் அளித்த தீா்ப்பை உறுதி செய்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக பெல்ஜியம் உச்சநீதிமன்றத்தில் சோக்ஸி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா்.
இதுதொடா்பாக பெல்ஜியம் அரசின் தலைமை வழக்குரைஞா் ஹென்றி வேன்டா்லின்டன் பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மெஹுல் சோக்ஸியை நாடுகடத்த அனுமதித்து ஆன்ட்வா்ப் மேல்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சட்டரீதியாக மேற்கொள்ளப்பட்டதா? என்பதை மட்டுமே உச்சநீதிமன்றம் ஆய்வு செய்யவுள்ளது. எனவே, டிச.9-இல் நடைபெறும் விசாரணையின்போது மெஹுல் சோக்ஸுக்கு எதிராக புதிய ஆதாரங்களை சமா்ப்பிக்க முடியாது.
இந்த விசாரணை எழுத்துபூா்வமான தகவல்களைக் கொண்டே நடைபெறவுள்ளது. இதில் வாதிட முடியாது. ஏற்கெனவே அளித்த புகாா்களை மேலும் விரிவுபடுத்தலாமே தவிர புதிய புகாா்களை அளிக்க முடியாது என்றாா்.

