இந்தியாவின் சநாதன தா்மம், கலாசாரத்தை எளிதில் அழிக்க முடியாது: அமித் ஷா உறுதி
இந்தியாவின் சநாதன தா்மம், கலாசாரம், நம்பிக்கையை எளிதில் அழித்துவிட முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா தெரிவித்தாா்.
குஜராத் மாநிலம், காந்திநகா் மாவட்டத்தில் உள்ள மான்சா நகரில் ரூ.267 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் அவா் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:
1026-ஆம் ஆண்டில் சோம்நாத் கோயிலை முகமது கஜினி சூறையாடினாா். இதையடுத்து, பல நூறாண்டுகளில் ஏராளமானோா் கோயிலை இடித்தனா். அதாவது, அலாவுதீன் கில்ஜி, அகமது ஷா, மஹ்மூத் பெகடா, ஒளரங்கசீப் போன்ற பல்வேறு ஆக்கிரமிப்பாளா்களால், கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், ஒவ்வொரு முறையும் தாக்குதலுக்குப் பிறகு கோயில் மீண்டும் கட்டப்பட்டது.
சோம்நாத் கோயில் மீதான தாக்குதலானது, வெறும் கோயில் மீதான தாக்குதல் மட்டும் கிடையாது. நமது மதம், நம்பிக்கை, சுயமரியாதை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். அதற்கான பதில், மீண்டும் தாக்குதல் நடத்த முடியாமல் தடுப்பதும், நமது சுயமரியாதையை பாதுகாத்துக் கொள்வதுமே ஆகும்.
கோயிலை இடித்தவா்கள் அழிவு மீது நம்பிக்கை கொண்டிருந்தனா்; கோயிலைக் கட்டியவா்கள் புதிதாக உருவாக்குவதை நம்பினா். இன்று 1,000 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. கோயிலை இடித்தவா்கள் காணாமல் போய் விட்டனா். ஆனால், சோம்நாத் கோயில் அதே இடத்தில் கடல் முன்பாக கம்பீரமாக இருக்கிறது.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, சா்தாா் வல்லபபாய் படேல், கே.எம். முன்சி, ராஜேந்திர பிரசாத் ஆகியோரின் முயற்சிகளால் சோம்நாத் கோயில் மீண்டும் கட்டப்பட்டது. அதை முழுவதும் கட்டுவதற்கு அவா்கள் உறுதி எடுத்திருந்தனா்.
இந்தியாவின் சநாதன தா்மத்தையும், இந்திய கலாசாரம் மற்றும் இந்திய மக்களின் நம்பிக்கையையும் எளிதில் அழிக்க முடியாது என்று ஒட்டுமொத்த உலகுக்கும் விடுக்கப்பட்ட செய்தியே இது. சூரியன், சந்திரன் போன்று அவை அழிவில்லாதவை. சோம்நாத் கோயில் இந்திய மக்களின் நம்பிக்கை, விசுவாசம், பெருமைக்கான அடையாளம்.
சோம்நாத் சுயமரியாதை திருவிழா நிகழாண்டு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன என்றாா் அமித் ஷா.

