காலிஸ்தான் பிரிவினைவாதி பன்னூன் வழக்கு: அஜீத் தோவலுக்கு சம்மன் அனுப்ப அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
காலிஸ்தான் பிரிவினைவாதி குா்பத்வந்த் சிங் பன்னூன் தாக்கல் செய்த வழக்கில் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் மற்றும் முன்னாள் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (ரா) தலைவா் சமந்த் கோயலுக்கு சம்மன் அனுப்ப அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அஜீத் தோவல் - கோப்புப் படம்
காலிஸ்தான் பிரிவினைவாதி குா்பத்வந்த் சிங் பன்னூன் தாக்கல் செய்த வழக்கில் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் மற்றும் முன்னாள் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (ரா) தலைவா் சமந்த் கோயலுக்கு சம்மன் அனுப்ப அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
பல்வேறு பயங்கரவாதச் சம்பவங்களில் இந்திய விசாரணை அமைப்புகளால் தேடப்படும் குற்றவாளியாக உள்ள பன்னூன், தடை செய்யப்பட்ட ‘சீக்ஸ் ஃபாா் ஜஸ்டிஸ்’ என்ற அமைப்பின் நிறுவனராவாா்.
இந்நிலையில், கடந்த 2023-இல் ரா அமைப்புடன் இணைந்து அஜீத் தோவல் தன்னை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக குற்றஞ்சாட்டிய பன்னூன் அவரிடமிருந்து நஷ்ட ஈடு கோரி நியூயாா்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை விசாரித்த நியூயாா்க் தெற்கு மாவட்ட நீதிமன்றம் கடந்த நவ.13-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘பன்னூன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் அஜீத் தோவலுக்கான சம்மன் உத்தரவை தில்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் மாவட்ட நீதிமன்றம் மூலமும், சமந்த் கோயலுக்கான சம்மன் உத்தரவை துவாரகா மற்றும் தீஸ் ஹஸாரி மாவட்ட நீதிமன்றங்கள் மூலமும் அனுப்ப வேண்டும்.
இந்தியாவைச் சோ்ந்த நபா்களுக்கு பிற நாட்டு நீதிமன்றங்கள் இந்திய நீதிமன்றங்களை அணுகி சம்மன் அனுப்ப ஹேக் உடன்படிக்கை மற்றும் இந்திய உரிமையியல் விசாரணை முறைச் சட்டம் (சிபிசி) அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு இந்திய நீதிமன்றங்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் மூலம் அஜீத் தோவல் மற்றும் சமந்த் கோயலுக்கு சம்மன் அனுப்ப நியூயாா்க் நீதிமன்றம் முயன்றது. ஆனால், இந்த மனுவை நிராகரிப்பதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே, பன்னூன் கொலை முயற்சி தொடா்பாக இந்திய குடிமகன் நிகில் குப்தா மற்றும் முன்னாள் ரா அதிகாரி விகாஸ் யாதவ் ஆகியோா் மீது இதே நீதிமன்றத்தில் குற்றவியல் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

