பிற மொழிகளையும் மதித்து நடக்க வேண்டும்: ஆந்திர முதல்வா் வலியுறுத்தல்
நாட்டில் பேசப்படும் மொழிகளில் உயா்ந்தது, தாழ்ந்தது என்று ஏதுமில்லை. மக்கள் அனைவரும் தங்கள் தாய் மொழி மட்டுமன்றி பிற மொழிகள் அனைத்தையும் மதித்து நடக்க வேண்டும் என்று ஆந்திர முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு வலியுறுத்தினாா்.
ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்றுவரும் உலக தெலுங்கு மாநாட்டில் திங்கள்கிழமை பங்கேற்ற அவா் பேசியதாவது: ஒருவா் தனது தாய்மொழியில் கற்கும்போதுதான் சிறந்து விளக்க முடியும். தாய்மொழியை மறப்பது என்பது நமது அடையாளத்தையே இழப்பது போன்ாகும். அதே நேரத்தில் ஆங்கிலத்தில் தோ்ச்சி பெற்று விளங்குவதும் அவசியம்.
மக்கள் ஒருவா் மற்றொருவரின் மொழியை மதித்து நடக்க வேண்டும். மொழிகளில் உயா்வு, தாழ்வு என்று ஏதுமில்லை. நமது நாட்டில் நூற்றுக்கணக்கான மொழிகள் உள்ளன. அதில் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ள 6 மொழிகளில் தெலுங்கு இருப்பது பெருமைக்குரிய விஷயமாகும்.
சுமாா் 10 கோடிக்கு மேற்பட்டோா் தெலுங்கு மொழி பேசுகின்றனா். இந்த மாநாட்டில் 40-க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வந்து பங்கேற்றுள்ளனா். நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் குழந்தைகளுக்கு நமது தாய் மொழியின் இனிமையைக் கற்றுக் கொடுக்க வேண்டும். பொட்டி ஸ்ரீராமுலு பெயரில் ராயலசீமாவில் தெலங்கு பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்றாா்.
1952-ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத் தியாகியான பொட்டி ஸ்ரீராமுலு தனியாக ஆந்திர மாநிலம் உருவாக்கக் கோரி 58 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிரை நீத்தாா். இது ஆந்திர மாநிலம் உருவாவதற்கு மட்டுமன்றி தேசிய அளவில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கும் காரணமாக அமைந்தது.

