Enable Javscript for better performance
82. முடிவும் விளைவும்- Dinamani

சுடச்சுட

  
  guru-disciple

   

  பிரதோஷ நாள்.

  “ஆலயம் சென்றுவரலாமா குருவே..” என ஆவலுடன் கேட்டான் சிஷ்யன். மகிழ்வுடன் கிளம்பினார் குருவும்.

  இருவரும் அருகே இருந்த ஆலயத்துக்குச் சென்றார்கள். இறைவனை தரிசித்துவிட்டு கோவிலை வலம் வந்துகொண்டிருந்தார்கள். அப்போது வேகவேகமாக ஓடிவந்த இளைஞன் ஒருவன் குருவின் குறுக்கே நின்றான்.

  “ஸ்வாமி வணக்கம். என்னை நீங்கள் ஆசீர்வதிக்க வேண்டும்..” என்றான். குருவும் அவனுக்கு அன்புடன் ஆசி வழங்கினார். பின்னர் அவனிடம், “ஆமாம்.. உன்னை நான் இதற்கு முன் சந்தித்ததில்லையே! என்னிடம் ஆசி வாங்க நீ ஓடிவந்த காரணம் என்ன?” என்று கேட்டார்.

  சிஷ்யனும் அதைத்தான் தன் மனதில் நினைத்துக்கொண்டிருந்தான். அதனால் அந்த இளைஞனின் பதிலைக் கேட்க ஆவலுடன் இருந்தான்.

  ‘‘ஒரு முக்கியமான பிரார்த்தனைக்காக இறைவனை தரிசிக்க வந்தேன். தரிசனம் முடித்துவிட்டு கிளம்பும்போது உங்களை கவனித்தேன். உங்களை வணங்கி ஆசீர்வாதம் பெற வேண்டுமென என் மனதுக்குள் உந்துதல் ஏற்பட்டது. அதனால்தான் ஓடிவந்தேன்’’ என்றான் அந்த இளைஞன்.

  கருணையுடன் புன்னகைத்தார் குருநாதர்.

  ‘‘சரி, அப்படி என்ன முக்கியமான பிரார்த்தனைக்காக ஆலயம் வந்திருக்கிறாய்?’’ என அந்த இளைஞனிடம் கேட்டார்.

  ‘‘பல நாட்களாக வேலை இல்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறேன் நான். நாளை ஒரு நிறுவனத்தில் நேர்முகத் தேர்வுக்காக என்னை வரச்சொல்லி இருக்கிறார்கள். தேர்வில் நான் வெற்றிபெற வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதற்கு இறைவனின் அருள் வேண்டி வந்திருக்கிறேன்’’ என்று சொன்ன இளைஞன், ‘‘என் விருப்பம் நிறைவேற நீங்களும் என்னை ஆசீர்வதியுங்கள் ஸ்வாமி..’’ என்று கூறி மறுபடியும் ஒருமுறை குருவின் காலைத் தொட்டுக் கும்பிட்டான். மறுபடியும் ஒருமுறை அவன் தலையை வருடி வாழ்த்தினார் குருநாதர்.

  ‘‘உன் கோரிக்கையை இறைவனிடம் கூறிவிட்டாயா?’’ என்று கேட்டார்.

  ‘‘ஆம் ஸ்வாமி. மனமுருக பிரார்த்தனை செய்தேன். நிச்சயம் நாளை எனக்கு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு வந்திருக்கிறேன்’’ என்றான் அந்த இளைஞன்.

  ‘‘ஒருவேளை.. நாளை அந்த நிறுவனத்தில் உனக்கு பணி கிடைக்காமல் போனால்?’’ என்று ஒரு புதிர் கேள்வியை அவன் முன்னே எடுத்துவைத்தார் குரு.

