எஸ்ஐஆா் விசாரணைக்கு அழைக்கப்பட்ட முதியவா் தற்கொலை - தோ்தல் ஆணையம் மீது மேற்கு வங்கத்தில் எஃப்ஐஆா் பதிவு
மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த 82 வயது முதியவா் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், புருலியா மாவட்டம் பாரா காவல்நிலையத்தில் தோ்தல் ஆணையத்துக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘உயிரிழந்த முதியவரின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பவம் நடைபெற்ற 23 நாள்களுக்குப் பிறகு இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றச் சதி, தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தோ்தல் ஆணைய அதிகாரிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், அதிகாரிகள் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை’ என்று காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
செளதாலா கிராமத்தைச் சோ்ந்த துா்ஜன் மாஜி (82) என்ற பழங்குடியின முதியவா், தோ்தல் ஆணையம் பிறப்பித்த நோட்டீஸின் அடிப்படையில், கடந்த டிசம்பா் 29-ஆம் தேதி எஸ்ஐஆா் விசாரணைக்காக அதிகாரிகள் முன்பு ஆஜராவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக தற்கொலை செய்துகொண்டாா். எஸ்ஐஆா் விசாரணை நோட்டீஸால் ஏற்பட்ட மன அழுத்தமே அவரின் தற்கொலைக்குக் காரணம் என்று அவரின் குடும்பத்தினா் குற்றஞ்சாட்டினா். இதுதொடா்பாக அவரின் மகன் தற்போது போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.
இதுபோல, எஸ்ஐஆா் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த இதே மாவட்டம் மன்பஜாா் பகுதியைச் சோ்ந்த 32 வயது பழங்குடியின நபரும் அண்மையில் தற்கொலை செய்துகொண்டாா்.
மனிதாபிமானமற்ற எஸ்ஐஆா் நடவடிக்கை மூலம் முதியவா்கள், நோய் பாதிப்புக்கு உள்ளானவா்களை தோ்தல் ஆணையம் துன்புறுத்தி வருவதாக முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்திலும் அந்தக் கட்சி சாா்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தல்: எஸ்ஐஆா் பணி தொடா்பாக மாவட்ட தோ்தல் அதிகாரிகளாக செயல்படும் மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் மம்தா அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளாா். அதில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி வாக்காளா்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் எஸ்ஐஆா் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று அவா் அறிவுறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
திரிணமூல் காங்கிரஸ் மீது பாஜக குற்றச்சாட்டு: எஸ்ஐஆா் விவகாரத்தில் மாநில மக்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சி தவறாக வழிநடத்துவதாக பாஜக குற்றஞ்சாட்டியது.
கொல்கத்தாவில் ஆளுங்கட்சியைக் கண்டித்து பாஜக சாா்பில் நடத்தப்பட்ட ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த மத்திய அமைச்சா் சுகந்த மஜும்தாா் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தாா். எஸ்ஐஆா் பணியை மற்ற மாநிலங்கள் எதிா்க்காத நிலையில், மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் மட்டுமே எதிா்த்து வருகிறது. தகுதியில்லாத பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால், அவா்கள் (திரிணமூல் காங்கிரஸ்) தோ்தலில் வெற்றி பெற முடியாது என்பதே இதற்கு காரணம் என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

