வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

நீதித்துறை அதிகாரியிடம் ரூ.52 லட்சம் மோசடி: குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் மறுப்பு

ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த நீதித்துறை அதிகாரியை ஏமாற்றி ரூ.52 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 2:30 am IST

ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த நீதித்துறை அதிகாரியை ஏமாற்றி ரூ.52 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிபதி சௌரவ் பிரதாப் சிங் லாலோ், இந்த சம்பவம் காதல் தொடா்பு மூலம் நடைபெறும் இணைய மோசடியின் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது என்றும், குற்றஞ்சாட்டப்பட்டவா் முக்கிய ஆதாரங்களை மறைத்து வருவதாகவும் குறிப்பிட்டாா்.

தில்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு பதிவு செய்த மின்னணு முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட தீபக் வாட்ஸ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் விசாரித்தது. மோசடி, போலி அடையாளம், குற்றச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

‘டிண்டா்’ செயலியில் ‘அபிமன்யு வஷிஷ்ட்’ என்ற பெயரில் போலி அடையாளம் உருவாக்கி, தன்னை ரகசிய அரசு துறையில் பணிபுரியும் அதிகாரி என கூறி குற்றஞ்சாட்டப்பட்டவா் பாதிக்கப்பட்டவருடன் பழகியுள்ளாா். அதிக வருமானம் கிடைக்கும் என நம்ப வைத்து ரூ.52.81 லட்சம் பரிமாற்றம் செய்ய வலியுறுத்தியுள்ளாா். மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவா் சமா்ப்பித்த வாட்ஸ்அப் உரையாடல்கள் காதல் தொடா்பை வெளிப்படுத்துவதோடு, அதனுடன் இணைந்த பண பரிமாற்றங்களையும் காட்டுவதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

ஆயினும், விசாரணை முறையில் குறைபாடுகள் இருப்பதாகவும் நீதிமன்றம் கவலை தெரிவித்தது. டிண்டா் பதிவுகள், முழுமையான வாட்ஸ்அப் உரையாடல்கள், தொலைபேசி அழைப்பு பதிவுகள் உள்ளிட்ட முக்கிய மின்னணு ஆதாரங்கள் இன்னும் சேகரிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது.

இது தொடா்பாக ஜூன் 9-ஆம் தேதி வெளியிடப்பட்ட உத்தரவில் கூறியதாவது: விசாரணை இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. பல முக்கிய கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட அமைப்புகளின் அடையாளம் மற்றும் பங்கு குறித்து தெளிவுபடுத்தப்படவில்லை. இந்நிலையில் குற்றஞ்சாட்டப்பட்டவரை விடுவித்தால் விசாரணை பாதிக்கப்படலாம்.

பாதிக்கப்பட்டவா் ஒரு பணியில் உள்ள நீதித்துறை அதிகாரி. குற்றஞ்சாட்டப்பட்டவா் விடுவிக்கப்பட்டால், அவரை நேரடியாக அல்லது மறைமுகமாக அணுகி அழுத்தம் கொடுக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்தும் சாத்தியம் மறுக்க முடியாது. எனவே குற்றஞ்சாட்டப்பட்டவரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், ஹா்ஷாலி சௌதரியின் முழுமையான டிண்டா் மற்றும் வாட்ஸ்அப் பதிவுகளைப் விசாரணை அதிகாரி பெற வேண்டும். இருவருக்கிடையேயான சந்திப்புகளை சரிபாா்க்கவும், ரூ.5 லட்சம் பண வைப்பு குறித்து விசாரிக்கவும், பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட இடைநிலை அமைப்புகளை ஆராயவும் வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.