Enable Javscript for better performance
55. தீபாவளி அல்வா!- Dinamani

சுடச்சுட

  
  guru-disciple

   

  ‘‘திருநெல்வேலி அல்வா சாப்பிட்டிருக்கிறாயா?’’

  குருவின் கேள்வியே இனிப்பை உணரவைத்தது சிஷ்யனின் வாய்க்குள்!

  ‘‘பல வருடங்களுக்கு முன்பு.. மிகவும் குழந்தையாக இருந்தபோது சாப்பிட்டதாக நினைவிருக்கிறது குருவே’’ என்றான் சிஷ்யன். வெறும் வாயில் சப்புக் கொட்டிக் கொண்டான்.

  ‘‘அதன் சுவை எப்படி இருக்கும் என்று தெரியுமா?’’ என்றார் குரு.

  ‘‘சரியாக நினைவில் இல்லை குருவே. ஆனால், மிகவும் சுவையாக இருக்கும் என்று பலர் மூலம் கேள்விப்பட்டிருக்கிறேன்’’ என்றான் சிஷ்யன்.

  ‘‘நல்லது. நாளை அதனைச் சுவைக்க உனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கப்போகிறது..’’ என்றார் குரு.

  ‘‘அப்படியா குருவே?!’’ என ஆவல் பொங்கக் கேட்டான் சிஷ்யன்.

  ‘‘திருநெல்வேலியில் இருந்து ஒரு அன்பர் நம்மைச் சந்திக்க நாளை வருகிறார். நீ ருசிப்பதற்காக கொஞ்சம் அல்வா வாங்கிவரும்படி அவரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன்..’’ என்றார் குரு.

  அந்த வார்த்தைகளை கேட்கும்போதும் இனித்தது சிஷ்யனுக்கு. நாவினைத் துறுத்தி உதடுகளில் இல்லாத இனிப்பை சுவைத்துக்கொண்டான்.

  அவன் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை ரசித்துப் புன்னகைத்தார் குரு.

  அன்று முழுவதும் இருப்புக்கொள்ளவில்லை சிஷ்யனுக்கு. எந்தப் பக்கம் திரும்பினாலும் திருநெல்வேலி அல்வாவின் நினைவாகவே இருந்தது. நினைக்க நினைக்க இனித்தது.

  இரவு தூங்கும்போது அவன் கனவிலும் அல்வா வந்துபோனது!

  மறுநாள்.. காலையில் வழக்கத்துக்கு முன்பே எழுந்துவிட்டான் சிஷ்யன். அல்வா கொண்டுவரும் அன்பரை எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டான்!

  அன்பர் வந்தார். அல்வாவும் வந்து சேர்ந்தது.

  வந்தவர் குருவை வணங்கிவிட்டு, தன் கையில் இருந்த அல்வா பொட்டலத்தைக் கொடுத்தார். அதையே பரவசத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான் சிஷ்யன். இன்னும் சில நிமிடங்களில் அதை ருசிக்கப்போகிறோம் என்ற நினைப்பு விதைத்த பரவசம் அது.

  சிஷ்யனைக் காக்கவைக்க விரும்பவில்லை குரு. பொட்டலத்தைப் பிரித்தார். மூன்று விரல்களால் அல்வா துண்டை எடுத்தார். சிஷ்யனிடம் கொடுத்தார்.

  ஆசை ஆசையாக அதை வாங்கிக்கொண்டான் சிஷ்யன்.

  ‘‘ம்.. சாப்பிடேன்’’ என்றார் குரு.

  இரண்டு நாள் தவம் முடிவுக்குவந்த மகிழ்ச்சியில் கையில் இருந்த அல்வாத் துண்டை வாய்க்குக் கொண்டுபோனான். அதை வரவேற்கத் தயாராக இருந்தது அவன் வாய்க்குள் சுரந்திருந்த உமிழ்நீர்.

