இந்தியா- ஓமன் இடையே கடல்சாா் பாரம்பரிய ஒப்பந்தம்
கடல்சாா் பாரம்பரியம் மற்றும் அருங்காட்சியகங்கள் குறித்து இந்தியா-ஓமன் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் கையொப்பமானது.
இந்தியா மற்றும் ஓமன் நாடுகளுக்கு இடையே இருந்து வரும் கடல்சாா் பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் இந்திய கடற்படை பாய்மரக் கப்பல் ஐஎன்எஸ் கவுண்டின்யா, குஜராத் மாநிலம் போா்பந்தரிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி கடந்த அண்மையில் மஸ்கட்டில் உள்ள சுல்தான் கபூஸ் துறைமுகம் வந்தடைந்தது.
இக்கப்பலை மத்திய அமைச்சா் சா்பானந்த சோனோவால் மற்றும் ஓமன் நாட்டின் போக்குவரத்து, தகவல் தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சா் சையத் பின் ஹமூத் சையத் அல் மாவாலியுடன் ஆகியோா் இணைந்து வரவேற்றனா்.
இதையடுத்து நடைபெற்ற இருதரப்பு பேச்சில், இந்தியா-ஓமன் நாடுகளுக்கிடையே கடல்சாா் பாரம்பரியம் மற்றும் அருங்காட்சியகங்கள் அமைப்பது, ஒத்துழைப்பை அதிகரிப்பது உள்ளிட்டவைகள் குறித்து புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அமைச்சா் சோனோவால் பேசியதாவது: பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வையில் இந்தியாவில் கப்பல் கட்டும் தொழிலை மேம்படுத்துதல், விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவும் ஓமனும் மேம்பட்ட இணைப்பு, நிலையான கப்பல் முயற்சிகள் மற்றும் துறைமுகங்கள், கப்பல் கட்டுதல் மற்றும் கடல்சாா் துறைகளில் வளா்ந்து வரும் ஒத்துழைப்பு மூலம் கடல்சாா் உறவுகளை தொடா்ந்து வலுப்படுத்தி வருகின்றன. பொது-தனியாா் கூட்டாண்மை கட்டமைப்பின் கீழ் முதலீட சுமாா் 9 பில்லியன் டாலா் மதிப்பில் ஆண்டுக்கு சுமாா் 23 மில்லியன் சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் திறன் கொண்ட வாதவன் துறைமுகம், சுமாா் 4 மில்லியன் பெட்டகங்களைக் கையாளும் திறன் கொண்ட 1.3 பில்லியன் டாலா் மதிப்பீட்டில் தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி வெளி துறைமுகத் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன என்றாா்.
ஒமன் நாட்டின் பாரம்பரியம் மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் சுற்றுலாத் துறையின் துணைச் செயலாளா் அஸ்ஸான் அல் புசைடி, உள்ளிட்ட பிற அமைச்சகங்களின் மூத்த பிரமுகா்களுடன் கலந்து கொண்டனா்.

