Enable Javscript for better performance
57. மனமே மருந்து- Dinamani

சுடச்சுட

  
  guru-disciple

   

  எப்போதுமே உற்சாகத்துடன் ஆசிரமத்துக்கு வருபவர் அந்த மனிதர். குருவை வணங்கி, அவரிடம் ஆசி பெற்று, சில நிமிடங்கள் பேசிவிட்டுச் செல்வார்.

  ஊருக்குள் அவர் மிகுந்த செல்வாக்குடனும் செல்வத்துடனும் இருப்பவர். தன்னை நாடி வருபவர்களில் யாருக்கேனும் உடனடி உதவி தேவைப்பட்டால் அவரிடம்தான் அனுப்பிவைப்பார் குருநாதர். அவரும் மெனக்கெட்டு உதவிகளை செய்து கொடுப்பார்.

  வழக்கத்துக்கு மாறாக, மிகவும் சோர்வுடன் வந்திருந்தார் அன்று.

  தளர்ந்த நடையிலும், தட்டுத் தடுமாறும் பேச்சிலும், கவலை அப்பிக்கிடந்த முகத்திலும் அவரது மனச்சோர்வு நன்கு தெரிந்தது.

  ‘‘என்ன அய்யா.. இன்று மிகவும் சோகமாக இருக்கிறீர்களே?’’ என சிஷ்யனே கேட்டு விட்டான்.

  ‘‘எனக்கு சர்க்கரை நோய் வந்திருப்பதாக மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். அடிக்கடி பசிக்கிறது. வாயைக் கட்டிக்கொண்டு சாப்பிடவும் பிடிக்கவில்லை. உடல் எப்போதுமே சோர்வாக இருக்கிறது. பழைய உற்சாகத்துடன் செயல்படவே முடியவில்லை’’ என்றார் அவர்.

  அவரது கைப்பிடித்து வாஞ்சையுடன் குருவின் முன்பாக அழைத்துவந்தான் சிஷ்யன். குருவிடமும் தன் சர்க்கரை நோய் சோகத்தைச் சொன்னார் அவர்.

  ‘‘நீரிழிவு என்பது ஒரு நோயல்ல.. அது ஒரு குறைபாடு. அவ்வளவுதான். அதற்காக அதையே நினைத்து கவலைப்படுவது உடல் ஆரோக்கியத்தைக் குறைத்துவிடும்’’ என்றார் குரு.

  ‘‘என்னால் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை குருவே. என்னை நம்பி என் குடும்பம் மட்டுமல்ல, என்னிடம் பணிபுரியும் நாற்பது பணியாளர்களின் குடும்பங்களும் இருக்கின்றன. எனக்கு ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் என்னாகுமோ என்று எப்பொதுமே பதட்டமாக இருக்கிறது’’ என்றார் வந்திருந்தவர்.

  ‘‘உங்கள் பிரச்னை உங்களுக்கு வந்திருக்கும் குறைபாடு அல்ல..’’ என்றார் குரு.

  வந்திருந்தவருக்கு புரியவில்லை. குரு விளக்கிக் கூற ஆரம்பித்தார்.

  ‘‘நீரிழிவால் பாதிக்கப்படும் நபர்களுக்கு என்னவெல்லாம் உடல்நலக் கோளாறுகள் வரலாம் என்பதை நீங்கள் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அவையெல்லாம் வரலாம் என்ற கருத்துதான். கண்டிப்பாக எல்லோருக்கும் வந்து சேரும் என்று சொல்ல முடியாது. ஆனால், எல்லா பிரச்னைகளும் உங்களுக்கு வந்துவிட்டதாக நீங்கள்தான் கற்பனை செய்துகொள்கிறீர்கள். சரியாக சாப்பிடாததாலோ அல்லது வேறேதேனும் சாதாரண காரணங்களால் வரும் தலைவலியைக்கூட சர்க்கரையின் பாதிப்பினால்தான் இப்படி ஆகிறது என்று பயந்துவிடுகிறீர்கள். அதனால்தான் இவ்வளவு தூரம் கவலைப்படுகிறீர்கள். மனதை மீறிய மருந்து உலகில் இல்லை. மருத்துவர்கள் கொடுத்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. அதை எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், நோயோ குறைபாடோ அது உங்கள் உடலில் மட்டுமே இருக்கட்டும். மனதுக்குக் கொண்டுபோய்விடாதீர்கள். எந்த நோயாக இருந்தாலும் எதிர்த்து நின்று விரட்டியடிக்கும் சக்தி மனதுக்கு உண்டு. மனதுக்கு நோய்களை எடுத்துக்கொண்டுபோவதால், மனம் வலுவிழந்துவிடும். இல்லாத கோளாறுகளையெல்லாம் இருப்பதாக கற்பனை செய்துகொள்ளும். சதா சர்வகாலமும் நோயாளியாகவே பீதியுடனேயே இருக்கச் செய்துவிடும். அதுதான் உங்களுக்கு நடந்திருக்கிறது..’’ என்றார் குரு.

  நிதானமாக யோசிக்க ஆரம்பித்தார் வந்திருந்தவர்.

  ‘‘நமக்கு ஏற்படும் துன்பங்களைவிட, அந்த துன்பங்கள் பற்றிய நினைவுகளை மனதுக்குள் போட்டு குழப்பிக்கொள்வதே மிகவும் துன்பம் கொடுக்கக்கூடியது. நோய்களால் இறந்தவர்களைவிட நோய் பற்றிய நினைவுகளால் துவண்டுபோய் இறந்தவர்களே அதிகம்!’’ என்று குரு சொன்னபோது, வந்திருந்தவரின் மனதை விட்டு அவரது உடல் நோய் வெளியேறி இருந்ததை அவரது புன்னகை முகத்தில் அறிந்தான் சிஷ்யன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai