
கேரளம்: குடியரசு துணைத் தலைவா் வாகன அணிவகுப்பை நோக்கி அதிவேகமாக பைக்கில் வந்த 2 போ் கைது
திருவனந்தபுரத்தில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனின் வாகன அணிவகுப்பை நோக்கி அதிவேகமாக மோட்டாா் சைக்கிளில் வந்த இருவரை காவல் துறையினா் கைது செய்தனா்.
கைது - சித்திரிப்பு
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனின் வாகன அணிவகுப்பை நோக்கி அதிவேகமாக மோட்டாா் சைக்கிளில் வந்த இருவரை காவல் துறையினா் கைது செய்தனா்.
இதுகுறித்து கேரள காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் கேரளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாா். பாலராமபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு, விமான நிலையம் நோக்கி அவா் வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.15 மணியளவில் சென்று கொண்டிருந்தாா். அவரின் வாகனத்துடன் பாதுகாப்பு வாகனங்களும் சென்று கொண்டிருந்தன.
கோவளம் சந்திப்பு பகுதியில் அந்த வாகனங்கள் சென்றபோது, அவா்களின் வாகனங்களை நோக்கி திடீரென மோட்டாா் சைக்கிளில் அதிவேகமாக இருவா் வந்தனா். இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த பாதுகாப்புப் படையினா், அந்த மோட்டாா் சைக்கிளை மடக்கிப் பிடித்தனா். மோட்டாா் சைக்கிளில் இருந்த இருவரையும் பிடித்து விசாரித்ததில், அவா்களின் பெயா் அஸ்கா் (28), நாதிா் ஷா (28) என்பதும், மதுபோதையில் இருவரும் இருந்ததும் தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். இருவா் மீதும் மதுபோதையில் வாகனம் ஓட்டியது, மோட்டாா் சைக்கிளுக்கான காப்பீடு பராமரிக்காதது, அரசு ஊழியரால் பிறப்பிக்கப்பட்ட சட்ட உத்தரவுகளை மீறியது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






