Enable Javscript for better performance
23. இதைவிடவா?!- Dinamani

சுடச்சுட

  
  guru-disciple

   

  முக்கியமான காரியம் ஒன்றைச் செய்து முடித்துவிட்டு வருமாறு சிஷ்யனைப் பணித்தார் குரு. தயங்கினான் சிஷ்யன். தயக்கத்துடனேயே பேசினான்.

  அந்தப் பணியில் இருக்கும் சிக்கல்களையும், சந்திக்க நேரும் சங்கடங்களையும் பட்டியலிட்டான். பயந்தான். பணியைத் தட்டிக்கழிக்க முயன்றான்.

  அவனது பயத்தைப் புரிந்துகொண்டார் குரு. ‘‘சரி, இன்னொரு நாளில் பார்த்துக்கொள்ளலாம்..’’ என்று சொல்லிவிட்டார்.

  ஆனால், அவனது பயத்தைப் போக்கும்விதமாக பாடத்தைப் போதித்தாக வேண்டுமே. ஒரு சில நிமிடங்களில் மீண்டும் அவனை அழைத்தார்.

  நகருக்குள் சென்று, ஒருவரைச் சந்தித்து, பொருள் ஒன்றைக் கொடுத்துவிட்டு வருமாறு சொன்னார். மிகவும் சாதாரணமான பணி அது. நகருக்குள் சென்றுவருவது சிஷ்யனுக்குப் பிடிக்கும் என்பதாலும் அந்தப் பணியை அவனுக்குக் கொடுத்தார்.

  உற்சாகமாக விடை பெற்று, ஆசிரமத்தைவிட்டு வெளியேறினான். ஓட்டமும் நடையுமாகச் சென்று, குரு கொடுத்த பணியை முடித்துவிட்டு, ஆசிரமம் திரும்பினான்.

  ‘‘சிக்கல், சங்கடம்.. எதையும் சந்திக்காமல் நகருக்குள் பத்திரமாகச் சென்றுவர முடிந்ததா உன்னால்?’’ என்று அவனிடம் கேட்டார் குரு.

  ‘‘இந்தச் சிறு பணியில் என்ன சிக்கல் இருக்கமுடியும் குருவே. பத்திரமாக நான் வந்துவிட்டேன்’’ என்றான் சிஷ்யன்.

  ‘‘வழியில் ஏதேனும் ஆபத்தைச் சந்திக்க நேர்ந்ததா?’’ என்றார் குரு.

  ‘‘இல்லை குருவே’’ என்றான் சிஷ்யன். ‘‘சாலைவிதிகளை சர்வ ஜாக்கிரதையாக கடைப்பிடிப்பவன் நான். அதனால் எப்போதும் விபத்துக்கு வாய்ப்பே இல்லை. நான் உண்டு, என் வேலை உண்டு என இருப்பவன் நான். அதனால் வேறெந்த ஆபத்தும் எனக்கு ஒருபோதும் ஏற்படாது..’’ என்றும் சொன்னான்.

  ‘‘நீ விழிப்புடன் இருந்தால் மட்டுமே விபத்துகளைத் தவிர்த்துவிடலாம் என்ற உத்திரவாதம் இருக்கிறதா என்ன?!’’

  குருவின் கேள்வி சிஷ்யனை யோசிக்கவைத்தது.

  ‘‘உனக்கு முன்னேயும் பின்னேயும் பயணிக்கும் வாகனஓட்டிகளும் அதே ஜாக்கிரதை உணர்வுடன் இருக்க வேண்டுமல்லவா! அவர்கள் கவனமாக இருந்தாலும், அவர்களது வாகனங்களில் திடீர் கோளாறுகள் ஏற்பட்டுவிடாமல் இருக்க வேண்டுமல்லவா! இயற்கையும் தன் திடீர் சீற்றத்தைக் காட்டிவிடக் கூடாதல்லவா! ஏதேனும் விபத்து ஏற்பட்டுவிட்டால் அது உன்னை மரணம் வரை கொண்டு செல்லவும் வாய்ப்பிருக்கிறதல்லவா!"

  குருநாதர் பேசப்பேச.. அவர் பேசியதை நினைக்க நினைக்க.. லேசாக கிலி பிடித்தது சிஷ்யனுக்கு. வெறுமனே நடந்து செல்வதில் இத்தனை ஆபத்துகள் நிகழ வாய்ப்பிருக்கிறதா என யோசித்தான். நல்லவேளையாக அப்படி எதுவும் தனக்கு நிகழவில்லை என நிம்மதி கொண்டான்.

  பணியை முடித்த மகிழ்ச்சியில், ‘‘நீங்கள் சொன்ன அத்தனை இடர்களுக்கும் சாத்தியம் இருக்கிறது. ஆனால், அதையெல்லாம் நினைத்துப் பயந்துகொண்டிருந்தால் தெருவில் இறங்கி நடக்கமுடியுமா குருவே! நினைக்காமல் நடந்தேன், நீங்கள் இட்ட கடமையை இனிதே முடித்தேன்!’’ என்றான் சிஷ்யன்.

  அவன் பேச்சைக் கேட்டதும் ரசித்துச் சிரித்துக்கொண்டார் குருநாதர். பின்னர் தன் கேள்வியை முன் வைத்தார்.. ‘‘மரணத்தைவிடவா கொடிய துயரம் இருக்கப்போகிறது? அப்பேர்ப்பட்ட பேராபத்துக்குரிய பணியையே நீ எவ்வளவு எளிதாகச் செய்து முடித்திருக்கிறாய்! காலையில் நான் உனக்குக் கொடுத்த பணி இதைவிடவா ஆபத்தானது?’’ என்றார்.

  காலையில் தனக்கிருந்த தயக்கம் சிறுபிள்ளைத்தனமானது என்ற உண்மை புரிந்தது சிஷ்யனுக்கு.

  ‘‘விபத்துகளுக்குப் பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதும், செயற்கரிய செயல்களைச் செய்யாமல் தவிர்த்து விடுவதும் ஒன்றுதான்’’ என்று கூறிப் புன்னகைத்தார் குரு.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai