Enable Javscript for better performance
3. ஆபரேஷன் மைக் டெஸ்ட்டிங்!- Dinamani

சுடச்சுட

  

  3. ஆபரேஷன் மைக் டெஸ்ட்டிங்!

  By ஜே.எஸ். ராகவன்.  |   Published on : 06th September 2018 10:00 AM  |   அ+அ அ-   |    |  

  jews_-_sivasami

   

  சிவசாமி கம்பீரமாக எழுந்து நின்று, தொண்டையைக் கனைத்து ‘யுவர் ஆனர்’ என்று ஆரம்பித்தான். நீதிபதியாக அமர்ந்திருந்த பஞ்சாமி இடைமறித்தார். ‘சிவசாமி! மைலார்டுனுதானே சொல்லணும்? இன்னும் சொல்லப்போனா நுனிநாக்கு ஆங்கிலத்திலே ‘மிலாடு’ன்னா விளிக்கணும்? மிலாடுங்கிறது ஏதோ மாலாடு, ரவாலாடு, குஞ்சாலாடுங்கிற மாதிரி தீபாவளி பட்சண ஐட்டமானா காதிலே விழறது இல்லையா?’

  ‘சரியாகச் சொன்னீர்கள் யுவர் ஆனர். ஆனால் மிலாடு என்று அழைக்கும் முறை வழக்கொழிந்து போய்விட்டது, காலாவதி ஆகிவிட்டது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வழக்கு விசாரணையின்போது மாலாடு, ரவாலாடு, குஞ்சாலாடு என்று காதில் விழுந்தால், இந்த வழக்காடு மன்றத்தில் இருக்கும் 99.78 விழுக்காடு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ள வழக்குரைஞர்களின் சர்க்கரை அளவு மேலும் கிர்ரென்று எகிறிவிடும். ஆகவே என்னைத் தொடர்ந்து பேச அனுமதிக்கக் கோருகிறேன்’.

  ‘யுவர் ஆனர்! என் கட்சிக்காரர் பிரபுசங்கர் ஒரு சராசரி மனிதர். வம்பு தும்புக்கெல்லாம் போகாதவர். கடிந்து யாரையும் பேசத் தெரியாதவர். துரத்திய நாய் அருகில் வந்து பிரேக் போட்டு, ‘இந்த மானிடனை எங்கே கடிக்கலாம்?’ என்கிற ரீதியில் ‘ஹ்ஹ… ஹ்ஹ…. ஹ்ஹ…’ என்று சிவந்த நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு சிந்தித்தால், திருவாளர் நாயைப் பார்த்து இரு கைகளையும் கூப்பி ‘ப்ளீஸ், சார்! நாய் சார், ஜிம்மி சார்! ஐயா ஜூஜூ! என்னை விட்டுவிடுங்கள். என்னுடைய மூதாதையர்கள் யாரேனும் உங்கள் மூதாதையரை அரைக்கல்லால் அடித்திருந்தால், அந்த வன்மத்தின் நிலுவையாக இந்தத் தொடைநடுங்கியைத் தொடையிலேயோ அதன் சார்ந்த பகுதிகளிலேயோ கடித்துக் குதறி செயலிழக்கச் செய்துவிடாதீர்கள்’ என்று…’

  ‘அடேய் சிவசாமி! உன் கட்சிக்காரர், துரத்திவந்த ஒரு நாயோடயே இவ்வளவு நீளமாக பேச்சுவார்த்தை நடத்துபவர்னா, துரத்தி வந்தது ஒரு யானையா இருந்தா எவ்வளவு நீளமா பேசுவார்? கஷ்டம். சரி வழக்கின் சாராம்சம் என்ன? உன் கட்சிக்காரர் பிரபுசங்கருக்கு என்ன ஆச்சு? என்னதான் வேணுமாம்?’

  ‘யுவர் ஆனர். நாய்க்கே இவ்வளவு பயப்படுபவர் என்றால், தன் நாயகிக்கு எவ்வளவு பயப்படுவார் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனி போல்…’

  ‘ஹோல்டான் சிவசாமி! நெல்லிக்கனியிலே இரண்டு வகை உண்டில்லே? சாதாரண நெல்லி, அருநெல்லின்னு. அதிலே எந்த நெல்லியை நீ சொல்றே? அதிலே எதைத் தின்னு தண்ணீர் குடிச்சா வாயெல்லாம் தித்திக்கும்’.