  உதடுகளைக் கடந்த அல்வாத்துண்டு பொசுக்கென தொண்டையைக் கடந்து வயிற்றுக்குள் ஓடிவிட்டது. அல்வாவில் படிந்திருந்த நெய்யின் வழுவழுப்பும், வாய்க்குள் காத்திருந்த உமிழ் நீரின் வழவழப்பும் அப்படி வழுக்கிக்கொண்டு உள்ளேறச் செய்துவிட்டன!

  ‘‘அனுபவித்துப் பார்த்துவிட்டாய். இப்போது சொல்.. அதன் சுவை எப்படி இருக்கிறது?’’ என்று கேட்டார் குரு.

  மலங்க மலங்க விழித்தான் சிஷ்யன்.

  ‘‘அது வந்து.. வந்து.. வாய்க்குள் வைத்ததுமே வழுக்கிக்கொண்டு வயிற்றுக்குள் ஓடிவிட்டது. நிதானமாக சுவைக்க வாய்ப்பே கொடுக்கவில்லை குருவே..’’ என்று அசடு வழிந்தான் அவன்.

  புன்னகைத்துக்கொண்டார் குருநாதர். சத்தமிட்டுச் சிரித்தார் வந்திருந்த அன்பர்.

  ‘‘இதன் சுவையை ரசித்து ருசிக்க வேண்டும் என நேற்று காலையில் இருந்து மகிழ்ச்சியோடு காத்திருந்தாய் அல்லவா..’’ என்று கேட்டார் குரு.

  ‘‘ஆமாம் குருவே..’’ என்று வருத்தம் தெரிய பதில் சொன்னான் சிஷ்யன்.

  ‘‘வாய்க்குள் போட்டதுமே கரைந்துபோன அல்வாவுக்கும் நாம் வருடம் முழுக்க கொண்டாடி மகிழும் பண்டிகைகளுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது.. தெரியுமா?’’ என்று கேட்டார் குரு.

  குருவின் எதிரே வந்து அமர்ந்துகொண்டான் சிஷ்யன். வந்திருந்த அன்பரும் ஆர்வத்துடன் குருவின் பேச்சைக் கேட்கத் தயாரானார்.

  ‘‘வருடத்தின் எல்லா நாட்களையும் ஆவலோடும் மகிழ்ச்சியோடும் நாம் கடப்பதற்காகவே பண்டிகைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்துக்கு, தீபாவளி பண்டிகையை எடுத்துக்கொள்வோம். தீபாவளியை எதிர்கொள்ளத் தயாராகும் ஒவ்வொரு நாளுமே தீபாவளிதான். தினம்தினம் இனிக்கும். புதிய ஆடைகள் வாங்குவோம். பண்டங்கள் சமைப்போம். பட்டாசுகள் வாங்குவோம். விருந்தினர்களை வீட்டுக்கு அழைப்போம். ஒரு நாள் பண்டிகைதான். ஆனால் அதற்கு முந்தைய நாட்கள் ஒவ்வொன்றையும் மகிழ்வுடன் எதிர்கொள்வோம். சட்டென வயிற்றுக்குள் பாய்ந்தோடும் அல்வாவைப்போல, இருபத்தி நான்கு மணி நேரத்தில் சட்டென கடந்துபோய்விடும் தீபாவளி. உண்மையில் அந்த ஒரு நாள் மட்டுமல்ல தீபாவளி. அதை எதிர்பார்த்து அகமகிழ்வுடன் காத்திருக்கும் ஒவ்வொரு நாளுமே தீபாவளிதான்! அப்படித்தான் எல்லா பண்டிகைகளும் வருடம் முழுக்க நம்மை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதற்காக உருவாக்கப்பட்டவையே!’’ என்றார் குரு.

  தான் வாங்கிவந்த அல்வாவுக்கும் வருடம் முழுவதும் கொண்டாடும் பண்டிகைகளுக்கும் உள்ள ஒற்றுமையை நினைத்து ஆச்சரியப்பட்டார் வந்திருந்த அன்பர். சிஷ்யன் சிந்தித்துக்கொண்டிருந்தான்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai