Enable Javscript for better performance
10. மலரினும் மெல்லிது..- Dinamani

சுடச்சுட

  

  10. மலரினும் மெல்லிது..

  By நாகூர் ரூமி.  |   Published on : 22nd October 2018 10:00 AM  |   அ+அ அ-   |    |  

  love

   

  காதலும் கடவுளும்

  ஸ்வாமி விவேகானந்தர் ஊருக்கு வரும் சாமியார்களையெல்லாம் பார்த்து கடவுள் இருக்கிறாரா, கடவுளைக் காட்ட முடியுமா என்று கேட்பாராம். அதாவது, கேட்டு சங்கடப்படுத்துவார். ஆனால் எந்த ஆசாமியாலும் சாமியைக் காட்ட முடியவில்லை. அவர்களுக்குத் தெரிந்தால்தானே காட்டுவார்கள்?! ஆனால் பரமஹம்சர் நிலை வேறு. அவர் கடவுளுக்குள்ளேயே எப்போதும் வாழ்ந்தவர். அவரால் காட்ட முடிந்தது. இப்போ நான் சொல்ல வரும் விஷயம் கடவுளைப் பற்றியதல்ல. ஆனால் அதைப்போன்றதுதான். கடவுளுக்கு இணையான ஒன்றா? அது என்ன என்று ஆச்சரியமாக உள்ளதா? அது வேறு ஒன்றுமல்ல. காதல்தான்.

  அப்படியானால் கடவுளும் காதலும் ஒன்றா? கடவுளுக்கு இணை வைக்கிறாயா, கடவுளை களங்கப்படுத்திவிட்டாய் என்று சிலர் அல்லது பலர் குதிக்கலாம், கொதிக்கலாம். நான் இணை துணையெல்லாம் வைக்கவில்லை. காதலைப் பற்றிய ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல கடவுளைப் பற்றியும் பேசுகிறேன். அவை இரண்டும் ஒன்று என்று நான் சொல்லவில்லை. அவை ஒன்றாகக்கூட இருக்கும் சாத்தியம் உண்டு. ‘காதல்’ என்ற சொல்லுக்கு நாம் என்ன பொருள் கொடுத்து அந்தக் கேள்வியைக் கேட்கிறோம் என்பதைப் பொறுத்தது அது.

  ஒரு ஊருக்கு ஒரு ஞானி சென்றார். அவரைப் பார்க்க வந்த ஒரு கிராமத்துக்காரர், தான் கடவுளை அறிய விரும்புவதாகவும் அதற்கு அந்த ஞானி வழிகாட்ட வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார். நீ யாரையாவது காதலித்திருக்கிறாயா என்று ஞானி கேட்டார். காதலா?! ஐயையோ, அந்த மாதிரி காரியத்துக்கெல்லாம் நான் போனதே இல்லை என்றார் கிராமத்துக்காரர். கொஞ்சமேனும் உன் மனதில் யாருக்காகவேணும் காதல் இருந்ததே இல்லையா என்று மீண்டும் கேட்டார் ஞானி. சத்தியமாக இல்லை என்று அடித்துக்கூறிய கிராமத்துக்காரர், நான் அந்த மாதிரி கீழ்த்தரமான காரியங்களைப் பற்றி நினைத்ததுகூடக் கிடையாது. எனக்கு நான் ஞானம் பெற விரும்புகிறேன். கடவுளை அறியும் அனுபவம் எனக்கு வேண்டும். என் வாழ்க்கையின் நோக்கமே அதுதான். அதற்காகத்தான் உங்கள் பாதங்களைப் பிடித்துள்ளேன் குருவே என்று கூறினார்.

  ம்ஹும், உன்னால் கடவுளை அறிவது சாத்தியமே இல்லை. விதையே இல்லாமல் எப்படி ஒன்று மரமாகும்? காதலே உள்ளத்தில் இல்லாமல் எவனாலும் கடவுளை அறிய முடியாது. உன்னிடம் அடிப்படைத் தகுதியே இல்லை. காதல் உணர்வு இல்லாதவன் சாத்தான் மட்டுமே. நீ ஒரு சாத்தான். சாத்தான்களால் கடவுளை அடையவோ அறியவோ முடியாது. காதல் என்றால் நீ ஏதோ தப்பாக நினைத்துக்கொண்டிருக்கிறாய். அதுதான் அடிப்படை. அதுதான் விதை. கடவுள் ஆடையென்றால் காதல்தான் நூல். நீயோ காயடிக்கப்பட்ட மாடு மாதிரி உள்ளாய். உன்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. போ போ, என்னிடம் மீண்டும் வராதே என்று சொல்லி விரட்டிவிட்டாராம்! From Sex to Superconsciousness என்று ஓஷோவின் அற்புதமான புத்தகம் ஒன்று உள்ளது. ‘காமத்திலிருந்து கடவுளுக்கு’ என்று அது அழகாக தமிழாக்கமும் செய்யப்பட்டுள்ளது. படித்துப் பாருங்கள்.

