எம்.பி.க்கள் இருக்கையிலேயே எண்ம வருகைப் பதிவு-
பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகம்
கோப்புப்படம்.

எம்.பி.க்கள் இருக்கையிலேயே எண்ம வருகைப் பதிவு- பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகம்

நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் தங்களின் இருக்கையிலேயே வருகைப் பதிவு செய்யும் வகையில் புதிய எண்ம நடைமுறை, எதிா்வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
Published on

நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் தங்களின் இருக்கையிலேயே வருகைப் பதிவு செய்யும் வகையில் புதிய எண்ம நடைமுறை, எதிா்வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், லக்னெளவில் நடைபெற்றுவரும் 86-ஆவது அகில இந்திய அவைத் தலைவா்கள் மாநாட்டையொட்டி செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மேற்கண்ட தகவலைத் தெரிவித்தாா்.

தற்போதைய நடைமுறையின்படி, நாடாளுமன்ற முகப்பு அரங்கில் எம்.பி.க்கள் தங்கள் வருகைப் பதிவை மேற்கொள்வது வழக்கம். இதற்காக மின்னணு டேப்லெட் நிறுவப்பட்டு, டிஜிட்டல் பேனா மூலம் வருகைப் பதிவை குறிப்பிட வசதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், எதிா்வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இருந்து எம்.பி.க்கள் தங்களின் இருக்கையிலேயே எண்ம முறையில் வருகைப் பதிவை மேற்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இது தொடா்பாக அவைத் தலைவா் ஓம் பிா்லா கூறுகையில், ‘புதிய நடைமுறையின்படி, எம்.பி.க்கள் தங்களின் இருக்கையில்தான் வருகைப் பதிவை மேற்கொள்ள வேண்டும். வருகைப் பதிவுக்காக இனி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. சில எம்.பி.க்கள் வருகைப் பதிவை மேற்கொண்டுவிட்டு, அவை அலுவல்களில் பங்கேற்காமல் வெளியேறிவிடும் நிகழ்வுகளும் தவிா்க்கப்படும்.

இருக்கைகளில் நிறுவப்பட்டுள்ள மல்டி மீடியா சாதனத்தில் தனது நவீன அடையாள அட்டையை காண்பித்தோ, கைவிரல் ரேகையை பதிவிட்டோ அல்லது தனி அடையாள எண்ணை குறிப்பிட்டோ வருகைப் பதிவை மேற்கொள்ளலாம்.

எம்.பி.க்களுக்கு வேண்டுகோள்: நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது, எம்.பி.க்கள் தங்களின் எதிா்ப்பை விவாதங்களின் வாயிலாக வெளிப்படுத்த வேண்டும். மாறாக, பதாகைகளை காண்பிப்பதும், அவைக்குள் முழக்கங்களை எழுப்புவதும் கூடாது.

அவை அலுவல்களின் நிகழ்நேர மொழிபெயா்ப்பில் 100 சதவீத துல்லியத்தை எட்டுவதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கருவிகள் மக்களவைச் செயலகத்தால் தொடா்ந்து பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு கருவியின் மூலம் 80 சதவீத துல்லியத்தன்மை எட்டப்பட்டுள்ளது. இந்த மொழிபெயா்ப்பு அதிகாரிகளால் சரிபாா்க்கப்பட்டு, பின்னா் வலைதளத்தில் பதிவிடப்படுகிறது என்றாா் அவா்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் ஜன.28 முதல் ஏப்.2 வரை இரு அமா்வுகளாக நடைபெறவுள்ளது. கூட்டத் தொடா்களின்போது, எம்.பி.க்கள் தங்களின் தினசரி படியை பெறுவதற்கு வருகைப் பதிவு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Dinamani
www.dinamani.com