  சட்டென முகம் சுருங்கிப்போனான் அந்த இளைஞன். அவனுக்கு வேலை கிடைக்க வேண்டுமென சற்றுமுன்னர் பூரணமாக வாழ்த்திய குருநாதர் ஏன் இப்படி இப்போது எதிர்மறையான கேள்வியைக் கேட்கிறார் என சிஷ்யனுக்கும் புரியவில்லை. குருநாதர் போட்ட புதிரை அவரே அவிழ்ப்பார் என்ற நம்பிக்கையுடன் காதுகளைத் தீட்டிக்கொண்டு கவனமாக இருந்தான்.

  குரு பேசத் தொடங்கினார்.

  ‘‘அந்த நிறுவனத்தில் பணி செய்ய உனக்கு கிடைக்கும் வாய்ப்பு எல்லா வழிகளிலும் உனக்கு பொருத்தமானது, உன் எதிர்கால நலனுக்கு ஏற்றது என்பதை நீ உறுதியாக அறிவாயா?’’ என்றார்.

  ‘‘தெரியவில்லை ஸ்வாமி. இப்போது என் முன்னே இருக்கும் ஒரே வாய்ப்பு அதுமட்டும்தானே’’ என்றான் அந்த இளைஞன்.

  ‘‘நான் சொல்வதை மிகவும் கவனமாகக் கேள்..” என்றார் குருநாதர். தொடர்ந்தார்.

  ‘‘இந்தப் பணி எனக்கு கிடைக்க வேண்டும் என ஆண்டவனிடம் நீ கோரிக்கை வைத்திருக்கிறாய். நல்லது. அந்தப் பணி உனக்கு கிடைக்க ஆண்டவன் அருள்புரிகிறான் என்றே வைத்துக்கொள்வோம். எதிர்காலத்தில் அந்த நிறுவனம் தோல்வியை சந்திக்க நேர்ந்தால் என்னாகும்? உன் எதிர்காலமும் தோல்விகரமாகவே அமையும். இதுதான் வேண்டும் என்று இறைவனிடம் கேட்டால் இறைவன் அதை நமக்குக் கொடுப்பான். ஆனால் அதில் நாம் சந்திக்கும் சவால்களுக்கும் பிரச்னைகளுக்கும் துயரங்களுக்கும் அவன் பொறுப்பாகமாட்டான். நமது முடிவினால் ஏற்படும் விளைவுகளை நாம்தான் எதிர்கொண்டாக வேண்டும். மாறாக, எல்லாம் அறிந்த இறைவா.. எனக்கு எது நல்லதோ அதை நீ கொடுத்தருள வேண்டும் என இறைவனிடம் கேட்டால், இந்த நிறுவனத்தில் உனக்கான எதிர்காலம் இல்லையென்றால் இந்தப் பணி உனக்குக் கிடைக்கச் செய்யமாட்டான் இறைவன். உன் நிரந்தர நலனுக்கான உத்திரவாதம் எதுவோ அதையே கொடுத்தருள்வான். வேறு ஒரு நல்ல நிறுவனத்தை அடையாளம் காட்டுவான். எனக்கானதை நீயே கொடு என்று இறைவனிடம் வேண்டுவதுதான் சரியான பிரார்த்தனை..’’ என்றார் குரு.

  இளைஞனுக்கு குருவின் வார்த்தைகளுக்கான முழு அர்த்தம் புரிந்தது. “நன்றி ஸ்வாமி..” என்று கூறிவிட்டு திரும்பவும் ஆலயத்துக்குள் ஓட யத்தனித்தான்.

  “எங்கே போகிறீர்கள்?” எனக் கேட்டான் சிஷ்யன்.

  “நான் முதலில் கேட்ட கோரிக்கையை மறந்துவிட்டு, இப்போது கேட்கும் கோரிக்கையை ஏற்றுக்கொள் என்று இறைவனிடம் கேட்கப்போகிறேன். எனக்கு எது நல்லதோ அதைக் கொடு இறைவா என வேண்டுகோள் வைக்கப்போகிறேன்” என்று சொல்லிவிட்டு கோயிலுக்குள் ஓடினான் அந்த இளைஞன்.

  குருவும் சிஷ்யனும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக்கொண்டார்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai