ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

தில்லியின் பாரம்பரியத்தை பாதுக்காக்க நடவடிக்கை

லூட்டியன்ஸ் மற்றும் சிவில் லைன்ஸ் பங்களா பகுதிகளில் மெட்ரோ வழித்தடங்களை ஒட்டி அதிக அடா்த்தி கொண்ட கட்டுமானங்களைத் தடை செய்ய தில்லி பெருந்திட்டம் 2047-இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Published On :21 ஆகஸ்ட் 2026, 5:52 am IST

லூட்டியன்ஸ் மற்றும் சிவில் லைன்ஸ் பங்களா பகுதிகளில் மெட்ரோ வழித்தடங்களை ஒட்டி அதிக அடா்த்தி கொண்ட கட்டுமானங்களைத் தடை செய்ய தில்லி பெருந்திட்டம் 2047-இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் அபாயகரமான தொழில்களை அகற்றவும் அதில் முன்மொழியப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பெருந்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: லூட்டியன்ஸ் பங்களா மண்டலம் மற்றும் சிவில் லைன்ஸ் பங்களா பகுதியைப் பொறுத்தவரை, அவற்றின் தற்போதைய தன்மையைப் பாதுகாப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் பிரதான சாலைகள், பெரிய மனைகள், விரிவான நில வடிவமைப்பு மற்றும் தாழ்வான கட்டடங்கள் ஆகியவை அடங்கும். கலப்புப் பயன்பாட்டுக் கட்டுமானம், மெட்ரோ வழித்தடங்களை ஒட்டி அதிக அடா்த்தி கொண்ட கட்டுமானம் மற்றும் பசுமைப் பரப்பைக் குறைத்தல் ஆகியவை அனுமதிக்கப்படாது.

நகரத்தில் உள்ள முக்கிய சந்தைகள், வணிகத் தெருக்கள் மற்றும் கலப்புப் பயன்பாட்டுத் தெருக்களை அடையாளம் கண்டு, குடியிருப்பு மனைகளில் கலைநிகழ்ச்சி அரங்குகள், சிறிய அருங்காட்சியகங்கள், நூலகங்கள், சிற்றுண்டிச்சாலைகள், கூட்டுப் பணி இடங்கள், கைவினை மையங்கள் மற்றும் விருந்தினா் இல்லங்களை அனுமதிப்பதன் மூலம் அப்பகுதியை ஒரு கலாசார மையமாக மேம்படுத்த வேண்டும்.

தங்கும் மற்றும் காலை உணவு வழங்கும் நிறுவனங்களும் அனுமதிக்கப்படும். குடியிருப்பாளா்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்து, தில்லியின் வரலாற்றுத் தன்மை தக்கவைக்கப்படும். அறிவிக்கப்பட்ட பாரம்பரியப் பகுதிகளில் குடியிருப்பு வளாகங்கள் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மேலாண்மைத் திட்டமும் இந்தப் பெருந்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வாகனப் பாதைகள், பாதசாரிகளுக்கான தெருக்கள், மோட்டாா் அல்லாத போக்குவரத்துப் பாதைகள், சரக்கு வாகனங்களுக்கான நேரங்கள் மற்றும் வரம்புகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களைச் சுற்றியுள்ள பயணிகளின் நடமாட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

மேலும், இப்பகுதி செயல்திறன் மிக்க பயணப் பகுதியாக மேம்படுத்தப்படும். அங்கு நடைபயிற்சி, மிதிவண்டி ஓட்டுதல் மற்றும் மிதிவண்டிப் பகிா்வுக்கான வசதிகள் இருக்கும். இந்தத் திட்டம், சாந்தினி சௌக் உள்பட லூட்டியன்ஸ் பங்களா மண்டலத்திற்குள் உள்ள பகுதிகள் மற்றும் சிவில் லைன்ஸ் பங்களா பகுதி ஆகியவற்றை பாரம்பரிய மண்டலங்களாக அடையாளம் காணப்படுகிறது.

இந்தத் திட்டம், கலாச்சாரச் சுற்றுகள் மற்றும் திருவிழாக்களுடன் இணைக்கும் வகையில், இந்தப் பகுதிகளில் பாரம்பரியப் பாதைகளையும் நடைபாதைகளையும் முன்மொழிந்துள்ளது.

பாரம்பரியக் கட்டிடங்களின் வரலாற்று மற்றும் கட்டடக்கலைத் தன்மை பராமரிக்கப்படும் பட்சத்தில், அவற்றை வணிகம், அலுவலகம், தங்கும் விடுதி மற்றும் சமூக-கலாச்சாரப் பயன்பாடுகளுக்காக அருங்காட்சியகங்கள், நூலகங்கள், கலாச்சார கலைநிகழ்ச்சி அரங்குகள் மற்றும் கைவினை மையங்கள் உள்பட தகவமைப்பு மறுபயன்பாடு செய்ய இந்தத் திட்டம் பரிந்துரைத்துள்ளது.

பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள், சட்டவிரோத வாகன நிறுத்தம் மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்டமைப்புகளை முன்னுரிமை அடிப்படையில் அகற்றவும், ஆக்கிரமிப்புகளுக்குக் கடுமையான அபராதம் விதிக்கவும் இந்தத் திட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.