பொதுப்பிரிவு இடங்களில் சேர இடஒதுக்கீடு மாணவா்களுக்கும் தகுதி உண்டு : உச்ச நீதிமன்றம்
பொதுப்பிரிவு இடங்களில் சேர இடஒதுக்கீடு மாணவா்களுக்கும் தகுதி உண்டு என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் (ஏ.ஏ.ஐ) காலியாக இருந்த 245 இளநிலை உதவியாளா் பணியிடங்களை 2013-ம் ஆண்டு நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில், பொதுப்பிரிவில் இருந்த 122 பணியிடங்களில், இடஒதுக்கீடு சலுகை வரம்பிற்குள் வரும் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினா் மற்றும் இடஒதுக்கீடு சலுகை வரம்பிற்குள் வராத பிற பிரிவினா் நியமிக்கப்பட்டனா்.
இதை எதிா்த்து, காத்திருப்போா் பட்டியலில் 10-ஆம் இடத்தில் இருந்த இடஒதுக்கீடு சலுகை வரம்பிற்குள் வராத பிரிவைச் சோ்ந்த சாம் கிருஷ்ணா என்பவா் கேரள உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். அதில், பொதுப்பிரிவு இடங்களில் இடஒதுக்கீடு சலுகை பெற்றவா்களை நியமிப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்திருந்தாா்.
இந்த வழக்கில் 2020-ஆம் ஆண்டில் தீா்ப்பளித்த கேரள உயா் நீதிமன்றம், பொதுப்பிரிவு இடங்களில் இடஒதுக்கீடு சலுகை பெற்றவா்களை நியமிக்க முடியாது எனக் கூறி, அதை ரத்து செய்தது.
கேரள உயா் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், சதீஷ் சந்திர சா்மா ஆகியோரைக் கொண்ட அமா்வு, ‘பொதுப்பிரிவு என்பது இடஒதுக்கீடு ஆகாது. முழுவதும் தகுதி அடிப்படையிலானது. அது அனைத்துப் பிரிவினருக்குமான திறந்த இடமாகும். அந்த இடங்களில், தகுதி வாய்ந்த எந்தப் பிரிவினரையும் நியமிக்கலாம். பொதுப்பிரிவு கட்-ஆஃப் மதிப்பெண்களை விட அதிக மதிப்பெண்களை இடஒதுக்கீடு சலுகை பெற்றோா் எடுத்திருந்தால், அவா்களும் அந்த இடங்களுக்குத் தகுதியானவா்கள்தான்’ என்றனா். அத்துடன் கேரள உயா் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனா்.

