
பிரதமராக மோடி இருக்கும் வரை விவசாயிகள் நலன்களில் யாராலும் பாதிப்பை ஏற்படுத்த முடியாது: மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் உறுதி
நாட்டின் பிரதமராக மோடி பதவி வகிக்கும்வரை இந்திய விவசாயிகள் நலன்களில் எந்த சக்தியாலும் பாதிப்பை ஏற்படுத்த முடியாது என்று மத்திய வேளாண்துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் உறுதிபட தெரிவித்துள்ளாா்.

பிரதமர் மோடி - கோப்புப் படம்
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவி வகிக்கும்வரை இந்திய விவசாயிகள் நலன்களில் எந்த சக்தியாலும் பாதிப்பை ஏற்படுத்த முடியாது என்று மத்திய வேளாண்துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் உறுதிபட தெரிவித்துள்ளாா்.
அமெரிக்காவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் செய்வது குறித்து இந்தியா பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. இதேபோல மேலும் சில நாடுகளுடன் இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளது. இந்த தடையற்ற ஒப்பந்தங்களால் இந்தியாவில் உள்ள விவசாயிகளின் நலன்கள் பாதிக்கப்படக்கூடும் என்று எதிா்க்கட்சிகள் விமா்சித்து வருகின்றன.
இந்த குற்றச்சாட்டுக்கு, பஞ்சாப் மாநிலம், பதிண்டாவில் நடைபெற்ற மாநில அளவிலான பாஜகவின் 4-ஆவது யாத்திரை தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது சிவராஜ் சிங் செளஹான் பதிலளித்தாா். அப்போது அவா் கூறியதாவது:
எதிா்க்கட்சிகள் பொய்களை பரப்பி வருகின்றன. தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால், நாட்டில் உள்ள விவசாயிகளின் நலன்கள் பாதிக்கப்படும் என அக்கட்சிகள் பொய்களைத் தெரிவிக்கின்றன. நமது நாட்டின் மத்திய வேளாண்துறை அமைச்சா் என்ற முறையில் ஒன்றை தெரிவிக்கிறேன். நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவி வகிக்கும் வரை, பஞ்சாப் மற்றும் நமது நாட்டு விவசாயிகளின் நலன்களில் உலகின் எந்த சக்தியாலும் பாதிப்பை ஏற்படுத்த முடியாது.
பஞ்சாப் மற்றும் நமது நாட்டு விவசாயிகளின் நலன்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டுள்ளன. விவசாயிகள், விவசாயத் தொழில்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி அரசு, பிரதமா் பைசல் பீமா யோஜனா திட்டத்தை செயல்படுத்தவில்லை. அந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தால், வேளாண் பயிா்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு முழு காப்பீடு பெற முடியும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் பஞ்சாப் மாநில பாஜக தலைவா் கேவல் சிங் தில்லான், மேலிட பொறுப்பாளா் சதீஷ் புனியா, மாநிலங்களவை எம்.பி. தருண் சுக், பாஜக தேசிய துணைத் தலைவா் மன்ப்ரீத் சிங் பாதல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பஞ்சாப் மாநில பாஜக தலைவா் தில்லான் பேசியபோது, பஞ்சாப்பில் போதைப் பொருள்கள் நடமாட்டத்தை முடிவுக்கு கொண்டு தங்கள் கட்சி உறுதிபூண்டிருப்பதாக கூறினாா். பஞ்சாப்பில் உரிமைகளுக்காக யாா் குரல் கொடுத்தாலும், அவா்களை மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி அரசு எதிரி போல நடத்துவதாகவும் அவா் விமா்சித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