  கேள்வி கேட்பவர்களெல்லாம் புரிந்துகொள்கின்ற தகுதி படைத்தவர்கள் என்று புரிந்துகொள்வது தவறாகப் போய்விடலாம். அதேபோல, பதில் சொல்லக்கூடியவர்களெல்லாம் அறிவாளிகள் என்று நினைப்பதும் முட்டாள்தனமான நம்பிக்கையாகிவிடலாம்! சில கேள்விகளைக் கேட்காமல் இருப்பதே அதற்குரிய பதிலாகிவிடும்.

  ‘ஏங்க, என் ஃபோனை எங்க வச்சேன்னு தெரியல, பாத்திங்களா?’ என்று மனைவி கேட்கிறாள்.

  ‘உன் ஜீன்ஸிலேயே இருக்கு’ என்றான் கணவன்.

  ‘ம்க்கும், என் பரம்பரையை கொறெ சொல்லாம உங்களால இருக்க முடியாதே’ என்றாளாம் மனைவி!

  இது வாட்ஸப்பில் வந்த ஒரு நகைச்சுவைத் துணுக்கு. ஆனால் இத்துணுக்கு சொல்வது உண்மை. நாம் அனைவருமே வார்த்தைகளில் சிக்கிக்கொண்டு தவிக்கிறோம். காதலும் கடவுளும் ஒன்றா என்ற கேள்வியும், அதையொட்டிய வருத்தம் அல்லது கோபமும் இப்படிப்பட்டதே.

  அவை இரண்டும் ஒன்று என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் அவை இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை இரண்டுமே அனுபவம் சார்ந்தது என்பதுதான்.

  அவற்றை உணர்ந்துதான் பார்க்க வேண்டுமே தவிர அலசிப் பார்க்கக் கூடாது. அப்படிச் செய்ய முயற்சி செய்தால், அது நீச்சல் பற்றிய புத்தகங்களைப் படித்துவிட்டு நான் நீந்தக் கற்றுக்கொண்டுவிட்டேன் என்று சொல்வதைப் போன்றது! நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டுமெனில் தண்ணீருக்குள் குதித்துவிட வேண்டும். அது ஒன்றுதான் வழி. அந்த அனுபவம்தான் நமக்குப் பல விஷயங்களை, நுட்பங்களை, புத்தகங்களிலெல்லாம் இல்லாததைக் கற்றுக்கொடுக்கும். God is not an argument. God is an experience என்று ஓஷோ சொன்னது நினைவுக்கு வருகிறது.

  கடவுளை இப்போதைக்கு விட்டுவிடலாம். காதலை எடுத்துக்கொள்வோம். நான் பேச நினைக்கும் காதல், கல்யாணத்துக்கு முன் வெகு இளம் வயதில் வரும், romance, crush என்றெல்லாம் சொல்லப்படும் சமாச்சாரம் அல்ல. கல்யாணம் செய்த பிறகு செய்ய வேண்டிய காதல்!

  லிவிங் டுகெதர் காதல்

  ‘லிவிங் டுகெதர்’ என்ற பெயரில் நடக்கும் நெறியற்ற உறவுகளில் அரங்கேறும் காதலைப் பற்றியும் நான் பேச வரவில்லை. ‘லிவிங் டுகெதர்’ என்று சொன்னதும் சமீபத்தில் அது தொடர்பாக நடந்த ஒரு தொலைக்காட்சி விவாதம் நினைவுக்கு வருகிறது. அந்நிகழ்ச்சியில் ஒரு பக்கம் திருமணம் செய்துகொள்ளாமலே சேர்ந்து வாழ்பவர்களும், இன்னொரு பக்கம் தம்பதிகளும் இருந்தனர்.

  தன் மகனின் ‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கையை ஆதரிக்கும் ஒரு அம்மாவும் அதில் இருந்தார். தன்னிடம் சொல்லிவிட்டுத்தான் தன் மகன் அப்படி வாழ்கிறான் என்று பெருமையாக அந்த அம்மா சொன்னார். இதேபோல வாழ்வதற்கு உங்கள் மகள் அனுமதி கேட்டால் கொடுப்பீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே! மாட்டேன் என்பதுபோலத் தலையையும் ஆட்டினார்.

