அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

வெறும் 37 நாள்கள்.. 12 நீட் தேர்வர்கள் தற்கொலை! யார் பொறுப்பேற்பார்கள்?

வெறும் 37 நாள்களில் 12 நீட் தேர்வர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இவர்களின் தற்கொலைக்கு யார் பொறுப்பு? என்பது பற்றி...

News image

நீட் தேர்வர்கள் - IANS

Updated On :22 ஜூன் 2026, 3:15 pm IST

முதன்முதலில் மே மாதத்தில் நடந்த இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களை கணக்கெடுக்காமல், முதல் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறு தேர்வு நடந்த 37 நாள்களில் தற்கொலை செய்து கொண்ட மாணவ, மாணவியர் மட்டுமே 12 பேர்.

தமிழ்நாடு, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், உத்தரகண்ட், மகாராஷ்டிரம், கோவா, தில்லி உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், மறு தேர்வுக்குத் தயாராகி வந்த நிலையில், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகித் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த ஆண்டு வினாத்தாள் தயாரித்தவர்கள் உலகத் தொடர்பு இன்றித் தனிப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுகளில் இவர்கள் எத்தனை பேருக்கு வினாத்தாளை கசிய விட்டிருப்பார்கள்? அவர்கள் எம்பிபிஎஸ் ஆகலாமா? வினாத்தாளை ஹெலிகாப்டரில் அனுப்பியிருக்கிறீர்கள்? இத்தனை காலம் சாலை வழியாக வந்த போது வினாத்தாள் கசிந்து எத்தனை பேர் அதன் மூலம் எம்பிபிஎஸ் ஆகியிருப்பார்கள்? அவர்கள் மருத்துவர்கள் ஆவதால் நாட்டுக்கு எந்த இழப்பும் இல்லையா? இதுவரை நீட் தேர்வெழுதி தகுதியானவர்கள் மட்டுமே எம்பிபிஎஸ் ஆகியிருக்கிறார்கள், ஒரு தகுதியில்லாத மாணவர்கூட மருத்துவர் ஆகவில்லை என்பதை தேசிய தேர்வு முகமை உறுதியளிக்குமா? என்பதே இந்த ஆண்டு கெடுபிடிகளைப் பார்த்தவர்களின் கேள்விகள்.

மே 3 ஆம் தேதி நீட் தேர்வு நடந்து, அப்பாடா என நிம்மதி பெருமூச்சு விட்ட மாணவர்களுக்கு 12 ஆம் தேதி அந்தத் தேர்வு ரத்து என்ற செய்தி இடிபோல வந்தது. ஜூன் 21 மறுதேர்வு அறிவிக்கப்பட்டது. இவற்றுக்கிடையேயான 37 நாள்களுக்குள், ஏற்கெனவே சுமந்து வந்த நீட் சுமையை மீண்டும் ஏற்க முடியாமல் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள் 12 பேர். நீட் கட்டணத்தைத் திருப்பிக் கொடுத்த தேசிய தேர்வு முகமை, 12 மாணவர்களின் தற்கொலைக்கு என்ன சொல்லப் போகிறது?

மகாராஷ்டிரத்தின் லத்தூர் நகரில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்களோ என்னவோ, ஆனால், தேர்வெழுதிய லட்சக்கணக்கான மாணவர்களுக்குத்தான் தண்டனை. இதில் 12 மாணவர்களுக்கு மரண தண்டனை போல (?)

கடந்த 1, 2, 3 ஆண்டுகளாகப் படித்து நீட் தேர்வை சிறப்பாக எழுதியிருந்த மாணவர்களுக்கு, அது ரத்து செய்யப்பட்டுவிட்டது என்றால் எப்படியிருக்கும்?

கடவுளாலும் முடியாது என்றார்! ஆனால் என்டிஏ செய்தது?

ராஜஸ்தானைச் சேர்ந்த 22 வயது மாணவர், மே 3, நீட் தேர்வை தான் சிறப்பாக எழுதியிருப்பதாகவும் கடவுளாலும் தான் தகுதி பெறுவதைத் தடுக்க முடியாது என சவால் விட்டிருந்த நிலையில், தேர்வு ரத்து செய்யப்பட்ட 3 நாள்களில் தற்கொலை செய்துகொண்டதாக அவரது தந்தை குறிப்பிடுகிறார் (ஆம் கடவுளாலும் முடியாததை என்டிஏ செய்தது).

நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவர்கள், தங்களுடைய பெற்றோர் லட்ச, லட்சமாக செலவிட்டு பயிற்சி வகுப்புகளுக்கு கட்டணம் செலுத்தி படிக்க வைக்கிறார்கள், நீட் தேர்வில் தோல்வியடைந்துவிட்டால், சமுதாயம் கிண்டல், கேலி செய்யுமே என்ற எண்ணத்திலும் தற்கொலை செய்கிறார்கள்.

குறிப்பாக தற்கொலைக்கு முன்பு அவர்கள் எழுதும் கடிதங்கள் நெஞ்சை உருக்குவதாக உள்ளன. உத்தரகண்டைச் சேர்ந்த 24 வயது மாணவர், "நான் உங்களை நேசிக்கிறேன் அப்பா, என்னை மன்னித்துவிடுங்கள், இதில் யாருடைய தவறும் இல்லை. என்னால் தேர்வுக்கு ஈடுகொடுக்க முடியாதது என்னுடைய தவறுதான்" என்று கடிதம் எழுதியிருக்கிறார். எத்தனையோ தேர்வுகள், படிப்புகள் சவால்கள் இருக்க, ஒரு தேர்வுக்கு தயாராக முடியவில்லை என உயிரை மாய்த்துக் கொள்ளும் அவலம் உலகில் வேறு எங்கேனும் இருக்கிறதா என தரவுகளைத் தேடிப் பார்த்துதான் சொல்ல வேண்டும்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது மாணவர், "உங்கள் மகள் டாக்டராவார் என நீங்கள் நம்பினீர்கள். ஆனால் மீண்டும் நீட் தேர்வெழுதும் நம்பிக்கை என்னிடம் இல்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.

