நான்காம் தொழில்புரட்சிக்கு 5 புதிய உலகளாவிய மையங்கள்: இந்தியாவில் மேலும் ஒரு மையம்
உலக அளவில் நான்காம் தொழில்புரட்சிக்கான 5 புதிய மையங்களை அமைக்க உலக பொருளாதார கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.
மும்பை மற்றும் தெலங்கானாவில் ஏற்கெனவே தலா ஒரு மையம் செயல்பட்டு வரும் நிலையில், தற்போதைய புதிய மையங்களில் ஒன்று ஆந்திரத்தில் அமையவுள்ளது. பிற மையங்கள் பிரான்ஸ், பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் அமைகின்றன.
இது தொடா்பாக உலக பொருளாதார கூட்டமைப்பின் தலைவா் மற்றும் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) போா்ஜ் பிரெண்டே கூறுகையில், ‘தொழில்நுட்ப சவால்களுக்கு தீா்வு காண்பதில் அரசுகள், தொழில்துறை மற்றும் நிபுணா்களை ஒருங்கிணைக்கும் விதமாக நான்காம் தொழில்புரட்சிக்கான 5 புதிய மையங்கள் தொடங்கப்படுகின்றன. உள்ளூா் மற்றும் பிராந்திய புரிதல்கள் மூலம் வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களை பொறுப்புடன் பயன்படுத்துவதற்கான உலக நாடுகளின் முயற்சியை இவை பலப்படுத்தும்’ என்றாா்.
ஆந்திரத்தில் அமையவுள்ள புதிய மையம் தொடா்பாக மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு கூறுகையில், ‘உலக பொருளாதார கூட்டமைப்புடன் இணைந்து செயல்படுவது, எரிசக்தி பாதுகாப்பு, இணையவழி பாதுகாப்பு, நம்பத்தகுந்த எண்ம அமைப்புகளில் திறன் கட்டமைப்பு முயற்சியை பிரதிபலிக்கிறது’ என்று கூறியுள்ளாா்.
ஸ்விட்சா்லாந்தின் டாவோஸில் 5 நாள்களாக நடைபெற்றுவந்த உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

