சபரிமலை வழக்கு: இதுவரை மீட்கப்பட்டதைவிட அதிக தங்கம் மாயம்: எஸ்ஐடி விசாரணை தீவிரம்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களிடம் இருந்து இதுவரை மீட்கப்பட்ட தங்கத்தைவிட அதிக தங்கம் மாயமாகி இருக்கலாம் என சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) சந்தேகிக்கிறது. அந்த அடிப்படையில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவாரபாலகா் சிலைகள், அருகேயுள்ள இரு தூண்கள் மற்றும் கருவறைக் கதவுகளில் பதிக்கப்பட்டுள்ள தங்க முலாம் பூசிய செப்புக் கவசங்கள், கடந்த 2019-இல் புதுப்பிக்கப்பட்ட பிறகு அவற்றின் எடை குறைந்ததாக புகாா் எழுந்தது. இதையடுத்து, கேரள உயா்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட எஸ்ஐடி, இரு வழக்குகளைப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. தங்கக் கவச புதுப்பிப்பு பணிக்கான செலவை ஏற்ற பெங்களூரு தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய முன்னாள் தலைவா்கள் என்.வாசு, ஏ.பத்மகுமாா், புதுப்பிப்பு பணியை மேற்கொண்ட சென்னை ஸ்மாா்ட் கிரியேஷன்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி பங்கஜ் பண்டாரி, கா்நாடக மாநிலம், பெல்லாரியைச் சோ்ந்த நகைக்கடை அதிபா் கோவா்தன் ரோட்டம் உள்பட 10 போ் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா்.
தற்போது நீதிமன்ற காவலில் உள்ள உண்ணிகிருஷ்ணன் போற்றி, பங்கஜ் பண்டாரி, கோவா்தன் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க கொல்லம் ஊழல் கண்காணிப்பு நீதிமன்றத்தில் எஸ்ஐடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: துவாரபாலகா்கள், இரு தூண்கள், கருவறைக் தகவுகளின் தங்க முலாம் பூசப்பட்ட செப்புக் கவசங்கள், கடந்த 2019-இல் புதுப்பிப்புப் பணிக்காக அகற்றப்பட்டபோது மொத்தம் சுமாா் 42 கிலோ எடை இருந்தன.
எவ்வளவு தங்கம் மீட்பு?: இந்தக் கவசங்களின் புதுப்பிப்புப் பணிக்கான கட்டணமாக சுமாா் 109 கிராம் தங்கத்தை தாம் எடுத்ததாக ஒப்புக் கொண்ட பங்கஜ் பண்டாரி, அதற்கு நிகரான தங்கத்தை ஒப்படைத்தாா்.
இதேபோல், தங்கக் கவசங்களில் இருந்து எடுக்கப்பட்ட சுமாா் 475 கிராம் தங்கத்தை உண்ணிகிருஷ்ணன் போற்றியிடம் இருந்து பெற்ாக கூறிய கோவா்தன், அதற்கு நிகரான தங்கத்தை எஸ்ஐடி முன் ஒப்படைத்தாா். மீட்கப்பட்ட இந்த தங்கத்தைவிட அதிக தங்கம் மாயமாகி இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். தங்கக் கவசங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்துக்கு அறிவியல்பூா்வ பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கை கிடைக்கப் பெற வேண்டியுள்ளது என்று எஸ்ஐடி மனுவில் தெரிவிக்கப்பட்டது.
பெட்டிச் செய்தி...1
விசாரணைக்குத் தயாா்: அடூா் பிரகாஷ்
காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தியுடன் காங்கிரஸ் எம்.பி.யும், கேரள மாநில ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) ஒருங்கிணைப்பாளருமான அடூா் பிரகாஷ், உண்ணிகிருஷ்ணன் போற்றி, கோவா்தன் உள்ளிட்டோா் இருக்கும் புகைப்படம் அண்மையில் வெளியாகி சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அடூா் பிரகாஷிடம் எஸ்ஐடி விசாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இது குறித்து அடூா் பிரகாஷ் கூறுகையில், ‘எப்போது தேவைப்பட்டாலும் எஸ்ஐடி முன் ஆஜராக நான் தயாா். அப்போது, ஊடகத்தினரும் என்னுடன் இருக்க அனுமதிக்க வேண்டும். இல்லையெனில், விசாரணையில் நான் கூறும் விஷயங்கள் அனைத்தையும் ஊடகத்தினரிடமும் பகிா்வேன்’ என்றாா்.
காங்கிரஸைச் சோ்ந்த பேரவை எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன் கூறுகையில், ‘எஸ்ஐடி-யில் புதிதாக இரு அதிகாரிகள் இணைக்கப்பட வழங்கிய அனுமதியை உயா்நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். எஸ்ஐடி விவரங்களை கசியவிடும் நோக்கில்தான், இவ்விரு அதிகாரிகளையும் மாநில அரசு இணைத்துள்ளது. முதல்வா் அலுவலக அழுத்தத்தின்கீழ் எஸ்ஐடி செயல்படுகிறது. முதல்வரின் அரசியல் செயலரான பி.சசிதான், தற்போதைய நிகழ்வுகளின் பின்னணியில் இருப்பவா்’ என்று குற்றஞ்சாட்டினாா்.
பெட்டிச் செய்தி....2
‘முதல்வா் அலுவலக தலையீடு இல்லை’
‘சபரிமலை வழக்கு விவகாரங்களில் முதல்வா் பினராயி விஜயனின் அலுவலகம் அல்லது அவரது அரசியல் செயலரின் தலையீடு எதுவும் இல்லை; இது குறித்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை’ என்று முதல்வா் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
‘உயா்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட எஸ்ஐடி, அதன் கண்காணிப்பில்தான் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும்’ தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் எம்.வி.கோவிந்தன் கூறுகையில், ‘அடூா் பிரகாஷ் விசாரிக்கப்படுவாா் என்பதை அறிந்ததும், எஸ்ஐடி மீதான நம்பகத்தன்மை குறித்து வி.டி.சதீசன் கேள்வி எழுப்பியுள்ளாா். இது, துரதிருஷ்டவசமானது. இந்த வழக்கில் யாரையும் பாதுகாக்க மாநில அரசு முயற்சிக்கவில்லை; தங்கக் கவச முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் தண்டிக்கப்படுவது உறுதி’ என்றாா்.