  ‘யுவர் ஆனர், கேஸுக்கு வரக் கோருகிறேன். வாதி பிரபுசங்கருக்கு ஒரு விபரீத ஆசை. ஒருநாள், ஒரே ஒருநாள், அவர் மனைவி சாந்தா, வாய் புதைத்து, திகைத்து நிற்க மனதில் உள்ளதை எல்லாம் கொட்டித் தீர்த்து அசத்தவைக்க வேண்டுமாம். இதற்கு இந்த மன்றம் ஆவன செய்ய வேண்டும் என்பதே அவர் முறையீடு. தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.’

  சிவசாமி பேசி முடித்த கையோடு பஞ்சாமி ஒரு கணம் நிதானித்து ஒரு அவுட்டுச் சிரிப்பு சிரித்தார். சிவசாமி மரியாதை நிமித்தம் அதை வாங்கி பதில் புன்னகை பூத்தான்.

  ‘சிவசாமி, விளையாட்டு போறும். நான் பிரபுசங்கரின் ஆசைக்கு ஒரு தீர்வை வெச்சிருக்கேன்டா?

  ‘அப்படியா அண்ணா?’

  ‘ஆமாண்டா. ஆனா அதைச் சொல்லமாட்டேன்.’

  ‘சொல்ல வேணாம், அண்ணா. அதாவது சஸ்பென்ஸ் ஹிட்ச்காக் மாதிரிதானே?

  ‘ஓ! அது ஹிட்ச்காக்கா? ஹிட்ச்காக்காய் இல்லையா?’

  ‘அண்ணா! அற்புதம்! அதிஅற்புதம் அண்ணா. அந்த சஸ்பென்ஸ் சக்கரவர்த்திதான் BIRDS-னு காக்காய்களை வெச்சு படம் எடுத்து பணத்தை அள்ளினார். அதனாலேதான் ஹிட்ச்காக்காய்னு சொன்னீர்களா? ஆஹா! ஆஹா! எல்லோரும் காக்காயா பறந்துவந்து படத்தைப் பாத்து ரசிச்சு, கா…கா…ன்னு மத்தவங்களையும் அழைச்சு பாக்க வெச்சாங்களா? சரி, சாந்தா மேட்டரை நான் எப்படி டீல் பண்றேன்னு பாரு. அதோட சீக்ரெட் CODE ‘ஆபரேஷன் மைக் டெஸ்ட்டிங்’

  ‘வெரிகுட் அண்ணா.’

  அடுத்த வாரம், கனிமுதிர்ச்சோலையிலிருந்து காய்-கனிகளுடன் சிவசாமி திரும்பி வந்தபோது, பஞ்சாமி தாடையில் குத்து வாங்கி மயங்கிச் சாய்ந்த வடகொரிய மல்யுத்த வீரராகச் சாய்ந்து கிடந்தார். பதற்றத்துடன் பையை வைத்துவிட்டு வந்த சிவசாமியிடம் ஈனஸ்வரத்தில் நடந்ததை ரீகேப்பாக விவரித்தார்.

  ‘அடேய் சிவசாமி, ‘ஆபரேஷன் மைக் டெஸ்ட்டிங்’ வெத்து வேட்டாயிடுச்சுடா. ஏதோ அபூர்வமா காதிலே ‘ங்கொய்’னு சத்தம் வரதுங்கிற கம்ப்ளெயின்ட்டோட வந்த என்னோட பழைய பேஷன்ட் வசனகர்த்தா கடையம் கிருஷ்ணதாஸை, அட்டூழியம் செய்யற ஒரு மனைவியைக் காரசாரமாகத் திட்டி, நாலு பக்க டயலாக் எழுதச் சொல்லி வாங்கி, அவரே அரேஞ்ச் பண்ணின பலகுரல் மன்னன் ஒருவரை, பிரபுசங்கர் குரலில் பேச வெச்சு, பதிவு பண்ணின கருவியை, சம்பவ தினத்தன்னிக்கு அவனோட சட்டைக்குள் பொருத்திப் பேச வெச்சேன். உதடை மாத்திரம் அசைச்சா போதுங்கிறதுதான் பிளான். அந்தப் பேச்சைக் கேட்டு சாந்தா கதி கலங்கிப்போய் உக்காந்துடுவான்னு பிளான் போட்டது.’

