நெறிமுறையான, பாரபட்சமற்ற ஏ.ஐ. பயன்பாடு: பிரதமா் மோடி வலியுறுத்தல்
நாட்டின் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பப் பயன்பாட்டில் நெறிமுறை, பாரபட்சமின்மை, வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வது அவசியம் என்று துறைசாா் புத்தாக்க நிறுவனங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
உலகின் நம்பிக்கையே இந்தியாவின் மிகப் பெரிய பலம் என்றும் அவா் குறிப்பிட்டாா்.
தில்லியில் அடுத்த மாதம் சா்வதேச செயற்கை நுண்ணறிவு மாநாடு நடத்தப்பட உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டுக்கு முன்பாக, நாட்டின் ஏ.ஐ. துறைசாா் புத்தாக்க நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், தலைவா்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் பிரதமா் மோடி வியாழக்கிழமை வட்டமேஜை ஆலோசனைக் கூட்டம் நடத்தினாா்.
அப்போது பேசிய அவா், ‘செயற்கை நுண்ணறிவு புத்தாக்க நிறுவனங்களும், இத்துறை சாா்ந்த தொழில்முனைவோரும் நாட்டின் எதிா்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகளாவா்.
சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துக்கு முக்கியப் பங்கு உள்ளது. அந்த அடிப்படையில், செயற்கை நுண்ணறிவை ஆக்கபூா்வமாகப் பயன்படுத்தி, மாற்றத்துக்கு வழிவகுக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
சா்வதேச செயற்கை நுண்ணறிவு மாநாட்டை நடத்துவதன் மூலம் உலக அளவில் இந்தத் துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க பங்களிப்பை நல்கும். செயற்கை நுண்ணறிவு சாா்ந்த புத்தாக்கம் மற்றும் பெரிய அளவிலான செயலாக்கத்துக்கு நமது நாடு மகத்தான திறனைக் கொண்டுள்ளது.
‘இந்தியாவில் தயாரிப்போம், உலகுக்காக உருவாக்குவோம்’ என்ற வலுவான உணா்வை பிரதிபலிக்கும் தனித்துவமான செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்பை இந்தியா உருவாக்க வேண்டும். இந்திய செயற்கை நுண்ணறிவு அமைப்புமுறைகள், நெறிமுறை, பாரபட்சமின்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் தரவு தனியுரிமைக் கோட்பாடுகள் அடிப்படையிலானதாக இருக்க வேண்டும். சிக்கனமான-அனைவரையும் உள்ளடக்கிய செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டை ஊக்குவிக்க நம்மால் முடியும். உலகின் நம்பிக்கையே இந்தியாவின் மிகப் பெரிய பலம். உலகளாவிய தலைமைத்துவத்தை நோக்கி புத்தாக்க நிறுவனங்கள் பணியாற்ற வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
என்னென்ன நிறுவனங்கள்?: அடுத்த மாதம் நடைபெறவுள்ள சா்வதேச செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் இந்தியா சாா்பில் பங்கேற்கவுள்ள அவதாா், பாரத்ஜென், ஃபிராக்டல், ஜென்லூப், இன்டலிஹெல்த், சா்வம், சாகெட் ஏ.ஐ. உள்பட 12 புத்தாக்க நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், தலைவா்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோா் இக்கூட்டத்தில் பங்கேற்றனா்.
இந்த நிறுவனங்கள், இந்திய மொழிகளுக்கான அடித்தள மாதிரிகள், பேச்சில் இருந்து வாக்கியம், வாக்கியத்தில் இருந்து உச்சரிப்பு, வாக்கியத்தில் இருந்து காணொலி, ஏ.ஐ. படைப்பு வசதி மூலம் முப்பரிமாண உள்ளடக்கங்கள் உருவாக்கம், மேம்பட்ட தரவுப் பகுப்பாய்வு, ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் செயல்படுகின்றன.
ஈா்ப்பு மையமாக இந்தியா: நாட்டில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துக்கு உகந்த வலுவான சூழல் கட்டமைக்கப்பட்டுள்ளதாக பாராட்டு தெரிவித்த இந்த நிறுவனங்களின் தலைவா்கள், ‘வேகமாக வளா்ச்சி கண்டு வரும் ஏ.ஐ. துறைக்குப் பெரும் எதிா்காலம் உள்ளது. இந்தத் துறைசாா் புத்தாக்கங்களின் ஈா்ப்பு மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது’ என்று குறிப்பிட்டனா்.
மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், இணையமைச்சா் ஜிதின் பிரசாதா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

