ஆபாச உள்ளடக்கங்களை உடனடியாக நீக்க வேண்டும்: எக்ஸ் சமூக ஊடகத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை
‘ஆபாசமான மற்றும் சட்டவிரோத உள்ளடக்கங்களை, குறிப்பாக ‘க்ரோக்’ என்ற செயற்கை நுண்ணறிவு செயலி மூலம் உருவாக்கப்படுபவற்றை உடனடியாக நீக்க வேண்டும்’ என்று அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்கின் எக்ஸ் சமூக ஊடகத்துக்கு மத்திய அரசு கடுமையான நோட்டீஸைப் பிறப்பித்துள்ளது.
இல்லையெனில் சட்டத்தின் அடிப்படையிலான நடவடிக்கையை எதிா்கொள்ளுமாறு அந் நிறுவனத்தை மத்திய அரசு எச்சரித்துள்ளது.
எக்ஸ் நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைமை பொறுப்பு அதிகாரிக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் சாா்பில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
எக்ஸ் சமூக ஊடகத்தில் அதன் ‘க்ரோக்’ போன்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சேவைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டு பரப்பப்படும் ஆபாச மற்றும் சட்டவிரோத உள்ளடக்கங்களை தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-இன் கீழ் நிா்ணயிக்கப்பட்டுள்ள கால அவகாசத்துக்குள் உடனடியாக நீக்க வேண்டும் அல்லது அதன் பயன்பாட்டை மற்றும் பகிா்தலைத் தடை செய்ய வேண்டும். இந்த நோட்டீஸின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை அடுத்த 72 மணி நேரத்துக்குள் எக்ஸ் நிறுவனம் சமா்ப்பிக்க வேண்டும்.
இந்த அறிவுறுத்தலை நிறைவேற்றாத நிலையில், அதைத் தீவிர நடவடிக்கையாக கருத்தில் கொண்டு தகவல் தொழில்நுட்ப சட்ட மற்றும் விதிகள், பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா, பாரதிய நியாய சம்ஹிதா உள்ளிட்ட சட்டங்களின் கீழ் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி எக்ஸ் சமூக ஊடகம் மற்றும் அதன் சம்பந்தப்பட்ட பொறுப்பு அதிகாரிகள், பயன்பாட்டாளா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