  ‘அப்படியா? அண்ணா. பிரமாதம். பின்னே ஏன் சக்ஸஸ் ஆகலே? சாந்தா உக்காரலே?’

  ‘எல்லாம் அந்த மகாப்பிரபுவாலே வந்த வினைதான். அந்த இன்ஸ்ட்ரூமென்ட்டை டயத்துக்கு ஆன் பண்ணனும். ஆனா பண்ணலே. அதனாலே, ஆடியோ இல்லாம பிரபுசங்கர் படு கண்றாவியா லிப் மூவ்மென்ட் மாத்திரம் குடுத்திண்டு இருந்தானாம். இதைப் புரிஞ்சிண்ட சாந்தா, அவனை கடப்பாரையால் ஓங்கி அடிக்க வந்தாளாம்’.

  ‘அப்புறம் நடந்ததை நான் சொல்றேன்’ என்கிற குரலைக் கேட்டு பஞ்சாமி திகைத்து நின்றார். வந்தது பிரபுசங்கர்.

  ‘பஞ்சாமி சார். எனக்கு இருக்கிற இந்த ஒரு ஜென்மம் போறும். ஆனா, மீதி பதிமூணு ஜென்மம் இருந்தா, நான் சிவாமிக்கு மீதி எல்லா ஜென்மங்களுக்கும் கடமைப்பட்டிருப்பேன். அது உங்களுக்குத் தெரியுமா?’

  ‘எது? உனக்கு பாக்கி பதிமூணு ஜென்மம் உண்டுங்கிறதா?’ என்று பஞ்சாமி கேட்டார்.

  ‘ச்சே! விளையாடாதீங்க டாக்டர். கடப்பாரையைத் தூக்கி அடிக்க வந்த சாந்தாவை, அங்கே எதிர்பாராம வந்த அந்தக் கருவியை வாடகைக்குக் கொடுத்த இந்திராணி, ‘ஸ்டாப்’னு குரல் கொடுத்து நிறுத்தினாள். ‘மேடம், ஐ வார்ன் யூ! பிரபுசங்கர் என்னோட காலேஜ்மேட். ஆட்டுதாடி வைக்காத பிரில்லியண்ட் மியூரலிஸ்ட். அவனை… சாரி - அவரை நான் இன்னிக்குக்கூட கல்யாணம் பண்ணிக்கத் தயார். நான் இல்லேன்னா என்னோட ட்வின் சிஸ்டர் சந்திராணி தயாரா இருக்கா. நாலு பேரை ஒத்தை ஆளா தூக்கி அடிக்கிற நாங்களே பிரபுசங்கர்கிட்டே அவ்வளவு மரியாதையும் பாசமும் வெச்சிருக்கும்போது, பல்லி மாதிரி ஒல்லியா இருக்கிற உனக்கு என்ன கேடு? அவரோட ரீச் என்ன தெரியுமா? ஜாக்கிரதை’ன்னு சொல்லி அதட்டினதிலே ஆடிப்போய் உக்காந்துட்டா. வரேன்.’

  பிரபுசங்கர் போனவுடன், ‘சிவசாமி, நீ இதிலே புகுந்து விளையாடி இருக்கேன்னு தெரியறது. சாந்தா இனிமே வாலாட்டமாட்டா. பிரபுசங்கர், ஜெமினி கணேஷ் கோத்திரம்போல இருக்கு. எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. ஷேக்ஸ்பியர் ஏதோ சொல்வாரே என்னடா அது?’

  ‘All is well that ends well, அண்ணா. அது அவரோட நாடகத்தின் பெயர் அண்ணா’.

  அதிலே 2927 வரிகள் இருக்கிறதா ஒரு ஆராய்ச்சியாளர் சொல்லி இருக்கார். ‘எண்ணித் துணிக கருமம்னு’ தன்னோட ஆராய்ச்சியை ஆரம்பிச்சிருப்பார் போலிருக்கு’.

  ‘போறுண்டா சிவசாமி. வரின்ன உடனே ஞாபகம் வருது. ஆகஸ்ட் 31-க்குள்ளே வருமான வரி ரிடர்ன் ஃபைல் பண்ணணுமே. இல்லேன்னா, வரியோட ஃபைனும் கட்டணுமாமே. அந்த ஜோலியைப் பாருடா’.

  *

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai