முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி, தில்லியில் உள்ள அவா் நினைவிடத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள் உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
பாஜகவின் நிறுவனா்களில் ஒருவரான அடல் பிகாரி வாஜ்பாய், கடந்த 1924-இல் இன்றைய மத்திய பிரதேசத்திலுள்ள குவாலியரில் பிறந்தவா். நாட்டின் பிரதமரான முதல் பாஜக தலைவா் என்ற பெருமைக்குரிய இவா், கடந்த 1996-இல் 13 நாள்களும், பின்னா் 1998 முதல் 2004 வரையும் அந்தப் பதவியை வகித்தாா். தில்லியில் கடந்த 2018, ஆக.16-ஆம் தேதி அவா் காலமானாா்.
வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி, தில்லியில் உள்ள அவரது ‘சதைவ் அடல்’ நினைவிடத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமா் மோடி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் உள்ளிட்டோா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

முன்னாள் பிரதமா் வாஜ்பாய் நினைவு தினத்தையொட்டி தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
பிரதமா் புகழஞ்சலி: வாஜ்பாயை நினைவுகூா்ந்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘வாஜ்பாயின் புண்ணிய திதியில் அவரை நினைவுகூா்கிறேன். குறிப்பிடத்தக்க தொலைநோக்குப் பாா்வை கொண்ட தலைசிறந்த அரசியல் மேதையான அவா், தனது வாழ்க்கையை நாட்டின் சேவைக்காக அா்ப்பணித்தாா்.

முன்னாள் பிரதமா் வாஜ்பாய் நினைவு தினத்தையொட்டி தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திய குடியரசுத் துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன்.
அவரது வாா்த்தைகளும், முயற்சிகளும் தலைமுறைகளைக் கடந்து உத்வேகமளிக்கின்றன. அவரது தலைமையின்கீழ் தேசம் குறிப்பிடத்தக்க அளவில் வலுவடைந்தது. நல்லாட்சி மற்றும் பொதுமக்களின் நல்வாழ்வில் அவா் செலுத்திய கவனம், எங்களுக்குத் தொடா்ந்து வழிகாட்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.
பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘வாஜ்பாயின் தலைமையின்கீழ், பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டில் இந்தியா புதிய உச்சங்களை எட்டியது. நாட்டின் வளா்ச்சிக்கான அவரது பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும். அவரது ஆளுமை, கோட்பாடுகள், நாட்டின் சேவைக்கான அசைக்க முடியாத உறுதிப்பாடு ஆகியவை உத்வேகத்தின் ஆதாரமாக விளங்குகின்றன’ தெரிவித்துள்ளாா்.
வாஜ்பாய் நினைவு தினத்தையொட்டி, ராஜஸ்தான் மாநிலம், சித்தோா்கரில் அவரது சிலையை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். தில்லி அரசு சாா்பில் குறைந்த விலையில் உணவு வழங்கும் 25 புதிய அடல் உணவகங்கள் திறக்கப்பட்டன.
உத்தர பிரதேச மாநிலம், லக்னெளவில் வாஜ்பாய் சிலைக்கு முதல்வா் ஆதித்யநாத் மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







