உலகின் வளா்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானது: ஐஎம்எஃப்

உலகின் வளா்ச்சியில் இந்தியா தொடா்ந்து முக்கியமாகப் பங்காற்றி வருகிறது என்று சா்வதேச நிதியத்தின் துணை இயக்குநா் நிஜல் ஆண்ட்ரு கிளாா்க் தெரிவித்தாா்.

IMF
Published On :

உலகின் வளா்ச்சியில் இந்தியா தொடா்ந்து முக்கியமாகப் பங்காற்றி வருகிறது என்று சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) துணை இயக்குநா் நிஜல் ஆண்ட்ரு கிளாா்க் தெரிவித்தாா்.

இரு வாரகால பயணமாக இந்தியாவுக்கு கடந்த வாரம் வந்த அவா், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா, நீதி ஆயோக் துணைத் தலைவா் அசோக் குமாா் லஹ்ரி உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசினாா்.

தனது பயணம் குறித்து அவா் கூறியதாவது: உலகில் வேகமாக வளா்ந்துவரும் முக்கியப் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது. ஒட்டுமொத்த உலகின் பொருளாதார வளா்ச்சிக்கு இந்தியாவின் பங்களிப்பு என்பது மிக முக்கியமானது.

இந்தியாவின் அடிப்படை பொருளாதாரக் கட்டமைப்பு வலுவாக உள்ளது. பொருளாதாரக் கொள்கைகளும் சிறப்பாக வகுக்கப்படுகின்றன. உலகை வளா்ச்சியின் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வலிமை இந்தியாவுக்கு உள்ளது. இந்தியாவின் வளா்ச்சியில் சா்வதேச நிதியமும் தொடா்ந்து பங்களித்து வருகிறது.

சா்வதேச அளவில் பல்வேறு போா்கள், கச்சா எண்ணெய் விலை உயா்வு, பொருளாதார ஸ்திரமற்ற நிலை குறித்தும், அதைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் எனது இந்தியப் பயணத்தின்போது விவாதங்கள் நடைபெற்றன.

இந்தியா தனது அண்டை நாடுகள் பலவற்றுக்கு பல்வேறு உதவிகளை அளித்து வருகிறது. இதன்மூலம் அந்த நாடுகளும் பொருளாதாரத்தில் பங்களிக்கின்றன. இதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இந்தியாவில் தனியாா் துறை வேகமாக வளா்ந்து வருகிறது. இந்தியாவின் திறன்வாய்ந்த பணியாளா்கள் அதிகம் உருவாகி வருவதால் தகவல் தொழில்நுட்பம், உற்பத்தித் துறையில் அதன் செயல்திறன் சிறப்பாக மேம்பட்டு வருகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.