  சேர்ந்து வாழும் பெண்ணோடு உடலுறவு வைத்துக்கொள்வதுண்டா என்ற கேள்விக்கு ஒருவர் ஆமாம் என்று சொன்னார். அந்தப் பெண்ணின் பெயரைச் சொல்ல முடியுமா என்று கேட்டபோது அவர் அது வேண்டாமே என்று சொன்னார். ஒரு பெண்ணை நீங்கள் திருமணம் செய்திருந்தால், உங்கள் மனைவி பெயர் என்ன என்று கேட்டால் சொல்வீர்கள் அல்லவா என்று அப்போது அவரிடம் கேட்கப்பட்டது!

  மிக முக்கியமான கேள்விகள் அவை. ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்வதற்காகப் பழகுகிறோம் என்று சொல்லும் ‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கையின் தோலை உரித்து அம்பலப்படுத்துவதாக இருந்தது அந்நிகழ்ச்சி. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியில் அமெரிக்காவில் ஆணும் ஆணும் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற சட்டம் இருப்பதை சுட்டிக்காட்டினார் ஒரு பிரபல எழுத்தாளர். அதைக்கேட்ட ஒரு அண்ணன் என் காதில் வந்து, ‘தம்பி, இவனும் அந்த மாதிரி ஆளாத்தான் இருப்பான்’ என்று கிசுகிசுத்தார்!

  ஓரினச் சேர்க்கை, லிவிங் டுகெதர் போன்ற விஷயங்களை எதிர்த்துப் பேசுவது நோக்கமல்ல. அதற்காக அவற்றை நான் ஆதரிக்கிறேன் என்றும் அர்த்தமல்ல. நிச்சயமாக நான் அவற்றை வெறுக்கிறேன். அத்தகைய உறவானது இயற்கைக்கும், பண்பாட்டுக்கும், அறத்துக்கும் முரணானது என்பதை உணர்கிறேன். ஆனால் நான் இங்கே சொல்ல வந்த முக்கியமான விஷயம், திருமணத்துக்குப் பிறகான காதல் உறவு பற்றி.

  சரி, அதைப்பற்றி இங்கே ஏன் பேச வேண்டும்? என்ன அவசியம் இப்போது வந்தது என்று கேட்கலாம். அவசியம் உள்ளது. நம் நாட்டில் அன்றாடம் நடக்கும் காமலீலைகள், கட்டுக்கடங்காமல் அவிழ்த்துவிடப்பட்ட காமக்கொடூரங்கள்தான் காரணம். இன்றையை சமுதாய சூழ்நிலையை நம்பி ஒரு பெண் குழந்தையை வெளியில் அனுப்ப முடியவில்லை. பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்கள் என்று எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் காமக்கொலைகாரர்கள். பல பேர் சேர்ந்து ஒரு குழந்தையை பாலியல் ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்குவதும் நமக்குத் தெரிந்த செய்திதான்.

  கொஞ்ச காலத்துக்கு முன் தன் காதலியின் தலையை வெட்டி ஒருவன் அதைத் தூக்கிக்கொண்டே சென்று காவல் நிலையத்தில் சரணடைந்தான். அதில் விசேஷம் என்னவெனில், அவள் இன்னொருவனின் மனைவி! அவனோடு கள்ள உறவு வைத்திருந்தவரை அவள் பிழைத்திருந்தாள். அவன் பிடிக்கவில்லை என்று வேறொருவனை அவள் தேர்ந்தெடுத்தவுடன், இந்தக் கோவலன் அந்தக் கண்ணகிக்காக கொதித்தெழுந்து அவள் தலையைக் கொய்துவிட்டான்! இன்றையை காதலின் நிலை இது!

  ஒரு பெண்ணின் அந்தரங்க உறுப்புகளை சிதைப்பது, புண்ணாக்குவது, ரத்தக்களறியாக்குவது, உறுப்பு சார்ந்த வெறிகளைத் தணித்துக்கொள்வது என்று இன்று காதல் அர்த்தமாகியுள்ளது. செல்வத்துக்காக, செல்வாக்குக்காக, அதிகாரத்துக்காக, அடாவடிக்காக என்று பல காரணங்களுக்காக இது செய்யப்படுகிறது. மென்மை என்ற உணர்வுக்கும் இத்தகையை செயல்களுக்கும் தொடர்பே கிடையாது என்பதைப் போன்ற ஒரு கருத்தை இது இன்றைய சமுதாயத்தில் விதைத்து வருகிறது. இது மிகவும் அபாயகரமான சூழலாகும். இனி வரும் காலத்தில், எங்களுக்குத் திருமணமே வேண்டாம் என்று பெண்கள் முடிவெடுக்கும் நிலைக்குக்கூட இது தள்ளலாம்.

