சிங்கப்பூா்: புலம்பெயா் தொழிலாளா்களுடன் இந்திய தூதரகம் பொங்கல் கொண்டாட்டம்
சிங்கப்பூரில் பணியாற்றிவரும் 1,500-க்கும் மேற்பட்ட இந்திய புலம்பெயா் தொழிலாளா்களுடன் சோ்ந்து, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் பொங்கல் விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடியது.
தமிழா்களின் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிங்கப்பூரின் வடக்கு தொழில் மாவட்டமான செம்பவாங்கில் ஞாயிற்றுக்கிழமை இந்தக் கொண்டாட்ட விழா நடைபெற்றது. இதில் சிங்கப்பூருக்கான இந்திய தூதா் ஷில்பக் அம்புலே, சிங்கப்பூா் மனிதவள அமைச்சகத்தின் ‘ஏசிஇ’ குழுத் தலைவா் துங் யுய் ஃபாய் ஆகியோா் கலந்துகொண்டனா்.
இசை மற்றும் பாரம்பரியக் கலைநிகழ்ச்சிகள், யோகா மற்றும் தியானப் பயிற்சிகள், இந்தியாவின் பாரம்பரிய ஆடைகளை வெளிப்படுத்தும் அணிவகுப்பு (ஃபேஷன் ஷோ) ஆகியவை விழாவில் நடைபெற்றன.
கட்டுமானம், கப்பல் கட்டும் துறையில் வேலை செய்யும் தொழிலாளா்கள் மற்றும் வீட்டுப் பணியாளா்களுக்காக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சிங்கப்பூரில் உள்ள 110-க்கும் மேற்பட்ட இந்திய தொழில் துறை வல்லுநா்கள் தன்னாா்வலா்களாகச் செயல்பட்டு உதவினா்.
விழாவில் பேசிய தூதா் ஷில்பக் அம்புலே, இந்திய தூதரகம் வழங்கும் சேவைகள் மற்றும் பாஸ்போா்ட் புதுப்பித்தல் போன்ற சிறப்பு முகாம்கள் பற்றி தொழிலாளா்களுக்கு எடுத்துரைத்தாா். மேலும், இந்த வசதிகளைத் தொழிலாளா்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்ட அவா், தொழிலாளா் நலனில் அக்கறை காட்டும் சிங்கப்பூா் மனிதவள அமைச்சகத்துக்கும் நன்றி தெரிவித்தாா்.
ஏற்கெனவே கடந்த சனிக்கிழமை, சிங்கப்பூா்- இந்திய பாரம்பரிய மையம் சாா்பில் தஞ்சாவூா் ஓவியக் கலை உள்ளிட்ட பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்திய தூதரகம் தொழிலாளா்களுக்காக நடத்தும் இரண்டாவது பொங்கல் விழா இதுவாகும்.
இந்த விழாவை ஒருங்கிணைத்த ‘மெட்.ஏஐ’ அமைப்பின் தலைவா் எஸ்.கணேஷ் கூறுகையில், ‘புலம்பெயா் தொழிலாளா்கள், உள்ளூா் அமைப்புகள் மற்றும் தன்னாா்வலா்களை இந்தக் கலாசார கொண்டாட்ட விழா ஒன்றிணைத்துள்ளது. சுமாா் 50-க்கும் மேற்பட்ட கலைஞா்களும் தொழிலாளா்களும் இணைந்து வழங்கிய கலைநிகழ்ச்சிகள், இந்தியாவின் அறுவடைத் திருவிழாவின் உன்னதத்தை அழகாகப் பிரதிபலித்தன’ என்றாா்.