தமிழகத்தில் 19 வயது மாணவி, "மீண்டும் தேர்வெழுதும் தைரியம் இல்லை, லட்சங்களைச் செலவிட்ட தந்தை, என்னை மன்னித்துவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். ஓசூரில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவர் மனஅழுத்தம் காரணம் நீட் தேர்வுக்கு ஒருநாள் முன்பு, வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில் இப்படியான பெற்றோர், சகோதரர் கிடைக்க நான் கொடுத்து வைத்தவன், இம்முறையும் தோல்வி அடைந்துவிடுவேன் என்கிற பயத்தில் தவறான முடிவை எடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

உத்தரப் பிரதேச மாணவியோ, தற்கொலைக்கு முன்பு, மறு தேர்வுக்குத் தன்னால் கவனம் செலுத்த முடியவில்லை என்று புலம்பிவந்ததாகக் கூறப்படுகிறது.

மகாராஷ்டிரத்தில் 18 வயது மாணவி, நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் கடும் மன உளைச்சலில் இருந்தார் என குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

குஜராத் மாணவி, வீட்டின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார், மத்தியப் பிரதேச மாணவர் தேர்வு நடப்பதற்கு ஒரு நாள் முன்பு மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

12 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதில் 5 பேர் தங்களது இந்த முடிவு குறித்து எந்த கடிதமும் எழுதிவைக்கவில்லை. (சொல்வதற்கு ஒன்றுமில்லை என விட்டுவிட்டார்களோ?) தில்லியில் 21 வயது உ.பி. மாணவர் 4 ஆண்டுகளாக நீட் தேர்வுக்குத் தயாராகி வந்துள்ளார். 2025-ல் வெறும் 4 மதிப்பெண்களில் தோல்வியடைந்து, 2026 மே மாதத் தேர்வை சிறப்பாக எழுதி, தேர்வாகிவிடுவோம் என மகிழ்ச்சியாக இருந்த நிலையில், மறுதேர்வு எழுத மனமில்லாமல் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட 12 மாணவர்களுமே யார் தெரியுமா? மே 3 தேர்வை சிறப்பாக எழுதியவர்கள். அதுதான் அவர்கள் செய்த குற்றமா?

பனிரெண்டாம் வகுப்பு முடித்தோமா கல்லூரியில் சேர்ந்தோமா என்றில்லாமல், நீட் தேர்வினால் பிரேக் எடுப்பது, மீண்டும் மீண்டும் முயற்சிப்பது, பயிற்சி வகுப்புகளுக்கு பல லட்சம் செலவிடுவது என ஒரு தகுதித் தேர்வுக்கே வாழ்நாளில் மிக முக்கிய காலகட்டத்தை கடுமையான மன அழுத்தத்துடன் செலவிடும் போக்கு, வளரும் சமுதாயத்துக்கு ஏற்றதெனக் கருத முடியாது.

அவர்கள் இத்தனை மன அழுத்தத்தையும் சமூக எதிர்பார்ப்புகளையும், தோல்வியடைந்தால் சமுதாயத்தை எதிர்கொள்ளும் சக்தியும் இல்லாமல் இருக்கும்போது அதனை ஏற்படுத்தியிருப்பது எது?

நீட் தேர்வில் தோல்வியடைந்தாலும் பரவாயில்லை என சொல்ல மறந்த குடும்பமா? பல லட்சம் கட்டி பயிற்சி வகுப்பு அனுப்பினால் தேர்ச்சி பெற்று விடுவார் என்ற பெற்றோர் நம்பிக்கையா? நீட் தேர்வு எழுதினால்தான் எம்பிபிஎஸ் படிக்க முடியும் என ஏழைகளுக்கு எதிராகவும் பயிற்சி நிறுவனங்களுக்கு சாதகமாகவும் முடிவெடுத்த மத்திய அரசா? யார் பொறுப்பேற்கப் போகிறார்கள் இவர்களது தற்கொலைக்கு?

மாணவர்கள் குடும்பத்தினரும் காவல்துறையும் கடுமையான மன உளைச்சல், அழுத்தம் போன்றவையே தற்கொலைக்குக் காரணம் என்று கூறுகின்றன. ஒரு தேர்வுக்கு எதற்கு இத்தனை மன அழுத்தம்? இந்த 12 பேர்தான் நீட் தேர்வுக்குப் பலியான கடைசி மாணவர்களா? இனி இது நடக்காதா? என்ற கேள்விகளுக்கும் பதில் சொல்வாறில்லை.

பதில் சொல்ல முடியாத கடினமான நீட் வினாத் தாள் போலவே, பதில்களே இல்லாத கேள்விகள்தான் இந்த நீட் தேர்வு குறித்தும் எழுகின்றன. இன்னும் எத்தனை அனிதாக்களை, எவ்வளவு காலத்துக்குப் பலி கொள்ளப் போகிறது இந்த நீட் தேர்வுகள்?

Summary

Twelve NEET aspirants have died by suicide in just 37 days. Regarding the question of who is responsible for these suicides...

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.