இந்திய பாரம்பரிய ஞானம் ஓலைச்சுவடிகளில் முடங்கிவிடக் கூடாது: குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்
இந்தியாவின் பாரம்பரிய ஞானம் ஓலைச்சுவடிகளிலும் நூலகங்களிலும் முடங்கிவிடக் கூடாது என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

புது தில்லி லால் பகதூர் சாஸ்திரி தேசிய சம்ஸ்கிருத பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்.
இந்தியாவின் பாரம்பரிய ஞானம் ஓலைச்சுவடிகளிலும் நூலகங்களிலும் முடங்கிவிடக் கூடாது என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக புது தில்லியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:
இந்தியாவின் பாரம்பரிய ஞானம் ஓலைச்சுவடிகளிலும் நூலகங்களிலும் முடங்கிவிடக் கூடாது. அது பாதுகாக்கப்படுவதுடன் அது தொடர்பான ஆராய்ச்சி நடத்தப்பட வேண்டும். எதிர்காலத் தலைமுறைகளுக்கு அது கிடைக்கச் செய்யப்பட வேண்டும். இந்த இலக்கிற்கு தேசிய கல்விக் கொள்கை-2020 வலுவூட்டியுள்ளது. இக்கொள்கை இந்திய அறிவுசார் கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
நமது பாரம்பரியமான நூல்கள் உலகில் இருந்து மறைந்து போக நாம் அனுமதிக்கக் கூடாது. எதிர்காலத் தலைமுறைகளுக்காக அவை பாதுகாக்கப்பட வேண்டும்.
அறிவியல், இலக்கியம், தத்துவம் ஆகியவற்றின் உலகில் சம்ஸ்கிருதம் பெருமிதம் வாய்ந்த இடத்தை வகிக்கிறது. இதுவே சம்ஸ்கிருதத்தின் உயர்வாகும். நல்லொழுக்கத்துக்கான வலுவான அடிப்படையை சம்ஸ்கிருதம் வழங்குகிறது.
அதே வேளையில் நமது தாய்மொழியை நாம் வளர்க்க வேண்டும். மற்ற மொழிகளுக்கும் நாம் மரியாதை அளிக்க வேண்டியது அவசியம்.
பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் அறிவுசார், ஆன்மிக, கலாசாரப் பாரம்பரியத்தை சம்ஸ்கிருதம் செழுமைப்படுத்தி வந்துள்ளது. நாம் அந்த மொழிக்கு மரியாதை அளிக்க வேண்டும். பல்வேறு கலைகளையும் சம்ஸ்கிருதம் வளப்படுத்தியுள்ளது. அனைத்துக்கும் மேலாக பாரதம் என்ற உணர்வுடன் நம்மைப் பிணைக்கும் சக்தியாக சம்ஸ்கிருதம் உள்ளது. மனித குலத்துக்கு மிகவும் பயனளிக்கக் கூடிய விஷயங்கள் அந்த மொழியில் உள்ளன. பல்வேறு அறிவுக்கருவூலங்களின் வாயில் திறவுகோலை சம்ஸ்கிருதம் பெற்றுள்ளது.
இன்றும் இந்தியாவில் மட்டுமின்றி நேபாளம், திபெத், சீனா போன்ற நாடுகளிலும் சம்ஸ்கிருத ஓலைச்சுவடிகள் கிடைக்கின்றன. ஞான பாரதத் திட்டத்தின் தொடக்கம் மற்றொரு முக்கியமான நடவடிக்கையாகும். அடிப்படை தொகுப்பு நிதியாக ரூ.500 கோடியைக் கொண்டுள்ள இத்திட்டம், ஓலைச்சுவடிகளின் பாதுகாப்புக்கும் ஆவணப்படுத்துதலுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பரந்த ஓலைச்சுவடி பாரம்பரியத்தை இத்திட்டம் இந்திய மக்களுக்கும், உலகுக்கும் கொண்டுசெல்கிறது.
ஓலைச்சுவடிகளை நன்கு ஆராய்ந்து அவற்றில் உள்ள தகவல்களை உலகுக்கு அளிக்குமாறு இந்தப் பல்கலைக்கழக ஆசிரியர்களையும், மாணவர்களையும் வலியுறுத்துகிறேன். இந்த செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) யுகத்தில் சம்ஸ்கிருதத்தைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