  சந்தைக்குப்போய் ஒரு கிலோ காதல் கொடுங்க என்று காதலை நாம் காசு கொடுத்துக் கேட்டு வாங்க முடியாது. அது வெளியிலிருந்தும் வராது. பூமிக்குக் கீழே மரங்கள் வேர்விடுவதைப்போல நமக்கு உள்ளே இருந்து அது வ(ள)ர வேண்டும். அதை யாரும் சொல்லித்தரவும் முடியாது. அது ஒரு சிலையைப் போன்றது. ஒவ்வொரு கல்லுக்குள்ளும் ஒரு சிலை உள்ளது. தேவையற்ற கல் பகுதிகளை நீக்கிவிட்டால் போதும். சிலை தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். ஆனால் தேவையில்லாததைக் கழிக்கத் தெரிய வேண்டுமானால் நீங்கள் ஒரு சிற்பியாக இருக்க வேண்டும்.

  காதலும் இப்படிப்பட்டதுதான். உள்ளே இருந்து வருவதால்தான் காதல் வாழ்வை விளக்கிப் புரியவைக்க முடியாமல் உள்ளது. ‘செக்ஸ் எஜுகேஷன்’ என்ற கருத்தின் அடிப்படையே தவறானது என்று நினைக்கிறேன். ஏனெனில், புத்தகங்களில் உள்ளதை வைத்துக்கொண்டு, படித்ததை வைத்துக்கொண்டு, வகுப்பில் விளக்கப்பட்டதை வைத்துக்கொண்டு எல்லாருமே ஒரே மாதிரியான ‘ப்ராக்டிகலில்’ இறங்க முடியாது! காதலின் நிறம் பச்சை என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட முடியாது. ஒருவருக்கு அது கிளிப்பச்சையாக இருக்கும். இன்னொருவருக்கு இலைப்பச்சையாக இருக்கும். எனவே, காதல் உறவைப் பற்றி யாரும் ‘பச்சையாக’ப் பேசி விளக்கிவிட முடியாது. கடலில் இணைவதற்கு வழியென்ன என்று என்றைக்காவது எந்த நதியாவது கேட்டிருக்கிறதா?!

  ஆனால் சில குறிப்புகளை வேண்டுமானால் தரலாம். அத்தகைய குறிப்புகளை தமிழிலக்கியம் நிறையவே கொடுத்துள்ளது. நான் இங்கே வாத்ஸ்யாயனம் பற்றிப் பேசவில்லை. அது வேறு. அதுதான் செக்ஸ் எஜுகேஷன். அதுவும் இந்தக் காலத்துக்கு, நாணமுள்ளவர்களுக்கு, முற்றிலும் பொருந்தாத கலவி, ஸாரி, கல்வி! இப்போதைக்கு வாத்ஸ்யாயனரை விட்டுவிடுவோம்.

  மறைமுகமான, ஆனால் அவசியமான காதல் உறவைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். நீ என்ன இதில் ‘எக்ஸ்ட்பர்ட்’டா என்று கேட்கலாம். படித்து முடித்த பிறகு இக்கேள்விக்கு தானாகவே பதில் கிடைக்கும்! என்ன, களத்தில் இறங்கத் தயாரா? தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம். களம் என்றால் புரிந்துகொள்ளும் களம்.

  காதலின் தொடக்கம் என்ன தெரியுமா? காமம். என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆச்சரியம், ஆனால் உண்மை ரகத்தில் காமமும் வந்துவிடுகிறது. காமம் என்றாலே காதல் என்றுதான் அர்த்தம். அதனால்தான் திருக்குறளின் மூன்றாவது பாலுக்கு காமத்துப்பால் என்று பெயர்! காதலுக்கான ஆனா ஆவன்னாதான் காமம். காதல் கங்கையின் கங்கோத்ரிதான் காமம்.

  இப்படிச் சொன்ன உடனேயே உங்கள் கற்பனைக் குதிரையை பறக்கவிடக் கூடாது. நான் இங்கே திருமணத்துக்குப் பிறகான காதல் உறவைப் பற்றித்தான் பேசப்போகிறேன் என்று முன்னமேயே சொல்லிவிட்டேன். அதை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருவது நல்லது.

  மறு சோறு உண்டு…

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp