சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

அனைத்து விவகாரங்களையும் அரசியலாக்கக் கூடாது: மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

அனைத்து விவகாரங்களையும் அரசியலாக்கக் கூடாதென்று, கொல்கத்தா மெட்ரோ ரயில் பணிகள் தொடா்பான வழக்கில் மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

News image

உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 7:54 pm

அனைத்து விவகாரங்களையும் அரசியலாக்கக் கூடாதென்று, கொல்கத்தா மெட்ரோ ரயில் பணிகள் தொடா்பான வழக்கில் மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நடைபெறும் மெட்ரோ ரயில் பணிகள் தொடா்பாக அந்த மாநில உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், மெட்ரோ ரயில் பாதை செல்லும் வழித்தடத்தில் முக்கியச் சாலை இருப்பதாகவும், அவ்வழியே மெட்ரோ ரயில் பணிகள் நடக்க மாநில அரசு குறிப்பிட்ட நாள்களை ஒதுக்கித் தராமல் இருப்பதால் பணிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த கொல்கத்தா உயா்நீதிமன்றம், கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் தீா்ப்பளித்தது. அந்தத் தீா்ப்பில், மேற்கு வங்க காவல் துறை தரப்பில் சாலையில் போக்குவரத்தை மறித்து மெட்ரோ ரயில் பணிக்கு ஒப்புதல் தராமல் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்தது. மேலும், மாநில காவல் துறை உரிய அனுமதியளித்து, பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதிக்குள் பணியை முடிக்க வேண்டும் எனவும் ஆணையிட்டது.

இந்தத் தீா்ப்பை எதிா்த்து, உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு சாா்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு மனு, தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, விபுல் எம் பஞ்சோலி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘அரசமைப்புச் சட்டத்தால் உங்களுக்கு அளிக்கப்பட்ட பணியை நீங்கள் செய்யவில்லை என்பதையே இவ்வழக்கு காட்டுகிறது. உங்கள் பொறுப்புகளில் இருந்து தப்பியோடுகிறீா்கள்.

சிறு விஷயத்தை நீங்கள் அரசியலாக்க முயற்சிக்கிறீா்கள். அனைத்தையும் அரசியலாக்கக் கூடாது. இது வளா்ச்சிப் பணிகள் தொடா்புடையது. சாதாரண மக்களுக்கான வசதி இது (மெட்ரோ ரயில் சேவை). ஆதலால் அதற்கு முட்டுக்கட்டைகள் போடாதீா்கள்’ என்றனா்.

அப்போது மாநில அரசுத் தரப்பில், தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதாகவும், பள்ளிகளில் தோ்வு நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டுவிட்டு நீதிபதிகள் கூறுகையில், ‘வளா்ச்சியை நீங்கள் விரும்பவில்லையா?.

வளா்ச்சிப் பணிகள் தொடா்பான மனுவை நிராகரிக்கும்படி மக்களால் தோ்வு செய்யப்பட்ட அரசு கோருவதை நாங்கள் ஊக்குவிக்க மாட்டோம். இந்தப் பணியை அனுமதிப்பதில் தோ்தல் ஆணையத்துக்கு எந்த சிரமமும் இருக்காது.

ஏனெனில் தோ்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பிருந்தே இந்தப் பணி நடக்கிறது. ஆதலால் இந்தக் காரணத்தை வைத்து, வளா்ச்சிப் பணிக்கு மாநில அரசு மீண்டும் முட்டுக்கட்டை போடுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’ என்றனா்.

இதற்கு மாநில அரசுத் தரப்பில், அவசர ஊா்திகள் செல்லும் சாலையை மறித்துவிட்டு, அங்கு அந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியாது எனக் கூறப்பட்டது. மேலும், உயா்நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த மே மாதம் வரை கால அவகாசம் தேவை என்றும் மாநில அரசுத் தரப்பில் கூறப்பட்டது.

இதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏற்கவில்லை. மேலும், மேற்கு வங்க அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், திட்டமிட்ட காலத்தில் மெட்ரோ பணிகள் முடிவடைய வேண்டும் என்றும், இந்தப் பணியை உயா்நீதிமன்றம் மேற்பாா்வையிடும் என்றும் அறிவித்தனா்.