லடாக்கில் போராட்டம் நடத்தத் தடை! வீட்டுக் காவலில் சோனம் வாங்சுக்!
வீட்டுக் காவலில் சோனம் வாங்சுக் வைக்கப்பட்டது தொடர்பாக..

சோனம் வாங்சுக் - X
லடாக்கின் லேயில் நடத்தப்படும் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாதபடி தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் குற்றம் சாட்டியுள்ளார்.
லடாக்கில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் குளிர்காலத்தில் இந்த தேர்தலை நடத்த அங்குள்ள அரசியல் கட்சிகளும், லடாக் மாநில உரிமைகளுக்காகப் போராடி வரும் சோனம் வாங்சுக் உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, லே நகரில் உள்ள என்.டி.எஸ் நினைவுப் பூங்காவில், கடும் குளிருக்கு மத்தியில் 'லே அபெக்ஸ் பாடி' அமைப்பின் இணைத் தலைவர் செரிங் டோர்ஜே தலைமையில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு இந்தப் போராட்டம் தொடங்கியது.
தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று லே அமைப்பின் தலைவர் ஒருவர் தெரிவித்தார். போராட்டக்காரர்கள் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அந்த இடத்தில் அமர்ந்திருப்பார்கள். மேலும், அமைப்பின் தலைவர்கள் உள்பட 20 முதல் 30 பேர் இரவு நேரத்திலும் அங்கேயே தங்குவார்கள்.
இந்தப் போராட்டம் இரண்டாவது நாளை எட்டியுள்ள நிலையில், லேவில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த முடியாத வகையில், சோனம் வாங்சுக் லே பகுதிக்குள் அடுத்த இரண்டு மாதங்கள் அதாவது 60 நாள்கள் தடை விதித்து லே மாவட்ட கூடுதல் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கத் தடை விதித்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சோனம் வாங்சுக்கின் போராட்டத்தால் தேர்தல் பணிகள் பாதிக்கப்படும் என்று போலீஸார் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,
நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன். 12-க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய காவலர்கள் என் வீட்டைச் சூழ்ந்துள்ளனர். வீட்டில் இருக்குமாறு எனக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
போராட்டத்தில் கலந்துகொள்ள விடாமல் தன்னை தடுத்துநிறுத்தியதற்கும், தன் மீதான கட்டுப்பாடுகளை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளப் போவதாக அவர் தெரிவித்தார். முறையாகக் கைது செய்யப்படாமல், ஒரு நபர் அமைதியான போராட்டத்தில் பங்கேற்பதைத் தடுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அவர், இதுகுறித்து மாஜிஸ்திரேட், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகிய அமைப்புகளிடம் முறையிடப் போவதாகக் கூறினார்.
குளிர்காலத்தில் உள்ளாட்சித் தேர்தல் மக்கள் மீது திணிக்கப்படுவது ஏன் போன்ற கேள்விகளைக் கேட்டதற்காகத்தான் தன்னை வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் இவ்வாறு நடப்பது வேதனை அளிக்கிறது.
மாநில அந்தஸ்து, ஆறாவது அட்டவணையின் பாதுகாப்புக் கோரி, கடந்தாண்டு செப்டம்பர் 24 அன்று லேயில் நடைபெற்ற போராட்டங்களில் பொதுமக்கள் நால்வர் சுட்டுக் கொல்லப்பட்டனர். லேயில் நடந்த கொலைகள் குறித்து நீதி விசாரணை ஆணையத்தின் அறிக்கை ஏன் தாமதப்படுத்தப்படுகிறது.
மேலும் லடாக் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் குறித்து அவர் விடியோ பதிவில் பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


